எப்பவும் டேன்சிங் ரோஸ்!
மலர்களில் அபூர்வ மலர்கள் உண்டு. அதுபோல்தான் சினிமாவுக்கு நடிகர் சபீர் கல்லரக்கல். இவரிடம் ஜெய்சங்கர் மாதிரி ஹீரோயிசத்தையும் பார்க்கலாம், நம்பியார் மாதிரி வில்லத்தனத்தையும் பார்க்கலாம். சினிமாவுக்கான ‘அ’ னாவை ‘ஆய்த எழுத்து’ படத்தில் கற்கத் தொடங்கியவர், ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு சினிமாவுக்கான மொழியை தன் வசப்படுத்தியவர். ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘பெர்த் மார்க்’, ‘த ரோடு’, ‘கிங் ஆஃப் கோதா’, ‘நா சாமி ரங்கா’ (தெலுங்கு), ‘பைரதி ரனகல்’ (கன்னடம்) என இவர் செய்த ஒவ்வொரு படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியதில்லை.
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம், அதியன் ஆதிரையின் ‘தண்டகாரண்யம்’, பா.இரஞ்சித் இயக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ என இந்த டான்சிங் ரோஸின் கால்ஷீட் டைரி எழுத இடமில்லாமல் நிரம்பியுள்ளது. சினிமாவுக்காக இவர் கிரிக்கெட்டைத் துறந்தவர் என்பது கூடுதல் செய்தி. பிசி ஷெட்யூலில் நம்மிடம் பேசினார் சபீர். கிரிக்கெட் வீரர் எப்படி நடிகராக மாறினார்?
அப்பா, அம்மா கேரளா. நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில்தான். சின்ன வயசுலேர்ந்து கிரிக்கெட்ல ஆர்வம். ஏராளமான லீக் மேட்ச் விளையாடியிருக்கிறேன். லண்டனிலும் சில காலம் கிரிக்கெட் விளையாடினேன்.
இந்திய அணிக்காக விளையாடணும் என்பதுதான் என்னுடைய லட்சியமா இருந்துச்சு. பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் என்னுடைய டீம் மேட்.‘ஆய்த எழுத்து’ பட வாய்ப்பு தற்செயலா நடந்துச்சு. அதுல நான் நடிச்சிருக்கிறேன்னு சொல்ல முடியாது. கூட்டத்தோடு ஒருத்தனா வந்துபோகும் அட்மாஸ்ஃபியர் கேரக்டர். உண்மையை சொல்லணும்னா அந்த சமயத்துல சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. படங்களும் பார்த்தது இல்லை.அப்போது நான் காலேஜ் மாணவன். பாக்கெட் மணிக்காக விற்பனைப் பிரதிநிதி வேலை செய்தேன். எனக்கு வேலை கொடுத்த கம்பெனிதான் ‘ஆய்த எழுத்து’ படத்துக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தேவைக்கு நிஜ மாணவர்களை அனுப்பி வெச்சாங்க. என்னையும் ‘ஷூட்டிங் போறீங்களா’ன்னு கேட்டாங்க. பாக்கெட் மணிக்காக நானும் ஓகே சொல்லிட்டேன்.
‘ஆய்த எழுத்து’ல என் முகத்தைப் பார்த்த சிலர் அதைப் பத்தியே பேச ஆரம்பிச்சாங்க. அந்த அட்டென்ஷன் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அந்த சமயத்துல கிரிக்கெட்ல எந்த திருப்புமுனையும் இல்லாமல் இருந்ததால், நம்மைத் தேடி வந்த சினிமா வாய்ப்பை விட்டுடக்கூடாதுன்னு அதுல ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன்.அதன் பிறகுதான் சினிமாவை முழுமையா கத்துக்கலாம்னு தியேட்டர் பண்ண ஆரம்பிச்சேன். அதுல விட்டதை இதுல பிடிக்கலாம்னு நினைச்சு இருபது வருஷமா சினிமா பயணத்தைத் தொடர்கிறேன்.
ஹீரோவாக ஆரம்பிச்ச உங்க பயணம் எப்படி வில்லனா டிராக் மாறுச்சு?
‘54321’, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என ஹீரோவாகத்தான் என்னுடைய அறிமுகப் படலம் நடந்துச்சு. ஆனால், அதுல பெரியளவுல க்ளிக் ஆக முடியல. ஹீரோவுக்காக வெயிட் பண்றதைவிட சக்சஸ் ஆகிற படத்துல இருப்போம்ன்னு வில்லன், கேரக்டர் ரோல் என ரூட்டை மாத்திக்கிட்டேன்.‘அடங்கமறு’, ‘பேட்டை’, ‘டெடி’ என எனக்கான ஸ்பேஸ் கிடைச்ச படங்களைப் பண்ணினேன். அதன்பிறகு செய்த ‘சார்பட்டா பரம்பரை’ பெரிய பிரேக் கொடுத்துச்சு.
