தமிழ்நாட்டை குறிப்பிடாமல் இனி உலக இரும்பு வரலாற்றை எழுத முடியாது!
தமிழ் நிலப்பரப்பில் இருந்தே 5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலம் தொடங்கியது…
தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் இரும்பின் தொன்மை...
‘‘தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகமாகி இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை இந்நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்...’’ கடந்த வாரம் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் துணைகொண்டு நிறுவப்பட்டுள்ள இரும்புக் காலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடி அகழாய்வு தமிழர்களின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றி வந்தன. இப்போது மேலும் முத்தாய்ப்பாக தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, சேலம் மாவட்டம் மாங்காடு ஆகிய பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கால ஈமக்குழிகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் இரும்புக் காலத்தை நமக்கு உணர்த்தி உள்ளன.
குறிப்பாக சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் வழியே தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அண்மைக்காலச் சான்றுகளே ‘இரும்பின் தொன்மை’ நூலாக வடிவம் பெற்றுள்ளது.இந்நூலை தொல்லியல் துறை கல்வியியல் மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கா.ராஜனும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் முனைவர் இரா.சிவானந்தமும் இணைந்து எழுதியுள்ளனர். இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பது மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் செம்பு மற்றும் வெண்கலக் கருவிகளுக்கு மாற்றாக இரும்புக்கருவிகள் மலிவானவையாகவும் நீடித்த தன்மை கொண்டதாகவும் அதிக திறன் கொண்டவையாகவும் கருதப்படுகின்றன. அதுமட்டுமல்ல. இரும்பின் பயன்பாடுதான் வேளாண் உற்பத்தியை விரைவுபடுத்திச் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டு பல குடிவழிச் சமூகம் உருவானது. அதனுடன் பல்வேறு அடிப்படை மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டன.இதனாலேயே தொல்லியலாளர்களும் தொல் - உலோகவியலாளர்களும் உலகில் வெவ்வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் இரும்புத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இதில் இந்தியாவில் இரும்பின் அறிமுகம் பற்றிய கல்விசார் விவாதம் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பது பல்வேறு அறிஞர்களின் தளராத முயற்சியின் காரணமாக கி.மு.1100ல் இருந்து கி.மு.2000 ஆண்டாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலக்கணக்கீடு கி.மு.1604 முதல் கி.மு.1416 வரை இருக்கலாம் எனத் தெரிய வந்தது.
முதன்முறையாக காலத்தால் முந்தைய காலக்கணிப்பு கிடைத்தது, தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மை மீதான ஆர்வத்தைத் தூண்டியது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் இரும்பு எப்போது முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்னும் தேடல் தொடர்ந்தது. அந்தத் தொடர் தேடலில்தான் இப்போது சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கி.மு.3350 ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநரும், ‘இரும்பின் தொன்மை’ நூலாசிரியர்களில் ஒருவருமான முனைவர் இரா.சிவானந்தத்திடம் பேசினோம்.‘‘தற்போது கிடைத்திருக்கும் இரும்புப் பொருட்களும் சிந்துவெளி காலக்கட்டமும் சமகாலத்தவைதான். இந்தியாவில் ஆய்வாளர்கள் எல்லோருமே இரும்புக் காலம் குறைவு என்றே சொல்லி வந்தனர்.சிந்துவெளியில் இரும்புப் பயன்பாடு கிடையாது. அவர்கள் எப்போது இரும்புப் பயன்பாட்டைத் தொடங்கினார்களோ அப்போதுதான் இந்தியாவில் இரும்புக் காலம் வந்தது என்ற கொள்கையும் இருந்தது.
வடஇந்தியப் பகுதியில் பயன்படுத்தவில்லை என்பதால் செம்புக்காலம், வெண்கலக் காலம் முடிந்ததும் இரும்புக் காலம் வந்தது என்ற கருதுகோள்கள் இருந்தன. அதனை நம்முடைய ஆய்வுகள் மாற்றி இருக்கின்றன...’’ என்கிறவர், உற்சாகமாகத் தொடர்ந்தார்.
