லவ்வர் இல்லாமலும் இருப்பாங்க... ஆனா, ஃப்ரெண்ட்ஸ் இல்லாம 2கே கிட்ஸ் இல்ல!



தன்னுடைய முதல் படமான ‘வெண்ணிலா கபடிக்குழு’வை வெற்றிப் படமாகக் கொடுத்து சினிமா உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ என ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பதால் இவருக்கான வரவேற்பு எப்போதும் உண்டு.
தற்போது ‘2கே லவ் ஸ்டோரி’ செய்துள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையிலும் நம்மிடம் நிதானமாக பேச ஆரம்பித்தார்.

அது என்ன ‘2 கே லவ் ஸ்டோரி’?

இந்தப் படத்தை செய்ததை என்னுடைய பொறுப்பாக பார்க்கிறேன். 2 கே கிட்ஸை நெகடிவ்வா காண்பிக்கும் போக்கு அதிகமா இருக்கு. அவங்க பொறுப்பா நடந்துக்கமாட்டாங்க, ஃபேமிலியை  மதிக்கமாட்டாங்க என்ற பிம்பத்துக்கு மாறா அவர்களிடம் பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கு என சொல்லியிருக்கேன். 
விஸ்காம் படிச்சுட்டு ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்துறவங்கதான் ஹீரோ, ஹீரோயின். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் லவ், ஃப்ரெண்ட் ஷிப் எல்லாத்தையும் எப்படி ஹேண்டில் பண்றாங்க, பெற்றோர் அவர்களுக்கு எந்தளவுக்கு ஃப்ரீடம் தர்றாங்க என்பதைத்தான் படம் பேசுகிறது.

கடந்த சில வருஷங்களில் லவ்வர் இல்லாத பொண்ணு கூட இருப்பாங்க; ஆனா, ஆண் நண்பர்கள் இல்லாத பொண்ணுங்க கிடையாது. அவங்க லைஃப்ல ஃப்ரெண்டுன்னு ஒரு பையன் இருப்பான். அதே மாதிரி ஆம்பள பசங்க வாழ்க்கையில் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாம இருக்கமாட்டாங்க.

டீமாக அவர்களுக்குள் ஆழமான புரிதல் இருக்கு. அதைப் பார்க்கிற பார்வையிலதான் கோளாறு. சில நேரங்களில் ஒரு பையனும், பொண்ணும் பேசுறதைப் பார்த்தாலே அவங்களை லவ்வர்ஸ்னு முடிவு கட்டிடறாங்க. அந்தப் பார்வையை மாத்தணும் என்பதுதான் இந்தப் படத்தோட நோக்கம்.

இந்த ஜெனரேஷனோட ஃப்ரெண்ட்ஷிப், அவர்கள் எப்படி பாசிட்டிவ் மனநிலையில இருக்காங்க, வாழ்க்கையை எப்படி பார்க்கிறாங்க என்பதை ரொம்ப ஃபீல் குட் படமா சொல்லியிருக்கிறேன். பெற்றோர் இந்தப் படத்தை பார்க்கும்போது இந்த ஜெனரேஷனின் மாற்றத்தைப் புரிஞ்சுக்கலாம். கண்டிப்பா இந்தப் படத்தை 2கே கிட்ஸை விட அவங்க பெற்றோர் பார்க்கணும்.

நிறைய இளைஞர்களிடம் பேசினேன். அவர்களின் லவ், ஃப்ரெண்ட்ஷிப், அப்பா, அம்மா இடையே உள்ள ரிலேஷன்ஷிப், லட்சியம் என எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடிந்தது. அதுல மிக முக்கியமா நான் கவனிச்சது, எல்லோருக்குள்ளும் அழகான நட்பு இருப்பதைப் பார்க்க முடிஞ்சது. அதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் என எல்லா காலத்திலும் நெகட்டிவ் கருத்துக்கள் இல்லாமல் இல்லை. இப்போது சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் இருப்பதால் நெகட்டிவ் பக்கங்கள் அதிகமா இருப்பதுபோல் தோற்றம் தெரியுது. அந்த நெகட்டிவ் பார்வை 2கே கிட்ஸ் மேலயும் இருக்கு.

எல்லாருக்குள்ளும் நெகட்டிவ், பாசிட்டிவ் இருக்கும். சமூகத்துக்கு பாசிட்டிவ் விஷயங்கள்தான் தேவைப்படுகிறது. பாசிட்டிவ்வான விஷயங்களைப் பார்த்தாலே அது பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும். ‘வெண்ணிலா கபடிக்குழு’ல லவ், ஸ்போர்ட்ஸ் இருந்தாலும் ஃபன் இருந்திருக்கும். அப்படியொரு என்ஜாய்மென்ட் இந்தப் படத்திலும் இருக்கும்.
சுசீந்திரன் என்றால் கார்த்தி, விஷால் என ஹீரோக்களை வெச்சு படம் பண்ணிய இயக்குநர் என்ற பேர் இருக்கு.

இதுல புதுமுகங்கள்...?