நான் தியேட்டர் பேக்ரவுண்ட்ல இருந்து வந்தவன். தியேட்டர்ல ஹீரோ, வில்லன் என பிரிச்சுப் பார்க்கமாட்டாங்க. எல்லோரும் எல்லாவிதமான கேரக்டர்சும் பண்ணுவாங்க. நடிப்பு மட்டுமல்ல, ஸ்டேஜை சுத்தம் பண்ற வேலையையும் ஆர்ட்டிஸ்ட்தான் செய்வாங்க.
அந்த வகையில் நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆல்டைம் விருப்பம்.கேரக்டர் பிடிச்சிருந்தா நடிப்பேன். அதுதான் என்னுடைய கொள்கை. எனக்கு வர்ற கேரக்டரைப் பொறுத்தவரை அதுல நான்தான் ஹீரோ. சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ அந்த கேரக்டருக்கு நான்தான் ஹீரோ.
நடிப்பை யாரிடம் கத்துக்கிட்டீங்க?
நடிகர் ஆரியிடம்தான் நடிப்புக்கான அடிப்படை இலக்கணத்தைக் கத்துக்கிட்டேன். ‘கூத்துப்பட்டறை’ ஜெயக்குமார் சாரிடம் சில காலம் கத்துக்கிட்டேன். இப்போது லிட்டில் தியேட்டர் என்ற குரூப்ல இருக்கிறேன். விடுமுறை நாட்களில் பல ஆதரவற்ற பள்ளிகளில் ஷோ நடத்துகிறோம்.ஆர்யா, துல்கர் சல்மான், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளீர்கள்.
அப்படி எந்த நடிகருடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருக்கு..?
எனக்கு அமைந்த படங்கள்தான் பல சிறந்த நடிகர்களுடன் ஸ்கிரீன் ஷேர் பண்ணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. ஒருத்தர் நல்லா இருந்தா, ‘உங்க காட்டுல மழை பெய்யுது’ன்னு வேடிக்கையா சொல்லுவாங்க.
அந்த மாதிரி இடத்துலதான் நான் இப்போ இருக்கிறேன்.அடுத்து, நீங்க சொன்ன நடிகர்கள் எல்லோருமே ஜாம்பவான்கள். பணிவானவர்கள். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் தலைக்கனம் இல்லாம எப்படியிருக்கணும் என்பதை அவங்ககிட்டதான் கத்துக்கிட்டேன்.
‘டான்சிங் ரோஸ்’ என்ற அடையாளத்தை எப்படிப் பார்க்கிறீங்க?
எல்லோரும் என்னை ‘டான்சிங் ரோஸ்’னுதான் கூப்பிடுறாங்க. அதையும் மீறி இப்போது ‘சபீர்’னு கூப்பிடுறாங்க. எப்படி கூப்பிட்டாலும் அவர்கள் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள். அது சந்தோஷம். எனக்கான அங்கீகாரம். ‘டான்சிங் ரோஸை’ உடைச்சு வேற ரோல் பண்ணணும்னு நினைச்சதில்லை. அப்படி நினைச்சா அது தேவையில்லாத பிரஷர்.
‘டான்சிங் ரோஸ்’ அடையாளத்தை உடைக்கணும்னு நினைச்சு எதாவது பண்ணி அதை உடைக்க முடியலைன்னா என்ன நடக்கும்? எதுவும் என்னிடம் இல்லை. எனக்கு வரும் வாய்ப்பு, டைரக்டர் சொல்வதை பெஸ்ட்டா பண்ணணும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
அதே சமயம் திறமையை வளர்த்துக்க பாக்சிங், களரி, குதிரையேற்றம், ஒர்க் ஷாப் என நிறைய முயற்சி எடுக்கிறேன். புதுசா கத்துக்க கூப்பிட்டா அதுல கலந்துக்கிற முதல் ஆள் நானாதான் இருப்பேன்.
யாருடன் ஸ்கிரீன் ஷேர் பண்ண ஆசையா இருக்கீங்க?
கமல் சார், மம்மூட்டி சார், சாய்பல்லவி.
சபீர் வாழ்க்கையில் பா.இரஞ்சித் யார்?
ஸ்பெஷல் பெர்சன். இந்தியா முழுசும் நான் தெரிய காரணமா இருந்தவர். அவர் எங்கே குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன்.
எஸ்.ராஜா
|