எங்கே போனார்கள் Dream Boys & Girls..?
புது வரவுகள் இல்லாமல் தத்தளிக்கிறதா தமிழ் சினிமா?
மாஸ் ஹீரோக்கள், சூப்பர் ஸ்டார்கள், கமர்ஷியல் ஆக்ஷன் நடிகர்கள், நன்றாக நடிக்கும் நடிகைகள், லேடி சூப்பர் ஸ்டார்கள்... என எத்தனை விதமான நடிகர் நடிகைகள் இருப்பினும் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை ட்ரீம் பாய்ஸ் அல்லது சாக்லேட் பாய்ஸ், ட்ரீம் கேர்ள்ஸ் மற்றும் லவ்வர் கேர்ள்ஸ் நடிகர் நடிகைகள் ட்ரெண்டிங்கில் வருவது வழக்கம். அப்படி காதல் மன்னன் மற்றும் மன்னிகளாக வந்தவர்கள்தான் ஜெமினி கணேசன் துவங்கி கமல் ஹாசன், அரவிந்த்சாமி, மாதவன், துல்கர் சல்மான், நடிகைகளில் காஞ்சனா, வைஜெயந்தி மாலா துவங்கி அம்பிகா, ராதா, சிம்ரன், ஜோதிகா, தமன்னா என வரிசையாக மாஸ் காட்டினார்கள். ஒவ்வொருவரும் குறைந்தது 10 முதல் 20 படங்களிலாவது ஐந்து வருட காலங்களில் நடிப்பார்கள். ஆனால், சமீபகாலமாகவே இந்த சுழற்சி குறைந்துவிட்டது. அதிகபட்சம் கல்லூரிக் கதைகள் அல்லது கம்மிங் ஆப் ஏஜ் மற்றும் ஸ்கூல் கதைகளில் உடன் இருக்கும் நடிகர்களை உடலைக் குறைத்து அல்லது தோற்றத்தை மாற்றி, இன்னும் சிறப்பாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் நடிக்க வேண்டி இருக்கிறது.
எனவே 2கே இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள், யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோரை ட்ரீம் பாய்ஸ் & கேர்ள்ஸ் லிஸ்ட்டில் வைத்து கனவு காண்கிறார்கள். ஏன் தமிழ் சினிமாவில் இந்த காலிஇடம்? ஃப்ரஷ் முகங்களை அதிகம் பார்க்க முடியாத நிலை ஏன்? என்ன சொல்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்?
*விஜய் மில்டன் (இயக்குநர்)
இதில் ஒரு பக்கம் நெகட்டிவ் சைடு இருந்தாலும் இன்னொரு புறம் பாசிட்டிவ் பக்கங்களும் உள்ளன. முன்பு பிடித்த மனிதர்களை சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடிந்தது. இப்போ அப்படி கிடையாது. நிறைய ஃபிளாட்பார்ம்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. அதற்கு ஏற்ப ரசனையும் மாறிடுச்சு. மேலும் திறமைகளைக் காட்டவும் சினிமா மட்டும் களமாய் இருந்த இடத்துல இப்போ நிறைய வாய்ப்புகள் அதிகரிச்சி இருக்கு.
ஆனால், ஓர் இயக்குநராய் யோசிக்கும்பொழுது ஒரு கல்லூரிக் கதையோ அல்லது ஒரு ஸ்கூல் அடிப்படையிலான கதைகள் செய்யவோ இங்கே நடிகர்கள் குறைவாதான் இருக்காங்க. அதுவும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் மிகக் குறைவு. எல்லா நடிகர்களும் குறைந்தது 40 வயதை நெருங்கிட்டாங்க. இது ஒரு யூஸ் & த்ரோ பழக்கம் இருக்கிற தலைமுறை என்கிறதால எதையும் நிரந்தரமா அல்லது நீண்ட நாட்களுக்கான பழக்கமா மாத்திக்கிறது கிடையாது.