‘‘இரும்பின் தொன்மை குறித்து வடஇந்தியாவிலும் சரி, தென்னிந்தியாவிலும் சரி ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்தபோது இரும்புக்கால இடங்களைக் கணக்கிட்டு காலத்தை முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டே வந்தார்கள். கி.மு.1300, கி.மு.1500, கி.மு.1800 எனப் பின்னோக்கி எடுத்துக் கொண்டே போனார்கள். கர்நாடகா பிரம்மகிரி, தெலுங்கானா கச்சபவுலி இடங்களில் கி.மு.2000, கி.மு.2200 எனக் காலக்கணக்
கீடுகள் வந்தன.
தமிழ்நாட்டிலும் இதுபோல் முன்னெடுக்க வேண்டும் என ஆய்வுகளுக்கு உட்படுத்தினோம்.சேலம் மாவட்டம் மாங்காடு பகுதியில் செய்யப்பட்ட அகழாய்வின்போது கி.மு.1400, கி.மு.1500, கி.மு.1600 எனக் கிடைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகளை வெளியிட்டோம். அது கி.மு.2200 எனத் தெரிய வந்தது.
தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் செய்தபோது அதன் காலம் கி.மு.2500 ஆக இருந்தது. அதாவது 4500 ஆண்டுகள் முற்பட்டதாக இருந்தது. பின்னர் அதே பொருநை ஆற்றங்கரையோரம் உள்ள சிவகளையில் செய்யப்பட்டது. நாம் ஆய்வகங்களுக்கு அனுப்பின 27 மாதிரிகளில் 11 மாதிரிகள் சிவகளையில் எடுக்கப்பட்டவைதான்.
அப்படியாக இதன் காலம் கி.மு.1155ல் இருந்து கி.மு.3350 வரை கிடைத்தது. இதன்பின்னர் இரும்புக் காலத்தை மற்ற இடங்களுடன் நாம் ஒப்பீடு செய்து பார்க்கிறோம். பல்வேறு தேசிய, பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களின் காலக்கணக்கீடுகளையும் வாங்குகிறோம். அந்தக் காலக்கணக்கீடுகளை ஒப்பீடு செய்து, இரும்புத் தொழில்நுட்பத்தில் இந்திய அளவில் அகழாய்வு மேற்கொள்கிறவர்களிடம் இந்த ஆய்வு அறிக்கையை அனுப்பி அவர்கள் ஆய்வுகளுடனும் ஒப்பீடு செய்தோம். பின்னர் அவர்களே இது காலத்தால் தொன்மையானதுதான் என்றனர். இதன்படி கி.மு.3350க்கு முந்தைய இரும்புக் கருவிகளாகக் கிடைத்துள்ளதை நிரூபித்துள்ளோம். அதாவது கி.மு.5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு தமிழ் நிலப்பரப்பில் இருந்துள்ளது.
இப்போது நாம் பானைகளையும் அதில் உள்ள கரியையும் கார்பன் டேட்டிங் செய்துள்ளோம். இரும்பு கனிமப்பொருளை கார்பன் டேட்டிங் செய்யமுடியாது. ஆனால், பானை உள்ளே இரும்பு இருப்பதால் பானை செய்த காலத்தில்தான் இரும்பும் செய்திருக்க முடியும்.பானை நூறு அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்கலாம் என்று வைத்துக்கொண்டால் கூட சமகாலத்தில் இரும்பு இருக்கிறது.
