சிறுகதை - போட்டோ எடுக்காதே ப்ளீஸ்!



‘‘மாலினி! மாலினி! இங்க வா! இந்த சட்னிய கொஞ்சம் அரைச்சு குடு. அவங்கல்லாம் டிபனுக்கு வர நேரமாச்சு. நானும் அப்பாவும் அவங்க கூட கிளம்பணும். சொல்றது காதுல விழுதா இல்லையா?’’ என்றவாறே ஹாலுக்கு வந்த சித்ராவின் கோபம் பன்மடங்காகியது.ஊஞ்சலில் கண்மூடியவாறு மடியில் கவிழ்த்து வைத்த புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் மகளை கண்டவுடன் அவளின் கோபம் பறந்தோடியது.

மொபைலில் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்...’ என்று னிவாஸ் குரல் தேனிலிட்ட பலாச்சுளையாக காதில் இனித்தது.‘‘எத்தன வாட்டி சொல்லிருக்கேன் உனக்கு? ஒன்னு புஸ்தகம் படி, இல்லனா பாட்டு கேளு. ஒரே நேரத்தில் இப்படி ரெட்டை சவாரி செய்யாதே. கொஞ்ச நேரத்தில் சதாசிவம் மாமா வந்துடுவாரு. ஒரு நாளைக்கு எத்தன வாட்டிதான் இந்த பாட்டை கேப்பாளோ? பாட்டை எழுதுனவனும் பாடினவனும் கூட இந்நேரம் மறந்துருப்பாங்க...’’ என்றபடி சித்ரா, டீப்பாயின் மேல் கலைந்திருந்த நாளிதழ்களை ஒழுங்குபடுத்தினாள்.

துரைராசு - சித்ரா தம்பதியினரின் ஒரே செல்ல மகள் மாலினி. முதுநிலை தமிழ் இலக்கியம் படிக்கிறாள். துரைராசுவின் தொழில் கூட்டாளியும் நெருங்கிய நண்பனுமான சதாசிவத்தின் மகனுக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம்.முதல் பத்திரிகையை குலதெய்வ கோயிலில் வைத்துவிட்டு, பக்கத்திலிருக்கும் தாய்மாமனுக்கும் பத்திரிகை வைப்பது என முடிவு செய்திருந்தார்கள். அதற்காக இரண்டு தம்பதியரும் சேர்ந்து செல்வதாக முடிவாகி இருந்தது.

துரைராசுவும் சதாசிவமும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். ஒன்றாகப் படித்து ஒன்றாக சிறு அளவில் வணிகம் செய்ய ஆரம்பித்து தங்கள் கடின உழைப்பால் இன்று நகரின் முக்கிய நபர்கள்.
பூஜையறையில் இருந்து வெளியே வந்த துரைராசு, ‘‘அம்மா மாலினி! தினம் ஒரு தகவல் எழுதலையா இன்னிக்கு?’’ என்றவாறே அந்தக் கரும்பலகையைப் பார்த்தார். மாலினி பதில் சொல்வதற்குள் வாசலில் கார் சத்தம் கேட்டது.சதாசிவமும் அவர் மனைவி சுமதியும் சிரித்தபடி காரிலிருந்து இறங்கினர்.‘‘வாங்க அத்தை! வாங்க மாமா!’’ என்று உற்சாகமாக மாலினி வாசலுக்கே வந்து வரவேற்றாள்.

டிரைவர் சீட்டிலிருந்து இறங்கிய அவர்கள் மகன் அரவிந்தனைப் பார்த்தவுடன், “வாங்க! நல்லா இருக்கீங்களா? எப்ப ஊர்லருந்து வந்தீங்க?” என்று கேட்டு விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குள் திரும்பினாள்.

அரவிந்தனும் ஒருவித இறுக்கத்துடனும் அசெளகரியத்துடனும் வீட்டினுள் நுழைந்தான். எம்பிஏ முடித்த அரவிந்தன் ஒரு பன்னாட்டு வங்கியில் மனித வளத் துறை மேலாளராக இருக்கிறான். பண்பான மற்றும் நாகரீகமானவன். மனித வளத்துறையில் வேலை பார்ப்பதாலோ என்னவோ எந்த ஒரு நபரின் முகக் குறிப்பையும் வைத்தே அகத்துக்குள்ளே இருப்பதை கணிப்பதில் வல்லவன்.