அப்படிச் சொல்ல முடியாது. எப்பவுமே நான் ஹீரோ படம், நியூ ஃபேஸ் படம் என மாத்தி மாத்தி பண்ணியிருக்கிறேன். ‘வெண்ணிலா கபடிக்குழு’வுல நியூ ஃபேஸ், ‘நான் மகான் அல்ல’ படத்துல கார்த்தி, ‘அழகர்சாமி குதிரை’ல அப்புக்குட்டி, ‘ராஜபாட்டை’ல  விக்ரம், ‘ஜீவா’ல விஷ்ணு விஷால், ‘பாண்டிய நாடு’ல விஷால், ‘ஈஸ்வரன்’ல சிம்பு, ‘சாம்பியன்’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ல புதுமுகங்கள்னு  கலவையா படங்கள் பண்ணியிருக்கிறேன்.

முதல் படத்துல நியூ ஃபேஸஸை நடிக்க வெச்சு ஹிட் கொடுத்ததால யாரை வேண்டுமானாலும் நடிக்கவெச்சு ஹிட் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. இப்போதுள்ள வியாபாரச் சூழலில் ஒரு புதுமுகத்தை வெச்சு தயாரிப்பாளர் படம் எடுப்பது சாத்தியமற்றது. பணம் இருக்கிறவர்கள் தங்களை ஹீரோவாகக் காண்பிக்க படம் எடுக்க வருவார்கள். இன்னொரு தரப்புல தங்கள் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க சிலர் வரலாம். அது தவறு கிடையாது. அப்படி அறிமுகமானால்தான் தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்கள் கிடைப்பார்கள்.
நிறைய ஹீரோக்கள் வந்தால்தான் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் புதுமுகங்களை வெச்சு இயக்குவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அப்படி இதுல ஹீரோவா அறிமுகமாகிறார் ஜெகவீர். முதல் படத்துல நூறு மார்க் வாங்குவது கடினம். படம் பார்க்கும்போது ஜெகவீரை தேர்ச்சி பெற்ற மாணவராதான் பார்ப்பீங்க. பெரிய பட்ஜெட்டில்  படம் எடுக்கும்போது எப்படிப்பட்ட நியூ ஃபேஸிடமும் நடிப்பை வாங்கிவிட முடியும். பட்ஜெட்ல எடுக்கும்போது அது நடக்காது. என் ஹீரோவைப் பார்க்கும்போது பக்கத்துவீட்டு பையனை பார்த்த மாதிரி இருக்கும். கண்டிப்பா ஜெகவீர் கவனிக்கத்தக்க இடத்தைப் பிடிப்பார்.

ஹீரோயின் மீனாட்சி கோவிந்தராஜனை நான்தான் அறிமுகப்படுத்தினேன். இப்போது ஏழெட்டு படங்கள் பண்ணிட்டார். அவருக்கு அனுபவம் இருந்தாலும் சொல்லித் தருவதை அழகா பெர்ஃபார்ம் பண்ணுவார். அவர் கரியர்ல இதுதான் பெஸ்ட் படமா இருக்கும். ஏனெனில், அவர் மீதுதான் கதை டிராவல் ஆகும்.இவர்களுடன் பாலசரவணன், பிரபாகர், ஆண்டனி பாக்யராஜ், வினோதினி, ஜெயப் பிரகாஷ், துஷ்யந்த் இருக்கிறாங்க. காமெடிக்கு சிங்கம்புலி, ஜி.பி.முத்து, முருகானந்தம், ‘ஜோ’ கவின் இருக்கிறாங்க. தயாரிப்பு சிட்டி லைட் பிக்சர்ஸ்.

பல வருடங்களாக இமான் - சுசீந்திரன் கூட்டணி தொடர்கிறதே?

கிட்டத்தட்ட எங்களுக்கு இது ஒன்பதாவது  படம். எங்கள் புரிதலைப்பற்றி சொல்லத்தேவையில்லை. அந்தப் புரிதல் அழகா வெளிப்பட்டிருப்பதை படத்துல பார்க்கலாம். சமீப காலங்களில் ஒரே இயக்குநர் ஒரே இசையமைப்பாளருடன் தொடர்ந்து பத்து படம் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை. இமான் சாருடன் அதிகப் படம் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம்.

உங்கள் அறிமுகங்களான விஷ்ணு விஷால், சூரி வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

விஷ்ணு விஷால் திறமையான நடிகர். புரொடியூசராகவும் வளர்ந்து நிற்பது சந்தோஷம். சூரியிடம் விசுவாசம் அதிகம். ஆரம்பத்துல இருந்த அந்த அன்பு இப்பவும் தொடர்கிறது. அது ஆச்சர்யம். ஏனெனில் சினிமாவில் அது அரிது.‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’  போன்ற படங்களை அரசியல், சமூகப் பார்வையோடு செய்தீர்கள். அந்த மாதிரி அழுத்தமான படங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்ட மாதிரி தெரியுதே?

உங்க கேள்விக்கு ‘வள்ளிமயில்’ பதில் சொல்லும்.

எஸ்.ராஜா