அந்த முன்னோர் அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அவர் இறந்தபிறகு அதனை உள்ளே வைத்திருக்கலாம். ஒன்று பானை செய்த சமகாலக்கட்டத்தில் இருக்கலாம். அல்லது அதற்குமுன் இரும்பு செய்யப்பட்டிருக்கலாம். Absolute dating, Relative dating என இரண்டு டேட்டிங் இருக்கின்றன. இதன்வழியாக கிடைக்கப்பெற்றதில் கி.மு.3350 எனச் சொல்கிறோம். இதையும் இறுதியாகச் சொல்லவில்லை. தொடர்ந்து அகழாய்வுகள் செய்கிறோம். இப்போது கிடைத்த மாதிரிகளை பொதுவெளியில் வைக்கிறோம். அத்துடன் மற்ற இந்திய நிலப்பரப்பில் இருக்கிற இடங்களில் கிடைக்கப் பெற்றதுடன் ஒப்பீடு செய்து எல்லாவற்றிலும் முற்பட்டதாக இருக்கிறது என்கிறோம்.
அதுமட்டுமல்ல. அப்போதே இரும்பினை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது. நம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இரும்புக் காலத் தளங்களில் இரும்பு உலைகள் இருக்கின்றன. சிவகளை அருகே பேட்மாநகரத்தில் இரும்பு உருக்குவதற்கான தடயங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
இரும்பை தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். இதற்கு உருக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்தத் தாதுவை கண்டறிந்து அதை உருக்கி ஒரு உலோகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது இரும்பு எனத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை அது ஓர் உலோகம். தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வின்போதும் பல்வேறு வடிவங்களில் உலைகள் கிடைத்துள்ளன. பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அதன்வழியாக வெப்பப்படுத்தி இரும்பினை உருக்கி இருக்கிறார்கள்.
இதற்காக களிமண்ணாலான உலைகளை உருவாக்கி இருக்கின்றனர். மரக்கரியை இட்டு வெப்பப்படுத்தி அதை துருத்தியுடன் இணைத்து 1300 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கி இரும்பை உருக்கி உள்ளனர். செம்பு உள்ளிட்ட மற்ற உலோகங்களுக்கு இவ்வளவு வெப்பம் தேவையில்லை.
ஆனால், இரும்புக்கு அதிக வெப்பம் தேவை. அப்போ, எந்தளவுக்கு கரியைப் போட வேண்டும், இரும்பை பலப்படுத்த வேண்டும் என்கிற தொழில்நுட்பம் எல்லாம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். அதை எஃகு உலோகமாக மாற்ற சில கனிமங்களைச் சேர்க்க வேண்டும். அப்போதே தங்களுக்குத் தேவையான கருவியாக மாற்ற முடியும். இவை அனைத்தும் அவர்கள் அறிந்துள்ளனர்.
இப்படி கிடைத்த இரும்புப் பொருட்களின் காலக்கட்டத்தை நாம் இந்திய அளவில் பொருத்திப் பார்க்கும்போது அது சிந்துவெளியுடன் போய் இணைகிறது. சிந்துவெளியை, ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலக்கட்டம், ஹரப்பா நாகரிகக் காலக்கட்டம், ஹரப்பா நாகரித்திற்குப் பிந்தைய காலக்கட்டம் என மூன்றாகப் பிரிக்கிறோம்.
இதிலும் ஹரப்பா நாகரிகக் காலக்கட்டம் மட்டும் ஆரம்பகால ஹரப்பா, முதிர்ந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இதில் ஆரம்பகால ஹரப்பா என்பது கி.மு.3350 ஆண்டுகள் வருகிறது. பண்பட்ட முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் என்பது கி.மு.2500 டூ கி.மு.1800 ஆண்டுகள் வரை வரும். நாம் இதை பொருத்திப் பார்த்தபோது ஆரம்பகால ஹரப்பா நாகரிகமான கி.மு.3350 ஆண்டுகளுடன் போய் இணைகிறது. அவர்கள் அங்கே செம்பு பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் இங்கே இரும்பு கிடைத்திருக்கிறது. அங்கே இரும்பு கிடைக்கவில்லை. காரணம், அது பாலைவனப் பகுதி. பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், ராஜஸ்தான் பகுதிகள் எல்லாமே பாலைவனப்பகுதிகள். அங்கே செம்பு கிடைக்கிறது. நம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி என மலைத்தொடர்கள் இருக்கின்றன. இங்கே பல்வேறு கனிமங்கள் கிடைக்கின்றன.
