குழந்தை நட்சத்திரம்...பாடகி...அம்மா கேரக்டர்...



மீனா, ஷாலினி போன்றவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி நடிகைகளாகவும் சாதனை படைத்தவர்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பாடகி கவிதா கோபி.
இவர் புகழ் பெற்ற நல்லெண்ணெய், சொட்டு நீலம் போன்ற விளம்பரங்களில் நடித்தவர். ‘வதன வதனா...’ (தாரை தப்பட்டை), ‘சீமராஜா’, ‘பைரவா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘அரண்மனை 4’ உட்பட ஏராளமான படங்களில் பின்னணி பாடியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்தவர். ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்பதில் எனக்கு சந்தோஷம் என்று உற்சாகமாய் பேச ஆரம்பித்தார்.
யார் இந்த கவிதா கோபி?நான் சென்னை பொண்ணுதாங்க. ஃபேமிலில சிலர் ஃபீல்டுல இருந்தாங்க. செல்லம் சீனிவாசன் என்னுடைய பாட்டி. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா ‘ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி’, ‘தூக்கு தூக்கி’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அம்மா ஷீலா கோபி  தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஒய்.ஜி.மகேந்திரன், கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் என பலருடைய நாடகங்களில் நடித்துள்ளார். ‘ஆல் இண்டியா ரேடியோ’வுல ஏ கிரேட் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தவர். ‘வணங்கான்’ படத்துல கன்னியாஸ்திரி வேடத்துல நடிச்சது என்னுடைய அம்மாதான்.சின்ன வயசுலேயே ஆர்க்கெஸ்ட்ராவுல பாட ஆரம்பிச்சுட்டேன். 
எனக்கு மியூசிக் பிடிக்கும் என்பதால் மியூசிக் படிச்சேன். முதன் முதலா பிரபல நல்லெண்ணெய் விளம்பரத்துக்காக குழந்தை நட்சத்திரமா கேமரா முன்னாடி நின்றேன். அந்த எண்ணெய் நிறுவன விளம்பரத்துல க்யூட் பேபி போட்டோ இருக்கும். அது வேற யாரும் இல்ல. நான்தான் அது.

பின்னணி பாடகியாக எப்போது அறிமுகமானீர்கள்?

சபேஷ் முரளி சார் இசையில் ‘சுயேட்சை எம்எல்ஏ’ படத்துக்காக முதன் முதலில் பாடினேன். தொடர்ந்து தேவா சார் மியூசிக்ல ‘டம்மி டப்பாஸ்’ பாடினேன். இளையராஜா சார் இசையில் பாடிய ‘தாரை தப்பட்டை’  பின்னணி பாடகியாக பிரேக் கொடுத்துச்சு. அதிலிருந்து முழு நேரப் பாடகியாக ஏராளமான படங்களுக்கு பாடி வருகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான், அனிரூத் தவிர, ஜி.வி.பிரகாஷ், சாம் சி.எஸ்., ஹிப்ஹாப் தமிழா, காந்த் தேவா, விஜய் ஆண்டனி, தாஜ் நூர், ஜேக்ஸ் பிஜாய் உட்பட பலருடைய இசையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருப்பேன்.

‘வணங்கான்’ல நடிகையாக அறிமுகமாவோம்னு எதிர்பார்த்தீர்களா?

அது எதிர்பார்க்காத வாய்ப்பு. பாலா சார் ‘நாச்சியார்’ படத்துல ஜெயில் சிங்கரா வந்து போகும் சின்ன  வாய்ப்பு கொடுத்தார். ‘தாரை தப்பட்டை’யில் மூணு பாடல்கள் பாடினேன். அதுல ‘ஐய்யோ ஐய்த்தான்’னு டயலாக் பகுதிக்கு குரல் கொடுத்தேன். எனக்கு நடிக்கவும் தெரியும்னு பாலா சார் அப்போ கவனிச்சிருக்கலாம்ன்னு நினைக்
கிறேன்.

‘வணங்கான்’ பொறுத்தவரை பாட்டு பாடிறியா, நடிக்கிறியான்னு கேட்டார் பாலா சார். ‘இரண்டு வாய்ப்பு கொடுத்தாலும் சந்தோஷம் சார்’னு சொன்னேன்.அதன்படி பாடல் வாய்ப்பும் கொடுத்தார். ஹீரோ மாறியதால்அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அந்தப் பாடல் இடம்பெறணும்னு பாலா சார் அதிகம் ஆசைப்பட்டார். ஆனால் கதையைவிட்டு விலகியிருந்ததால வைக்க முடியவில்லை.

பாலா டைரக்‌ஷன்ல நடிச்ச அனுபவம் எப்படி?

பாலா சார் கோபக்காரர் என்ற பிம்பம் பொதுவெளியில் எப்படி வந்துச்சுன்னு தெரியலை. அவர் கோபக்காரர் கிடையாது. ஆர்ட்டிஸ்ட் தங்கள் வேலையை சரியா செய்துவிட்டால் அவரிடமிருந்து எந்த தொந்தரவும் இருக்காது. ஆர்ட்டிஸ்ட்டுக்கு போதுமானளவுக்கு சுதந்திரம் கொடுப்பார். எக்ஸ்பிரஷன் மிகையாகவோ, குறைவாகவோ இருக்கும்போது சில திருத்தங்கள் மட்டும் சொல்வார். 

