இந்தியாவின் நீளமான ரோப்வே!



இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் போக்குவரத்து நெருக்கடி அதிகம். அதனால் சிம்லாவிலிருந்து, இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு அதிக நேரம் தேவை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. 
போக்குவரத்து நெருக்கடியையும், அதிக பயண நேரத்தையும் தவிர்ப்பதற்காக புது ரோப்வேயைக் கொண்டு வரப்போகிறது இமாச்சலப் பிரதேசத்தின் அரசு. இதுதான் இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே. கேபிள் கார் மூலமாக இந்த ரோப்வேயில் மக்கள் பயணிக்கலாம்.

சிம்லாவுக்கும், பர்வனூ எனும் இடத்துக்கும் இடையில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரோப்வே நீண்டு செல்லும். இந்தப் பாதையில் பயணம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் சிம்லாவிலிருந்து பர்வனூவுக்குச் சென்றுவிட முடியும். தாரா தேவி (கோயல் மோட்டார்ஸ்), தாரா தேவி கோயில், சோஹி, வக்னஹாட், வக்னஹாட் ஐடி சிட்டி, கரோல் கா டிப்பா, சோலன், பரோக், டாக்சாய் கண்டோன்மெண்ட், ஜபாலி, பர்வனூ ஆகிய ஸ்டேஷன்கள் வழியாக ரோப்வே செல்கிறது.

இந்த ஸ்டேஷன்களில் எங்கு வேண்டுமானாலும் பயணிகள் இறங்கிக் கொள்ளலாம். எல்லா ஸ்டேஷன்களிலும் டிக்கெட் கிடைக்கும். ரோப்வே திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போதுதான் டிக்கெட்டின் விலையை நிர்ணயிக்கப் போகின்றனர். இந்தத் திட்டம் 2030ல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது சிம்லாவுக்கும் பர்வனூவுக்கும் இடையில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. வார இறுதியிலும், கோடை காலம், கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற சுற்றுலா காலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

அந்த நேரங்களில் ஆப்பிளைக் கொண்டு செல்லும் வண்டிகளுக்கு அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். தாமதமாகத்தான் ஆப்பிளை டெலிவரி செய்வார்கள். இதனால் ஆப்பிளை விளைவிப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும், விவசாயிகளின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த ரோப்வே வரப்போகிறது. அரசாங்கமும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தப் போகின்றனர்.

ரோப்வே பாதை செல்லும் இடத்தைத் தேர்வு செய்துவிட்டனர். இதைக் கட்டமைப்பதற்கான டெண்டரை விரைவில் வெளியிடப் போகின்றனர். பிப்ரவரியில் ரோப்வேவுக்கான வேலை ஆரம்பிக்கும். ரோப்வேயில் பயன்படுத்தப்படும் கார்களுக்கான டிசைன் வேலைகளும் நடந்து வருகிறது. 8 முதல் 10 பேர் பயணிக்கின்ற காரையும், அதிகபட்சமாக 25 பேர் பயணிக்கக்கூடிய காரையும் வடிவமைக்கப் போகின்றனர்.

‘‘ஒரு மணி நேரத்தில் 904 பயணிகள் ஒரு பாதையில் பயணிக்க முடியும். வருடத்துக்கு 25 லட்சம் பயணிகள் இந்த ரோப்வே வழியாக பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சுற்றுலாவாசிகளைக் கவர்கின்ற ஒரு விஷயமாகவும் இது இருக்கும். 2063ல் வருடத்துக்கு ஒரு கோடிப்பேர் இந்த ரோப்வேயில் பயணிப்பார்கள். ரோப்வே திட்டத்துக்கான செலவு 5,571 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது...’’ என்கிறார் ரோப்வேஸ் போக்குவரத்து முன்னேற்றக் கழகத்தின் இயக்குனரான அஜய் சர்மா.

த.சக்திவேல்