2030ல் ரூ.2 ஆயிரத்து 592 லட்சம் கோடி நிதி சார்ந்த சொத்துகள் பெண்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்!
ஆய்வு சொல்லும் ஆச்சரியத் தகவல்கள்
கடந்த வாரம் அமெரிக்காவின் 47வது பிரதமராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் பல மிரட்டலான அறிவிப்புகளால் உலகமே அதிர்ந்து கிடக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பெண்கள் சத்தமில்லாமல் Wealth Transfer எனும் சொத்து பரிமாற்றத்தை மறுவடிவமைப்பு செய்து வருவதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகளும் பத்திரிகைச் செய்திகளும். குறிப்பாக 2030ம் ஆண்டுக்குள் பேபி பூமர்கள் (1946ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள்) வைத்திருக்கும் 30 டிரில்லியன் டாலர் நிதி சார்ந்த சொத்துகளின் பெரும்பகுதியை பெண்கள் கையாள்வார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஒரு டிரில்லியன் என்பது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக, 30 லட்சம் கோடி டாலர் என்றால் 2 ஆயிரத்து 592 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
இவ்வளவு தொகை மதிப்புள்ள சொத்துகளை பெண்கள் கையாள்வார்கள் என்பது ஆய்வின் வழியே தெரிய வந்திருக்கிறது. ‘இது இந்த நூற்றாண்டின் அதிகார மாற்றம் மட்டுமல்ல. விரைவில் நாம் ஒரு நிதிப் புரட்சியை காணப் போகிறோம்’ என ஆச்சரியம் பொங்கக் குறிப்பிடுகின்றனர் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள். இதற்கு வாழ்க்கையின் நடுப்பகுதியிலோ அல்லது வாழ்க்கையின் பிற்பகுதியிலோ ஏற்படும் விவாகரத்தும் ஒரு காரணியாக உள்ளது. சரி, அதென்ன Wealth Transfer?
இது சமகால தலைமுறையினருக்கு கிடைக்கவிருக்கும் பெரும் சொத்து. அதாவது சைலண்ட் ஜெனரேஷன்காரர்களும் (1928ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள்), பேபி பூமர்களும் தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த சொத்துகளை எல்லாம், ஜென் எக்ஸ் (1965ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள்), மில்லினியல்கள் (1981ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள்), ஜென் இசட் (1997ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு க்குள் பிறந்தவர்கள்) ஆகிய தலைமுறையினருக்கு பரிமாற்றம் செய்வது.
இன்னும் சொல்வதென்றால் தாத்தா, பூட்டன்கள் வழியே வரும் சொத்து. இதை ஏன் பெண்கள் கையாள்வார்கள் என்றால் அமெரிக்காவில் ஆண்களைவிட பெண்களுக்கு வாழ்நாள் அதிகம் என்பதுதான்.
இதனால், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் என இருவரிடமிருந்தும் அவர்கள் சொத்துகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதாவது கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ அதன்வழியாகவும், பெற்றோரிடமிருந்தும் பெண்களுக்கு சொத்துகள் வரும். இதனைத்தான் 30 டிரில்லியன் டாலர் எனக் கணக்கிட்டுள்ளனர். இதில் ஜென் எக்ஸ் மற்றும் மில்லினியல் காலப் பெண்கள் தங்கள் பாட்டி, அம்மாக்களைவிட சொத்துகளை வெவ்வேறு விதமாக கையாள்வதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் நிதி சார்ந்த முடிவுகளில் தீவிரம் காட்டுவதாகவும், சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து சொத்துக்களை இன்னும் பெருக்குவதாகவும் குறிப்பிடுகிறது ஓர் ஆய்வு.
இதுஒருபுறம் இருக்க பேபி பூமர் பெண்களும் நிதி சார்ந்த விஷயங்களை தற்போது சிறப்பாக கையாள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருகாலத்தில் கணவரே உலகம், அவரே தங்கள் சொத்து என முப்பது ஆண்டுகாலம் வாழ்க்கையைப் பகிர்ந்து, இப்போது 65 வயதில் நிற்கும் இந்த பேபி பூமர் பெண்கள், கணவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் நிதியை சிறப்பாகக் கையாள்கின்றனர்.