எந்த ட்ரெண்ட் ஆனாலும் மிகச் சில காலம்தான். அடுத்தடுத்து புது ட்ரெண்டுக்கு மாறிடுறாங்க. அந்தக் காரணம்தான் புதுசா வந்து ஹிட் கொடுக்கற நடிகர், நடிகைகள் அந்தந்த சீசனில் கொண்டாடப்பட்டு அப்படியே மறந்துடுறாங்க. மேலும் சினிமா மார்க்கெட்டும் நிறைய மாறி இருக்கு. தெரிந்த முகம் பழகிய நடிகர்களுக்கு மட்டும்தான் செலவு செய்யவும் தயாரா இருக்காங்க. இதெல்லாம்தான் காரணமா நான் நினைக்கிறேன்.
*சுசீந்திரன் (இயக்குநர்)
புது இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்வதற்காகவே அன்று அத்தனை தயாரிப்பாளர்கள் இருந்தாங்க. நல்லா யோசிச்சு பாருங்க... புதுசா வாய்ப்பு தேடி வர அத்தனை பேரும் ஒண்ணு சவுத்ரி சார் ஆபீஸ் முன்னாடி நிற்பாங்க அல்லது ஏவிஎம் வாசலில் நிற்பாங்க. இப்படி ஒருத்தர் ரெண்டு பேர் கிடையாது. நிறைய தயாரிப்பாளர்கள் புது கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. இன்னைக்கு அந்த சூழல் இல்லை. ரிஸ்க் எடுக்க யாரும் தயாரா இல்லை.
அதேபோல வருகிற நடிகர்களும் ஒரே படம்... ஓஹோ ஹிட்ஸ்... உடனே அதிக சம்பளம்... அடுத்தடுத்து பெரிய பிரம்மாண்ட படங்கள்... இப்படி யோசிக்கிறாங்க. தொட ர்ந்து படங்கள் செய்து வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமா பாவித்து அதிலிருந்து பாடம் கத்துக்கிட்டு முன்னேறி நிரந்தரமா நீடிக்கணும் என்கிற எண்ணம் இன்னைக்கு இருக்கிற தலைமுறை கிட்ட குறைஞ்சிடுச்சு.
ரஜினி சார் துவங்கி இப்போதைய விஜய் சார், அஜித் சார் வரையிலும் எல்லோருமே எடுத்த உடனே அதிரடி ஆக்ஷன் படங்கள் செய்யலை. தொழிலை கத்துக்கிட்டு நடிப்பை புரிஞ்சுகிட்டு நல்ல நல்ல கதைகள் நடிச்சு தோல்வியானாலும் வெற்றியானாலும் அதை ஏத்துக்கிற பக்குவத்தை வளர்த்துக்கிட்டுதான் இன்னைக்கு பெரிய ஸ்டார்களாக இருக்காங்க. அந்த மாதிரியான வளர்ச்சியை இப்போதைய தலைமுறை விரும்புறது கிடையாது. எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் மாதிரிதான் கேட்கிறாங்க. அதனால்தான் நிரந்தரமான நல்ல நடிகர்கள் வந்தால் கூட ஏத்துக்கிற மனமும் இல்லாமல் போயிடுச்சு.
*எம்.திருமலை (இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்)
கடின உழைப்பு... அதில் கிடைக்கும் வெற்றியைக் கொண்டாட இந்த தலைமுறை தயாராக இல்லை. ஒரு படம் நடிக்கிறாங்க... அந்த படம் ஹிட்டானால் உடனே சம்பளம் அதிகம். அதிகம் என்றால் ஒரு தயாரிப்பாளர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 5 கோடி 6 கோடிகளைத் தொட்டு விடுகிறார்கள்.
அதேபோல் அவர்கள் இந்த கதை வேணும் வேண்டாம் என தேர்வு செய்கிற இடத்திற்கும் போயிடுறாங்க. கிட்டத்தட்ட பெரிய நடிகர்களுக்கு எந்த அளவுக்கு காத்திருக்க வேண்டி இருக்கிறதோ அதே அளவுக்கு ஒரு பட இரண்டு பட நடிகர்களுக்கும் இப்போது காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கு. கடினமான உழைப்பும் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியும்தான் நிரந்தரமாக இருக்கும். இதைப் புரிஞ்சுகிட்டாலே எந்தத் துறையிலும் சாதிக்கலாம் சினிமாவும் அப்படித்தான்.
