சபாஷ் இஸ்ரோ... காலரை உயர்த்தும் இந்தியா!
விண்வெளி ஆய்வில் இஸ்ரோ மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தி உள்ளது. ஆம். விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கான தனி விண்வெளி மையத்தை அமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பிஎஸ்எல்வி, சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண் வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது.
தொடர்ந்து அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு படிப்படியாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது. இரண்டு செயற்கைக்கோள்களுக்கான இடைவெளி 15 மீட்டர் என்றும் அதன் பின்னர் 3 மீட்டர் என்றும் கொண்டுவரப்பட்டது. இரண்டு முறை தள்ளிப்போன இந்த இணைக்கும் முயற்சி ஜனவரி 16ம் தேதி வெற்றிகரமாக நடத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது’ என்று இஸ்ரோ சமூக வலைதள பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது. ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் இரண்டு, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து டிசம்பர் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டும் சந்திரயான் - 4, ககன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த விண்கலங்கள் உதவும்.
‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ என்ற இந்திய விண்வெளி மையத்தை இன்னும் 10 ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX-Space Docking Experiment) தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
சந்திரயான் 4 பணிகளுக்கு உதவும் ஒரு படியாக கருதப்படும்இது நிலவில் உள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி சேசர் (Chaser) மற்றும் டார்கெட் (Target) எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் ஹைதராபாத்தில் உள்ள அனந்த் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் வடிவமைத்துத் தந்தது. இந்தத் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உயர் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இது இன்றுவரை இந்தியாவில் ஒரு தனியார் துறை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன செயற்கைக்கோள் ஒருங்கிணைப்புத் திட்டமாகும், 475 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் 55 டிகிரி சாய்வில் சுற்றி வரும் இரண்டு விண்கலன்களை ஒன்றிணைப்பது சாதாரண வேலை இல்லை.
ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜினுடன் மற்ற ரயில் பெட்டிகளை இணைக்கும் போது மிகக் குறைவான வேகத்தில் ரயில் பெட்டிகள் தள்ளப்பட்டு முன்நிற்கும் இன்ஜினுடன் இணைக்கப்படுகிறது.
இது தரையில் தண்டவாளங்கள் மீது மனிதர்களின் முயற்சி மற்றும் மேற்பார்வையில் நடைபெறுகிறது. ஆனால், பூமியிலிருந்து 475 கிலோமீட்டர் உயரத்தில் அந்தரத்தில் சுற்றி வரும் இரண்டு விண்கலங்களின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து பூமியிலிருந்து அதனை இணைப்பது என்பது மிகவும் சாகசம் நிறைந்த ஒரு நிகழ்வாகும். இந்தத் திறனை ஒருசில நாடுகள் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்திய விஞ்ஞானிகள் நமது விண்வெளி தொழில்நுட்பத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். இரண்டு விண்கலங்கள் தற்போது ஒரே விண்கலமாக விண்வெளியில் சுற்றி வரும். மேலும் இரண்டு விண்கலங்களுக்கான மின்சாரப் பரிமாற்றம் திறனும் சோதித்துப் பார்க்கப்பட உள்ளது.
டார்கெட் மற்றும் சேஸர் என்ற இந்த இரண்டு விண்கலங்கள் ஒரே சுற்றுப்பாதையில் ஒரே மாதிரியான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. இது ‘ஃபார் ரெண்டெவூ’ என அழைக்கப்படுகிறது. சுமார் 20 கிமீ தொலைவில் இரண்டு விண்கலங்களுக்கிடையில் ஒரு சிறிய தொடர்பு வேகத்தை அறிமுகப்படுத்தி பின்னர் ஈடுசெய்யும் ஒரு ஒத்த உத்தியுடன், சேஸர் 5 கிமீ, 1.5 கிமீ, 500 மீ, 225 மீ, 15 மீ மற்றும் 3 மீ என்று செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தை படிப்படியாகக் குறைத்து டார்கெட்டை அணுகச் செய்தனர்.
இஸ்ரோவின் SPADEX மிஷன்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான பங்கு வகிப்பதுடன் அதன் புதுமையான மற்றும் குறைந்த செலவிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. அதன் வரிசையில் SPADEX மிஷன் என்பது ஒரு புதிய திருப்பத்தை குறிக்கிறது.
