Mystery Partner!



கடந்த வாரம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதையொட்டி, டிரம்ப் பிரம்மாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த இரவு விருந்தில் உலகின் முதல் பணக்காரரும், டிரம்பின் அரசின் செயல்திறன் துறையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார். இதில் எலான் மஸ்க் தன்னுடைய ரகசிய காதலியுடன் கலந்துகொண்டது தற்போது வைரலாகி இருக்கிறது.

அவருடைய பெயர் ஷிவோன் ஜிலிஸ். எலான் மஸ்க்குடன் அவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இருந்தும் அவர்களுக்கு இடையிலான உறவு பற்றிய தகவல் இன்றும் மர்மமாகவே உள்ளது. இதனால் அமெரிக்க ஊடகங்கள் ஷிவோன் ஜிலிஸை, ‘Mystery Partner’ என்றே குறிப்பிடுகின்றன. 

அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஓர் உயர்மட்ட சூழலில் மஸ்க்குடன் ஜிலிஸ் காணப்படுவது இதுவே முதல்முறை. ஷிவோன் ஜிலிஸ், எலான் மஸ்க்குடன் மட்டுமின்றி, அந்த விருந்தில் கலந்துகொண்ட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் லாரன் சான்செஸ், டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், அவரின் கணவர் ஜேர்ட் குஷ்னர் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இந்தப் புகைப்படங்களும் செம வைரலாகி உள்ளன.

ஜிலிஸ், மஸ்க் ஜோடி 2021ம் ஆண்டில் ஸ்ட்ரைடர் மற்றும் அஸூர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இதே ஆண்டில், மஸ்க் தனது இரண்டாவது குழந்தையை கனடா பாடகியான கிரிம்ஸுடன் பெற்றெடுத்தார். பின்னர் கிரிம்ஸ் பிரிந்துவிட்டார். தொடர்ந்து 2024ம் ஆண்டில் ஜிலிஸும் மஸ்க்கும் மூன்றாவது குழந்தையைப் பெற்றனர்.

ஏற்கனவே எலான் மஸ்க், முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதில் முதல் குழந்தை இறந்துவிட்டது. பின்னர் கிரிம்ஸுடன் மூன்று குழந்தைகளைப் பெற்றார். அப்படியாக எலான் மஸ்க் மொத்தம் 9 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தார். 

இப்போது ஜிலிஸுடன் மூன்று குழந்தைகள் பெற்றெடுத்துள்ள நிலையில் அவர் 12 குழந்தைகளுக்கு அப்பா ஆனார்.  இந்நிலையில் யார் இந்த ஷிவோன் ஜிலிஸ் என்பது குறித்து செய்திகள் பரபரக்கின்றன.

ஷிவோன் ஜிலிஸ் கனடாவிலுள்ள ஒன்டாரியா மாகாணத்திலுள்ள மார்க்ஹம் நகரில் பிறந்தவர். தாய் சர்தா பஞ்சாப்பைச் சேர்ந்தவர். தந்தை ரிச்சர்ட் ஜிலிஸ். ஷிவோன் ஜிலிஸ், யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே வளரும் நாடுகளின் நிதி, தொழில்நுட்பங்கள் குறித்த பணியில் அமர்த்தப்பட்டார்.

2012 முதல் 2018 வரை, ப்ளூம்பெர்க் எல்பி நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கிய ப்ளூம்பெர்க் பீட்டா நிறுவனத்தின்  முதலீட்டாளர்களில் ஒருவராகவும் பார்ட்னராகவும் இருந்தார். இதனால், 2015ம் ஆண்டு ‘ஃபோர்ப்ஸ்’ இதழின் அண்டர் 30 சிறந்த முதலீட்டாளர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

பின்னர் ஜிலிஸ், மஸ்க்கின் ப்ரைன் சிப் ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங்கில் உயர்மட்ட ஊழியராகவும், ஓபன் ஏஐயின் ஆலோசகராகவும் இருந்தார். அப்போதுதான் ஜிலிஸ், எலான் மஸ்க்கை சந்தித்துள்ளார். அங்கிருந்துதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் 2021ல் இருவரும் ஐவிஎஃப் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. கடந்த ஆண்டு மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.

இந்நிலையில்தான் ஷிவோன் ஜிலிஸ், மஸ்க்குடன் இணைந்து இரவு விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

பி.கே