*சி.வி.குமார் ( தயாரிப்பாளர்)
என்னுடைய ஸ்டைல் புதுமுக நடிகர்கள், நடிகைகள்தான். இப்போது வரை அதைக் கடைப்பிடிக்கிறேன். ஆனால், முன்பு ஒரு வழக்கம் இருக்கும். விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இயக்குநருடன் தொடர்ந்து பல படங்களில் பயணிப்பாங்க. அவங்க கூடவே சேர்ந்து நடிப்பையும் தொழிலையும் கத்துக்குவாங்க.
இந்த நடைமுறை இல்லாம போயிடுச்சு. முதல் படத்திலேயே இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள இணைப்பு அப்படியே கட் ஆயிடுது. அவங்களும் அடுத்தடுத்து பெரிய பிராண்ட், பெரிய இயக்குநர் இப்படி போயிடறாங்க. கடைசியில் ஏத்திவிட்ட தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கு அவ்வளவு சுலபமாக கால்ஷீட் கொடுப்பதில்லை. இதனால் வருடத்திற்கு ஒரு படம் கூட கொடுக்க முடியாமல் தத்தளிக்கிறாங்க.
அதேபோல் இப்போதைய தலைமுறையும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கொண்டாட வேண்டும் என்று தெளிவு இல்லாமல் ஒரு குழப்பத்தில் இருக்கிறது. நல்ல நடிகர்கள், உழைக்க தயாராக இருக்கும் நடிகர்கள் வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் திணறுகிறார்கள். 2கே ட்ரெண்டிங் எது என்பது இத்தனை வருடங்களாக சினிமா தொழிலில் இருக்கும் எங்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
*சமூகப் பார்வையாளர்கள்
அந்தக் காலகட்டத்தில் - அதாவது 90களின் இறுதி வரை ஓர் ஆண் இன்னொரு பெண்ணிடம் அல்லது ஒரு பெண் இன்னொரு ஆணுடன், பேசவே முடியாது; ஏன் பார்க்கவே முடியாது. ஆனால், இன்னைக்கு அப்படி இல்லை. பிடித்த யாரிடமும் சுலபமாக பேசக் கூடிய சுழல் இருக்கு. எனக்கு பிடித்த ஆண் / பெண் அல்லது கிரஷ் என யாராக இருந்தாலும் நினைத்த நேரம் பேச முடியும்.
இப்படியிருக்கும்போது நான் ஏன் என்னுடைய கற்பனைக்கு ஏற்ற நபரை சினிமாவில், சீரியலில், டிஜிட்டலில் தேட வேண்டும்... என்கிற மனநிலை இப்போதைய தலைமுறையிடம் இருக்கு.
புதிதாக நடிக்க வருபவர்களைக் கூட அவர்கள் நடிகர்கள், நடிகைகள் அல்லது அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள்.
ஆனால், டிஜிட்டல் யுக பிரபலங்கள் இப்போது அவர்கள் உலகில் புதிது. கண் முன்னாடி ரீல்ஸ், வீடியோ மூலம் வருமானமும் பார்க்கும் ஒருவர் என்பதை ஆச்சர்யத்தோடு பார்க்கறாங்க. அதோடு அவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.
ஆனால், டிஜிட்டல் உலகத்தில் எவர் என்ன தப்பு செய்தாலும் உடனுக்குடன் வெளிவந்து விடுவதால் எந்த ட்ரெண்டானாலும் அதன் உண்மை முகம் உடையும் பொழுது அந்த சீசன் அப்படியே முடிந்துவிடுகிறது.
அவ்வளவே. ஆனால், பொதுவாகவே எதுவும் நிரந்தரமாக வேண்டும். வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்து அனுபவப் பாடம் கற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லாத சுழல்தான் இப்போது நிலவுகிறது. புதிய நடிகர்கள், திறமை இருப்பினும் குறிப்பிட்ட பிரபலம் கிடைத்தவுடன் தங்களை போலியாகவாவது டிரெண்டில் வைத்துக் கொண்டு சம்பாத்தியத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். கடின உழைப்பும், உண்மையான கற்றுக்கொள்ளும் மனநிலையும் இருந்தால் நிச்சயம் வளர்ச்சியும் நிரந்தரமாக இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|