இது விண்வெளி தொடர்பு, தரவு பரிமாற்றம் மற்றும் இணைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான தொழில்நுட்பப் பரிசோதனையாகும். SPADEX மிஷன் இந்தியாவின் விண்வெளி துறையில், குறிப்பாக விண்வெளி தரவு பரிமாற்றம் மற்றும் அட் - ஹாக் நெட்வொர்க்கிங் துறைகளில் முன்னேற்றத்தை குறிக்கின்ற ஒரு முக்கியமான அடுத்த கட்டமாகும். SPADEX என்பது என்ன?
SPADEX என்றால் Space docking system என்பதைக் குறிக்கிறது. இது செயற்கைக்கோள்களின் தொடர்பை புதிய முறையில் மாற்றும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிப்பது. SPADEX மிஷன், செயற்கைக்கோள்களிடையே அதிக திறன், வேகம் மற்றும் பாதுகாப்புடன் தரவு பரிமாற்றத்தை செய்யும் விண்வெளி தொடர்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. SPADEX, விண்வெளியில் தானாகச் செயல்படும் மற்றும் தனக்கே உரிய செயற்கைக்கோள் நெட்வொர்க்கை உருவாக்கிக் கொண்டு பல செயற்கைக் கோள்களின் இடையே தரவை எளிதாக பரிமாற்றம் செய்யும் நோக்குடன் செயல்படும்.
இந்த அட் - ஹாக் நெட்வொர்க்கில், செயற்கைக்கோள்கள் மோதலின்றி, தரவு பரிமாற்றத்திற்கு நிலையான மைய நிலையங்கள் அல்லது கட்டமைப்புகள் இல்லாமல் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். இந்த மிஷன், எதிர்காலத்தில் விண்வெளித் தொடர்பு, செயற்கைக்கோள்கள் தானாகப் பொருந்தி தரவை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதற்கான ஒரு முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
SPADEX மிஷனின் குறிக்கோள்கள்
SPADEX, செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில், ஒன்றுடன் ஒன்று நேரடியாக தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கவும் சரிபார்க்கவும் செய்கிறது. இதனால், செயற்கைக்கோள்களுக்கு இடையே தரவு பகிர்வு மேலும் மேம்படும். விண்வெளி அட் - ஹாக் நெட்வொர்க்கிங் என்பதே SPADEX-இன் முக்கியப் பணி.
அட் - ஹாக் நெட்வொர்க்குகள் தானாகவே அமைக்கப்படக் கூடியவை. விண்வெளி நிலையங்கள் மற்றும் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யவும், இணக்கமான தொடர்புகளை உருவாக்கவும் இது உதவும். இந்த மிஷன், செயற்கைக்கோள்களுக்கு இடையே தரவு பரிமாற்றத்தை வேகமாகவும், மிகுந்த திறனுடன் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம், செயற்கைக்கோள்கள் நேரடியாக தரவை பகிர்வதன் மூலம் பரிமாற்ற தாமதங்களை குறைத்து, விண்வெளி திட்டங்களுக்கான தொடர்பும், தரவு கிடைப்பதற்கும் விரைவாக உதவும்.
SPADEX இன் முக்கியத்துவம்
இந்திய விண்வெளி திட்டத்தில் SPADEX மிஷன், இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறது.
அதில் சந்திரயான் மற்றும் மங்கல்யான் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் அடங்கும். ISRO-வின் சுயமான மற்றும் பிற தொடர்பு முறைகளை மேம்படுத்தும் திறன் ஆகியவை இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முன்னணி நாடாக மாற்றியுள்ளது.
