பிளாஸ் டிக் வீடு!



ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 40 கோடி டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகளை மனிதன் உருவாக்குகிறான். காற்று மாசுபாடு போல, பிளாஸ்டிக் மாசுபாடும் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தீங்கானவை என்று நிபுணர்கள் சொல்கின்றனர். அதனால் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காக பலரும் பல வழிகளில் முயன்று வருகின்றனர். இதில் முக்கியமான ஒரு வழிதான் பிளாஸ்டிக் வீடு.

மகாராஷ்டிராவின் சந்திரபூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் அமைந்திருக்கும் இரண்டு மாடி கொண்ட இந்த பிளாஸ்டிக் வீட்டைக் கட்டியிருக்கிறார் மருத்துவர் பால்முகுந்த் பலிவால்.
இந்த வீட்டைக் கட்டுவதற்காக சுமார் 13 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்திருக்கிறார். பெரிய ஹால், படுக்கையறை, முதல் மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள், குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய அறை என சகல வசதிகளுடனும் இந்த வீட்டை வடிவமைத்திருக்கிறார் பால்முகுந்த்.

கதவுகள், சுவர்கள், கூரைகள், ஃப்ளோர் டைல்ஸ், சீலிங் என அனைத்துக்குமே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியிருக்கின்றனர். 18 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட இந்த வீட்டின் பரப்பளவு, 625 சதுர அடிகள். ‘‘உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்து கவர்கள், அழகு சாதனப் பொருட்களின் பாட்டில்கள், பால் கவர்கள் என அனைத்து வகையான பிளாஸ்டிக் குப்பைகளையும் பயன்படுத்தி வீட்டைக் கட்டியிருக்கிறோம்.

இந்த வீட்டை பிரித்தெடுத்து, இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோய் பழையபடி ஒன்று சேர்க்க முடியும் என்பது இதன் சிறப்பு. இப்படி வீட்டை ஒன்று சேர்க்க அதிகபட்சம் ஐந்து மணி நேரமாகும்...’’ என்கிற பால்முகுந்தின் வயது 68. சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் மிகுந்தவர். பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.

தாவரவியல் பூங்காவிற்கு வருகின்ற தாய்மார்கள், தங்களின் குழந்தைக்குப் பால் கொடுக்க இந்த வீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; சுற்றுலா பயணிகளும் பார்வையிடலாம்.
‘‘தில்லி போன்ற மாநகரங்களில் மலை போல குவிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நாம் பார்க்க முடியும். பிளாஸ்டிக் குப்பைகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கமும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. ஆனாலும், பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் குப்பைகளைத் திசை திருப்ப நமக்கு உடனடியாக ஒரு தீர்வு வேண்டும்...’’ என்கிற பால்முகுந்த் கண்டறிந்த தீர்வுதான் இந்த பிளாஸ்டிக் வீடு.

ஆம்; பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கான மாற்றுவழிகளைத் தேடும்போதுதான், செங்கல், சிமெண்ட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற யோசனை அவருக்குத் தோன்றியிருக்கிறது. ‘‘முதலில் ஷாம்பு பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள் என நிலத்தில் பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்க வேண்டும்.

இப்படிச் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து, துகள்களாக மாற்ற வேண்டும். அந்த துகள்களை உருக்கி, கதவுகளாக, டைல்ஸாக  என்று வீடு கட்டத் தேவையான பாகங்களாக வார்க்க வேண்டும். வார்த்து எடுத்த பாகங்களைக் குளிர்விக்க வேண்டும். பிறகு கதவு, டைல்ஸின் மீது நமக்கு விருப்பமான வண்ணங்களை அடிக்கலாம். பாகங்கள் தயாரான பிறகு, திருகாணி கொண்டு அதை ஒன்று சேர்த்து பிளாஸ்டிக் வீடாக உருவாக்க முடியும்...’’ என்று, பிளாஸ்டிக் வீட்டைக் கட்டுவதற்கான வழிமுறைகளை நம்மிடம் பகிர்ந்தார் பால்முகுந்த்.

பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, அதை வீட்டின் பாகங்களாக வார்த்து, வீட்டைக் கட்டி முடிப்பதற்கு மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது. அதுவும் 9 லட்ச ரூபாயில் பிளாஸ்டிக் வீட்டைக் கட்டியிருக்கிறார் பால்முகுந்த். பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கான மாற்றுவழியைக் கண்டறியும் நோக்கில் இந்த வீட்டைக் கட்டியிருப்பதால், 5 லட்ச ரூபாய் மானியம் கிடைத்திருக்கிறது.  
‘‘சிமெண்ட்டால் கட்டப்படும் வீட்டுடன் ஒப்பிட்டால், பிளாஸ்டிக் வீட்டைக் கட்டுவதற்குத் தண்ணீர் தேவைப்படாது. சிமெண்ட் வீட்டில் விழும் விரிசல்கள் இதில் விழாது. சிமெண்ட் வீட்டைப் பராமரிப்பதற்கே தனியாக செலவு செய்ய வேண்டும். 20 அல்லது 25 வருடங்களில் பழுது பார்க்க வேண்டும்.

இத்தகைய பராமரிப்போ, பழுது பார்க்கும் வேலையோ பிளாஸ்டிக் வீட்டில் இருக்காது. மட்டுமல்ல, சிமெண்ட் வீட்டைவிட, அதிக நாட்களுக்குத் தாங்கும். துரு பிடிக்காது. பொதுவாக பிளாஸ்டிக் உருகுவதற்கு 250 டிகிரி வெப்பம் தேவைப்படும்; பிளாஸ்டிக் எரிவதற்கு 300 டிகிரி வெப்பம் தேவை. அதனால் எளிதில் தீப்பிடிக்காது, ஷாக் அடிக்காது. மரங்களினால் ஆன வீடுகளுடன் ஒப்பிடும்போது கூட, பிளாஸ்டிக் வீடுதான் பாதுகாப்பானது...’’ என்கிற பால்முகுந்தின் நோக்கமே, பிளாஸ்டிக் குப்பைகள் எல்லாம் இப்படி வீடாக மாற வேண்டும் என்பதாகும்.

தவிர, வீட்டின் கதவும், வடிவமைப்பும் மரத்தினால் ஆன வீட்டைப் போல காட்சியளிக்கிறது. முழுமையாக பிளாஸ்டிக்கால் ஆன வீடு என்று வீட்டைப் பார்வையிட்ட ஒருவரால் கூட ஊகிக்க முடியவில்லை. பால்முகுந்த் விளக்கிய பிறகே வீட்டைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. இதுபோக வீட்டின் வலிமைக்காக 2500 கிலோ ஸ்டீலைப் பயன்படுத்தி ஃப்ரேம் ஒர்க்கைச் செய்திருக்கின்றனர். 

வெளியில் இருக்கும் வெப்பநிலையைவிட, இந்த பிளாஸ்டிக் வீட்டுக்குள் 4 டிகிரி குறைவாக இருக்கிறது. ‘‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம்முடைய முக்கியமான பொறுப்பு. அந்தப் பொறுப்பை வெளிப்படுத்த என்னால் முடிந்த ஒரு சிறு வேலையைச் செய்திருக்கிறேன். அரசும், மக்களும் பிளாஸ்டிக் வீட்டை ஊக்குவிக்க வேண்டும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் பால்முகுந்த்.

த.சக்திவேல்