சினிமா நடிகை to புத்த துறவி!



சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பாலிவுட் நடிகை ஒருவர், புத்த துறவியாக மாறிவிட்டதாக ஒரு செய்தி வைரலாகிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில், சினிமா வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு, துறவறத்தை தேர்ந்தெடுத்திருக்கும் அந்த நடிகையைப் பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.

அவரது பெயர், பர்க்கா மதன். மாடல், ப்யூட்டி குயின், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகங்ளைக் கொண்ட பர்க்கா, இப்போது புத்த துறவி என்ற அடையாளத்துடன் மட்டுமே வலம் வருகிறார். ஐம்பது வருடங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் பர்க்கா மதன். “பொதுவாக புகழ் வெளிச்சம், ஆடம்பரத்திலிருந்து விலகி, எளிமையாக வாழும் பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருக்கிறார்  பர்க்கா மதன்...” என்று பலரும் இவரை புகழ்கின்றனர்.

முதலில் மாடலிங் துறையில்தான் கால் பதித்தார் பர்க்கா. மாடலிங் செய்யும் போதே விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவற்றில் பெரிதாக பர்க்காவுக்கு ஆர்வம் இல்லை. 1994ம் வருடம் நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்டார்.

அந்தப் போட்டியில் பர்க்காவுக்கு போட்டியாளராக இருந்தது ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் கலந்துகொண்டதன் மூலமாக சினிமா வாய்ப்புகளும் பர்க்காவைத் தேடி வந்தன. எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து நடித்தார்.

அக்‌ஷய் குமார் நடித்த ‘கிலாடியோன் கா கிலாடி’(1996) எனும் இந்திப்படத்தில் அறிமுகமானார் பர்க்கா. பிறகு ‘பூட்’ (2003) உட்பட நான்கைந்து இந்திப் படங்களிலும், பஞ்சாபி படங்களிலும் நடித்தார். பர்க்காவின் புகழ் மேலே சென்று கொண்டிருந்தது. தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வந்தன. 

ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிய ‘Saat Phere  Saloni Ka Safar’ என்ற தொடரில் நடித்ததன் மூலமாக பர்க்காவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என செம பிஸியாக அவரது வாழ்க்கை மாறியது.

புகழ், பணம் எல்லாம் கிடைத்தாலும் ஏதோவொரு வெற்றிடத்தை உணர்ந்தார் பர்க்கா. ஆன்மிகத்தை நோக்கி தனது பாதையைத் திருப்பினார். தலாய் லாமாவின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்டார்.  ஆறாம் வகுப்பு படிக்கும்போதே சிக்கிமில் உள்ள ஒரு மடாலயத்துக்குச் சென்றிருக்கிறார் பர்க்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

தலாய் லாமாவின்  சொற்பொழிவுகள் பர்க்காவின் மீது ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது; அவருக்குள் ஓர் ஆழ்ந்த அமைதியைக் கொடுத்தது. புத்தரின் போதனைகள் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

ஆம்; எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 2012ம் வருடம் புத்த துறவியாக  வேண்டும் என்று முடிவு செய்து, சந்நியாச வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். இப்போது முழுமையாக தன்னைத் துறவு வாழ்க்கைக்கு அர்ப்பணித்துவிட்டார். தனது பெயரைக் கூட கியால்டன் சாம்டென் என மாற்றிக்கொண்டு மலைகளில் உள்ள புத்த மடாலயங்களில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பர்க்கா.

மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையில், தான் எடுத்த மிகச்சிறந்த, சரியான, முக்கியமான முடிவு துறவறம்தான் எனஅழுத்தமாகச் சொல்கிறார். இதுபோக துறவற வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார். இப்போது பர்க்காவின் வயது 50.

த.சக்திவேல்