உலகில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளியில் இரண்டு விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்களை இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு முறையும், குறிப்பாக விண்வெளி நிலையம், அவர்கள் பயணிக்கும் விண்கலம் அல்லது சரக்குகளை எடுத்துச் செல்லும் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
டோக்கிங் (இணைப்பு) முடிந்ததும், பாதுகாப்பான நிலை என்று உணர்ந்த பின்னரே விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குள் செல்ல முடியும். எனவே தற்போது இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி அதுபோன்ற ஒரு இணைப்பு நடவடிக்கையை இஸ்ரோ எடுத்துள்ளது.சிக்கலான நடைமுறைகள் இதில் உள்ளன. சிறிதளவு பிழைஏற்பட்டாலும் அது பாதகமான சூழலை ஏற்படுத்தும். இது அறிவியல் புனைகதை திரைப்படமான ‘இன்டர்ஸ்டெல்லரில்’ காட்டப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகக் கச்சிதமாக இணைப்பு பணியை நிகழ்த்தி சாதனையைச் செய்துள்ளனர்.விண்வெளியில்செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில், அவற்றிடையே திறமையான தொடர்பு மிக முக்கியமாக மாறிவிடும். SPADEX இந்த த் துறையில் மிகுந்த பங்கு வகிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஒரு வலுவான, ஒருங்கிணைந்த விண்வெளி கட்டமைப்பை உருவாக்க இது உதவும். SPADEX மிஷன் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், புவி கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள அனைத்து ISRO செயற்கைக்கோள்களைப் போலவே, SPADEX விண்கலங்களும் வேறுபட்ட S அடிப்படையிலான செயற்கைக்கோள் நிலைப்படுத்தல் அமைப்பை (SPS) கொண்டுள்ளது. செயற்கைக் கோளை நிலை நிறுத்தும் அமைப்பு மற்றும் செயற்கைக்கோள்களுக்கான PNT - (Position, Navigation and Timing - நிலைப்படுத்துதல், ஊடுருவல் மற்றும் நேரம்) தீர்வுகளை வழங்குகிறது.
SPADEX இல், SPS ரிசீவரில் ஒரு புதுமையான RODP செயலி சேர்க்கப்பட்டுள்ளது. இது சேசர் மற்றும் டார்கெட் தொடர்புடைய நிலை மற்றும் வேகத்தை துல்லியமாக தீர்மானிக்க அனுமதிக்கிறது. சேசர் மற்றும் டார்கெட் எஸ்பிஎஸ் ரிசீவர்களில் உள்ள ஒரே ஜிஎன்எஸ்எஸ் செயற்கைக்கோள்களிலிருந்து கேரியர் கட்ட அளவீடுகளைக் கழிப்பதன் மூலம், இரண்டு செயற்கைக்கோள்களின் மிகவும் துல்லியமான தொலைவு நிலைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
இரண்டு செயற்கைக்கோள்களிலும் உள்ள VHF/UHF டிரான்ஸ் ரிஸீவர்கள் GNSS செயற்கைக்கோள் அளவீடுகளை ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதன் மூலம் இந்த செயல்முறைக்கு உதவுகின்றன. வன்பொருள் மற்றும் மென்பொருள் சோதனைகள், மூடப்பட்ட - லூப் சரிபார்ப்புகள் உட்பட, RODP செயல்திறனை வகைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டன.
4.5 மீ IGFOV மற்றும் 9.2 X 9.2 கிமீ (ஸ்னாப்ஷாட் முறை) மற்றும் 450 கிமீ உயரத்தில் இருந்து 9.2 X 4.6 கிமீ (வீடியோ பயன்முறை) கொண்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா (HRC) SDX01 இல் பொருத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் SPADEX மிஷனின் தாக்கம்
SPADEX மிஷனின் வெற்றியின் மூலம், அதிக மேம்பட்ட விண்வெளி தொடர்பு முறைமைகளுக்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில், SPADEX-இன் தொழில்நுட்பம், உலகளாவிய செயற்கைக்கோள் நெட்வொர்க்கை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இது உலகளாவிய இணையதள இணைப்பு, காலநிலை கணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இடையூறு இல்லாமல் தொடர்பை தொடர்ந்து உறுதி செய்ய உதவும்.
மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி அமைப்புகள் விண்வெளியில் இணைந்து பணியாற்றுவதற்கான நோக்கங்களில், விண்வெளியில் தரவு பரிமாற்றம் மற்றும் தொடர்பு நெட்வொர்க்குகளை பராமரிப்பது மிக முக்கியமாக மாறிவிடும். ISROவின் SPADEX மிஷன், இந்தியாவை உலகளாவிய விண்வெளி தொடர்பு துறையில் முன்னணி நாடாக நிலை நிறுத்தியுள்ளது. இது சர்வதேச விண்வெளி கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கச் செய்யும்.
பா.ஸ்ரீகுமார்
|