குறிப்பாக இவர்கள் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, தங்களின் நீண்டகால ஆரோக்கிய பராமரிப்புக்கு அதிகமாக ஒதுக்குகின்றனர். பின்னர், ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து பணத்தைப் பெருக்கி சமயோசித புத்தியுடன் தங்கள் வாழ்நாளை பணக் கஷ்டம் இல்லாமல் கழிக்கின்றனர்.
இதுகுறித்து மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் நிறுவனமான மெக்கென்சி அண்ட் கோ நடத்திய சர்வேயில், அறுபது வயதினைத் தாண்டிய அமெரிக்கப் பெண்கள் கடந்த ஆண்டு மட்டும் 8 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிதி சார்ந்த சொத்துக்களைக் கையாள்வதாகத் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 2018ம் ஆண்டிற்குப் பிறகு பெண்களின் சொத்துக்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மேரி ஷிங்கே என்ற பெண்மணி, அவரின் 32 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் கணவர்தான் முதலீடுகளைப் பார்த்துக்கொண்டார். கணவர் 2019ம் ஆண்டு இறந்தபிறகு இவர் அதனை கையாள ஆரம்பித்திருக்கிறார்.
‘கணவர் இறந்த துக்கம், வேதனை எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கும் அதேவேளையில் நிதிப் பிரச்னைகளும் நம் தலைக்குமேல் கத்தி போல தொங்கும். அதையும் அந்நேரத்தில் நன்கு கவனித்து கையாள வேண்டும்’ என்கிறார் ஷிங்கே.அவரின் கணவர் இறந்தவுடன் முதலில் அவர் செய்தது நிதி ஆலோசகரை மாற்றியதுதான். அவரின் திட்டத்திற்கு ஏற்றபடி அவரின் விருப்பத்தை அந்த புது நிதி ஆலோசகரிடம் தெரிவித்து தன்னுடைய சொத்துக்களை தனியாக மேனேஜ் செய்திருக்கிறார்.
இவர் மட்டுமல்ல. 70 சதவீத அமெரிக்கப் பெண்கள் கணவர் இறந்தபிறகு ஆலோசகரை மாற்றியிருப்பதாக டிரான்ஸ்அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது. இதுமட்டுமல்ல. கணவர் இறந்தபிறகு மனைவிமார்தான் நிதியை கையாளும் பொறுப்பிற்கு வருகின்றனர். இதனால் குடும்ப உறவுகள் சீர்குலைவதாக ஆய்வுகள் சொல்கின்றன.மிச்செல் டெய்லர் என்ற பெண்மணி, தன்னுடைய கணவர் இறந்தபிறகு அவரின் அனைத்து சொத்துக்களும் தனக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஆனால், குழந்தைகள் அவருடைய சொத்திலிருந்து பணத்தை பிரித்துத்தர கேட்டுள்ளனர். அவருக்கும் அதில் விருப்பம்தான். ஆனால், இதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் அவரின் குழந்தைகள் அவருக்கு எதிராக மாறிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.‘27 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து இருந்தோம். சிறிது காலதாமதத்திற்குள் உறவையே வெட்டிவிட்டனர்’ என வேதனையுடன் தெரிவிக்கிறார் 77 வயதான மிச்செல் டெய்லர்.
இந்நிலையில் அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 40 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் வயதான விதவைப் பெண்களுக்குச் செல்ல இருக்கிறது என மார்க்கெட் ரிசர்ச் நிறுவனமான செருல்லி தெரிவித்துள்ளது. ஆக, ஒருபுறம் டிரம்ப் அமெரிக்காவை உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாற்றுவேன் என சூளுரைக்கும் வேளையில், மறுபுறம் சொத்துப் பரிமாற்றத்தின் மூலம் சக்தி படைத்த பெண்மணிகளாக அமெரிக்கப் பெண்கள் மாறி வருகின்றனர்.
பேராச்சி கண்ணன்
|