அப்படி எனக்கு அழற காட்சியில் மீட்டர் கரெக்‌ஷன் மட்டும் பண்ணினார்.முதல் காட்சி முடிந்ததும் பாலா சாரிடம் ‘என்ன சார், எதுவுமே சொல்லவில்லை’ என்று கேட்டேன். ‘இனிமே உன்னை நடிகைன்னு சொல்லிக்கலாம்’னு சொன்னார். அதுவே எனக்கு பல விருதுகள் வாங்கிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

மற்றபடி இப்படி நடிக்கணும்ன்னு நடிச்சு காட்டமாட்டார். அதுமட்டுமல்ல, படத்துல இசைக்கு முக்கியத்துவம் இருந்ததால ஆரம்பத்திலிருந்து டீமோடு டிராவல் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது.

கதை நல்லா தெரியும் என்பதால் கேரக்டருக்கு தேவையான எமோஷனலை தர முடிஞ்சது. பாலா சாரும் அந்த காரணத்தால் கொஞ்சம் கூடுதல் சுதந்திரம் வழங்கியிருக்கலாம்.
அந்த வகையில் ‘வணங்கான்’ படத்துக்காக ‘பி’ ஸ்டுடியோவின் அங்கமாக டிராவல் பண்ணியதில் ஃபிலிம் ஸ்கூலில் படிச்சா கிடைக்கும் அனுபவம் கிடைச்சது.

அம்மா கேரக்டரில் நடித்த அனுபவம்?

பாலா சார் படத்துல எந்த கேரக்டர் பண்ணினாலும் அந்த கேரக்டருக்கான நியாயம் இருக்கும். அப்படி படத்தில் அம்மா கேரக்டருக்கு பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்துச்சு. ஸ்கிரீன் ஸ்பேஸ் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்துச்சு. ஆரம்பத்துல சின்ன ரோல் பண்ணியிருக்கிறோம் என்ற மனநிலை இருந்துச்சு. படம் பார்க்கும்போது எனக்கான முக்கியத்துவம் அதிகம் இருந்ததைப் பார்த்து வியந்துபோனேன்.

அருண் விஜய், ரோஷிணி, சண்முகராஜன், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட அனைவரும் எளிமையாகப் பழகுவார்கள். சீனியர்களான அவர்கள் எந்த இடத்திலும் எனக்கு பயம் காட்டாமல் எனக்காக ஸ்பேஸ் கொடுத்தார்கள். சினிமாவுக்கு நான் புதுசு என்ற பயம் வராதளவுக்கு அட்மாஸ்ஃபியரை கூலாக வைத்துக்கொண்டார்கள்.   

யாரெல்லாம் பாராட்டினார்கள்?

பார்த்திபன் சார் விஷ் பண்ணியதோடு வாய்ப்பு தருவதாகவும் சொன்னார். விஜய் ஆண்டனி சார் அடுத்த படத்திலேயே வாய்ப்பு தருவதாக சொல்லியுள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாரிடம், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன் உட்பட  பல இயக்குநர்கள் என்னைப்பற்றி விசாரிச்சதாக கேள்விப்படேன்.

தொடர்ந்து நடிப்பீர்களா?

எனக்கு மனோரமா ஆச்சியைப் பிடிக்கும். காமெடி, சோகம், வில்லத்தனம் என வெரைட்டியான வேடங்கள் பண்ணணும்.

இளையராஜா இசையில் பாடிய அனுபவம்...?

‘தாரை தப்பட்டை’ படத்துக்காக பாலா சாரிடம் ஆடிஷன் பண்ணினேன். அதைப்பார்த்துட்டு ராஜா சாரிடம் அழைத்துச் சென்றார். அந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது.
‘தக தக...’ கே.பி.சுந்தராம்பாள் அம்மாவின் பாடலை பாடிக் காட்டினேன். ராஜா சாரும், பாலா சாரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள். அதுவே செலக்‌ஷன் ஆகிவிட்டேன் என்று சிக்னல் கொடுத்துச்சு.

ராஜா சாருக்கு பாடும்போது எனக்கு கடுமையான காய்ச்சல். அது பயத்தால் வந்த காய்ச்சல் கிடையாது. அதற்கு முன் தேவா சார் இசையில் உச்ச ஸ்தாயில ஒரு பாடல் பாடினேன்.
ஆடிஷன் கேள்விப்பட்டதும் காய்ச்சல் எப்படி பறந்துபோச்சுன்னு தெரியல. நல்லபடியா ரிக்கார்டிங் முடித்தேன். ராஜா சாருக்கு பாடியதை வாழ்நாள் அதிசயமாகப் பார்க்கிறேன்.
ராஜா சாரைப் பொறுத்தவரை முழு நாள் ஸ்டுடியோவில் இருப்போம். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் டேக் ஓகே ஆவதோடு, பாடலும் ஹிட்டாகும்.

எந்த மாதிரி பாட அதிகம் வாய்ப்பு வருகிறது?

‘வதன வதனா’ பாடிய பிறகு நாட்டுப்புறப் பாடல்களுக்கு அதிகம் கூப்பிடுறாங்க. பா.இரஞ்சித் படத்தில் வெஸ்டர்ன் ஸ்டைலில் பாடினேன். விளம்பரங்களில் நிறைய ஜானர்ல பாடியிருக்கிறேன். கீரவாணி சார் மியூசிக்ல ‘அகிலாண்ட கோடீஸ்வரி’ படத்துல கிளாசிக்கல் பாடினேன்.

பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

அது அட்வான்டேஜ். நடிக்க வாய்ப்பு வரலைன்னா பாடல் கிடைக்கும். பாடகியாக இருப்பதால் உணர்வுகளை பெட்டராக கொடுக்க முடியும்.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்