சேலத்தில் ஏன் இரும்பு உருக்காலைகள் அமைக்கிறோம் என்றால் அந்த நிலப்பரப்பில் இரும்பு கிடைக்கிறது என்பதால்தான். தமிழ்நாட்டில் எல்லாவிதமான கனிமங்களும் இயற்கையாகவே கிடைக்கின்றன. அதனால், இதை நாம் நிலவியல் அமைப்பாக பார்க்க வேண்டும்...’’ என்கிறவரிடம் உலக அளவில் இரும்புக் காலம் எப்படியானது என்றோம். ‘‘உலக அளவில் இரும்பு என்பது கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே கிடைக்கின்றது. ஆனால், அவை விண்கல் இரும்பு.
மேலிருந்து வந்த விண்கல்லினால் உருவானது. அவை இரும்பாகவே இருக்கின்றன. அதனை தட்டி உடைத்து அணிகலன்களாக மாற்றுகின்றனர்.1911ம் ஆண்டு எகிப்தின் அல்-கெர்செ என்ற இடத்தில் இருந்த மம்மியினுள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போது அதில் விண்கல் இரும்பினால் செய்யப்பட்ட ஒன்பது மணிகளும் கண்டறியப்பட்டன. இவையே, உலகில் அறியப்பட்ட தொன்மையான இரும்பினாலானபொருட்கள் எனக் கருதப்படுகிறது.
தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களுடன் இரும்பு மணிகளையும் வைத்திருக்கின்றனர் என்றால் அதையும் முக்கியமான ஆபரணமாகப் பார்த்துள்ளனர் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
அங்கே கிடைத்தது விண்கல் இரும்பு. இது இரும்புத் தாதுவிலிருந்து உருக்கி செய்யப்பட்டதல்ல. இதனை அவர்கள் நிரூபித்தும் உள்ளனர். உலக அளவில் இரும்பு உருக்கி எடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் காலக்கட்டம் கி.மு.1800. அதையெல்லாம் ஒப்பீடு செய்கிறபோது நம்முடையது காலத்தால் முற்பட்டது.
அதனால் இப்போது கிடைத்துள்ளதை பிரகடனப்படுத்துகிறோம். இதனால் பல்வேறு ஆய்வாளர்கள் எதிர்வினை ஆற்றுவார்கள். அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். நம்முடைய கார்பன் டேட்டிங்கை வைத்துக்கொண்டுதான் வெளிநாடுகளில் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.
சிலர் செம்புக் காலத்திற்குப் பிறகுதான் இரும்புக் காலம் வந்திருக்க முடியும் எனச் சொல்கின்றனர். காலம் வரிசையாக வரவேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தந்தப் பகுதிகளில் அந்தக் காலகட்டத்தில் என்ன கனிமம் கிடைத்ததோ அதை பயன்படுத்தியுள்ளனர்.
வடக்கே அமைந்துள்ள பண்பாட்டு இடங்கள் செப்புக்காலத்தில் இருந்தபோது, விந்தியத்திற்கு தெற்கே வணிகத்திற்குப் பயன்படும் அளவிற்கு செப்புத்தாது குறைவாகக் கிடைத்த காரணத்தால் தென்னிந்தியா இரும்புக் காலம் உள்ளே நுழைந்திருக்கலாம்.எனவே, வடஇந்தியாவின் செப்புக்காலமும் தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சமகாலத்தவை எனலாம்.
எதிர்கால அகழாய்வுகள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகள் இந்தியாவில் இரும்பு அறிமுகமான காலத்தை மேலும் தெளிவுபடுத்தலாம் அல்லது வலுப்படுத்தலாம்.ஆனால், இனி உலக இரும்பு வரலாற்றை எழுத வேண்டும் என்றால் தமிழ்நாட்டுக் காலத்தை குறிப்பிடாமல் எழுத முடியாது...’’ அழுத்தமாகச் சொல்கிறார் முனைவர் இரா.சிவானந்தம்.
பேராச்சி கண்ணன்
|