இருந்தும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த மாலினியின் மனதை கணிக்கத் தவறிவிட்டது விதியின் செயலன்றி வேறென்ன?

மாலினியும் அரவிந்தனும் அவர்களது தந்தையரைப் போலவே நெருங்கிய நண்பர்கள். தந்தைக்குப் பின் அவள் வாழ்வின் முதல் ஆண் அரவிந்தன். அவனின் நற்குணங்களினால் ஈர்க்கப்பட்ட அவள், அவன் மேல் காதல் கொண்டாள். ஆனால் அரவிந்தனின் மனம் அவளைக்  காதலியாக ஏற்றுக் கொள்ள ஒப்பவில்லை. நாகரீகமாக மறுத்து விட்டான். அதற்குப் பின் இருவரும் தங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

இருந்தும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் எல்லா தகவல்களையும் விரல் நுனியில்  தெரிந்துதான் வைத்திருந்தனர்.அரவிந்தனுக்கு இந்த நிலையில் இங்கு வரவே மனம் மிகவும் வருந்தியது. அவளின் இளகிய மனம் வருந்துவதை அவனால் ஏற்றுக் கொள்ள இயலாது. அப்பாவின் வற்புறுத்தலால் வந்தான். 

ஆனால், மாலினி முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வெகு சகஜமாக இருந்தாள். வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.அப்போது சுமதி மாலினியின் அப்பாவைப் பார்த்து, ‘‘அண்ணே! நம்ம மாலினிக்கு தோதா ஒரு வரன் வந்துருக்கு, என் தம்பி சம்சாரம் வகையறால. உங்கள கேக்காமலே மாலினி ஜாதகத்தை கொடுத்துட்டோம். பொருந்திருக்காம். அவங்க வீட்ல போட்டோ கேக்கறாங்க...’’ என்றாள்.

‘‘ரொம்ப சந்தோசம் தங்கச்சிம்மா! நல்ல நேரம் பார்த்து போட்டோ தரேம்மா...’’‘‘இப்பவே நல்ல நேரந்தான். அரவிந்தா! உன் போன்ல மாலினிய ஒரு போட்டோ பிடி...’’ என்ற சுமதியின் பேச்சைக் கேட்டு அரவிந்தன் தர்மசங்கடத்திற்குள்ளானான்.‘‘அப்புறம் எடுத்துக்கலாம்மா...’’‘‘இப்பவே எடுடா...’’‘‘வேணாம் அத்தை! நைட்டில இருக்கேன்...’’

‘‘பரவால்ல, மேல ஒரு ஷால போட்டா அதெல்லாம் யாருக்கு தெரியும்?’’ சுமதியின் பிடிவாதம் அறிந்த மற்றவர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.‘என் காதலை நீ ஏத்துக்காதது கூட வலிக்கல. நீ பேசறத நிறுத்தியதும் வலிக்கல. உன்  கல்யாணப் பத்திரிகை அடிக்க பிரஸ்ஸுக்கு என் கையால பணம் கொடுத்தப்ப கூட வலிக்கல. 

மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுக்க நீ போட்டோ எடுக்கறப்ப தாண்டா வலிக்குது...’ என்று பேசிய மாலினியின் கண்களை அவனால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.‘‘அம்மா! என் நிச்சயதார்த்த போட்டோஸ்லருந்து நல்லதா நானே அனுப்பிடுறேன், விடு...’’ என்றான்.

கண்களால் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு  கரும்பலகையில் இப்படி எழுதினாள்.கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.காதலர்களுக்கு மட்டுமல்ல... தங்களை நேசிக்கும் மனதை உணரும் வல்லமையுடைய எவருக்கும் இக்குறள் பொருந்தும்.

 - வைஷ்ணவி