23 நாடுகள்... 155 பேர் வெளிநாட்டினர் பயணப்பட்டியலைப் பிடித்த மிடில் ஆப் ஜனவரி மதுரை



உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் ஒப்பற்ற பண்டிகையாக பொங்கல் திருநாள் கடந்து போயிருக்கிறது. இப்பண்டிகைக்கென தொன்மைப் பெருமைக்குரிய மதுரை கிராமங்கள் கலாசாரக் கலைகளும், விதவித ருசிமிகு உணவுகளும் பரிமாறி கொண்டாட்டம் கண்டிருக்கின்றன.

இந்த அற்புத கிராமக் கொண்டாட்டங்களையும், மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அரங்கேறும் வீரம் செறிந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு களித்திடவும், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் ஒவ்வொருவரும் ‘மிடில் ஆப் ஜனவரி மதுரை’ என்றே தங்கள் பயணப் பட்டியலில் குறிப்பெழுதுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஜனவரியிலும் மதுரையைத் தேடி வருகிற வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் கூட்டம் நாளுக்கு நாள் எகிறி நிற்கிறது.தமிழர் பழமைக் கலாசார பண்பாட்டு அடையாளங்களில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டினர், மதுரையைச் சுற்றிய தமிழர் கலாசாரம் கரையாத கிராமங்களைத் தேடுகின்றனர்.

இவர்களது ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் தினம் துவங்கி இரு நாட்கள் தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளிநாட்டவருக்கென மதுரையில் பொங்கல் விழா நடத்தி பூரிக்கிறது. வீரம் பொங்கும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வைத்தும் ஆச்சர்யப்படுத்துகிறது.
33 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த குதூகலம் இந்த ஆண்டு கூடுதல் கொண்டாட்டம் கண்டுள்ளது.

மதுரை மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகனிடம் பேசும்போது, ‘‘இம்முறை இலங்கை, மலேசியா துவங்கி ஃபிரான்ஸ், தைவான், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா என 23 நாடுகளின் 155 பேர் பதிவு செய்து வந்து, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமர்ந்து ரசித்து திரும்பியுள்ளனர். இவர்கள் தவிர சுற்றுலாத்துறையில் பதிவின்றி மதுரைக்குள் நுழைந்த வெளிநாட்டினர் எண்ணிக்கை பல நூறுகள் தொடுகிறது...’’ என்கிறார்.கைகளில் கேமரா, உள்ளத்தில் பரவசத்துடன் அரசு சிறப்பு வாகனத்தில் தமிழர் கலாசாரம் காணும் ஆவல் கொண்ட வெளிநாட்டினர் ஏற்றப்பட்டு, ஊமச்சிகுளம், திருமோகூர், கீழக்குயில்குடி, திடியன், துவரிமான், சோழவந்தான்... என மதுரையின் பழமை வரலாற்று பண்பாட்டு கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது வாடிக்கை.

இம்முறை பொங்கலுக்கு மறுநாள் இவர்கள் மதுரை அலங்காநல்லூர் பனைக்குளம் பகுதியில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஊர் எல்லையில் தமிழர் இசைக் கருவிகளுடன், தாரை தப்பட்டை முழங்க மாலையிட்டும், தரையில் கோலங்கள் வரைந்தும் வரவேற்று, தாகம் தீர்த்தனர். வெளிநாட்டுப்பெண்கள், கிராமப் பெண்களுடன் இணைந்து இனிப்பு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மணக்க மணக்க பொங்கல் பிரசாதம் பரிமாறப்பட்டது. வரலாற்றுச் சிறப்புக்குரிய கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைப் பார்வையிட்டு, தமிழர் வீர வரலாற்றுக் காட்சிகள் கண்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.

தொடர்ந்து அரங்கில், நையாண்டி மேளம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழர் பாரம்பரிய கலை
நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடத்தப்பட்டன. தங்கள் கேமராக்களால் ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கிக்கொண்ட இவர்கள், இதுவரை உணரப்படாத பரவச உவகையில் திளைத்தனர். முடிவாக அறுசுவை உணவருந்தி, மாலையில் மதுரை திரும்பினர்.

மறுநாள் சுற்றுலாத்துறை, மதுரை அலங்காநல்லூரில் நடந்த உலகப்புகழ் ஜல்லிக்கட்டிற்கு வாகனங்களில்அவர்களை அழைத்துச் சென்றது. இவர்களுக்காகவே இவ்வூர் வாடிவாசலின் இடப்புறம் ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு கிராமத்தினர் ‘சிறப்பு கேலரி’ அமைத்துத் தந்துள்ளதும் சிறப்பாகும். சீறிவரும் காளைகளை எதிர்கொண்டு அடக்கிக் காட்டும் தமிழர் வீரத்தை நேரில் கண்டு இவர்கள் புல்லரித்துப் போயினர்.

இந்த பரவசத்தை எங்கும் உணர்ந்ததில்லை...

- வெளிநாட்டினர் சிலிர்ப்பு!

* அமெரிக்காவைச் சேர்ந்த ரயன், ‘‘ஜல்லிக்கட்டு போட்டியை முதன்முறையாகப் பார்த்தேன். களத்தில் நேரடியாக மோதுகிற வீரத்தைக் கண்டு மெய்சிலிர்த்தேன். பார்க்கவே வித்தியாசமும், ஆச்சர்யமும்தான் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கட்டாயம் மதுரைக்கு வருவேன்...’’ என்றார்.

* இஸ்ரேலைச் சேர்ந்த ஓஸ்நாக், ‘‘முதல் முறையாக பொங்கல் விழாவையும், ஜல்லிக்கட்டையும் பார்க்கிறேன். நேரில் பார்த்த ஒவ்வொன்றும் அழகும், ஆச்சர்யமும் தருகிறது. தமிழர்கள் மீது தனி மரியாதை வருகிறது...’’ என்றார்.

* மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா, ‘‘பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், பிறந்தது வளர்ந்ததெல்லாம் மலேசியாதான். வீடியோக்களில் பார்த்ததற்கும், நேரிலும் நிறைய வித்தியாசம். இங்கே கலைகள் போற்றப்படுவதும், வீரத்துடன் களத்தில் காளைகளுடன் காளையர் தீரத்துடன் விளையாடுவதும் ‘நானும் தமிழினப் பெண்’ என்பதில் கர்வம் கொள்ள வைக்கிறது...’’ என்றார்.

* ஃபிரான்சைச் சேர்ந்த யான், ‘‘கிராம மக்களின் அன்பான வரவேற்பு மறக்க முடியாதது. கலைஞர் பெயரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அற்புதமானது. மூர்க்கமான காளைகளை, நெஞ்சுரத்துடன் வீரர்கள் அடக்கியதைக் கண்டபோது நானடைந்த பரவசநிலையை இதுவரை வேறெங்கும் உணர்ந்ததில்லை...’’ என்றார்.

* ஜெர்மனியைச்சேர்ந்த ஆண்டே தம்பதியினர், ‘‘தமிழ்நாட்டோட மதுரைக்கு வந்து போக ரொம்ப நாள் ஆசை. முதல்முறையாக இப்போ இங்கே வந்தது ரொம்ப ஒர்த்தா இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் இந்த அனுபவம் ரொம்பப் புதுசு. கிராமத்து டான்ஸ் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு. தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் வணக்கம்...’’ என்றனர்.

மாடுபிடி வீரராக மாறிய அயர்லாந்து  பொறியாளர்!

அயர்லாந்தைச் சேர்ந்தவர் கொன் ஆண்டனி கொலன். சென்னையில் 12 ஆண்டுகள் முன்பு டெக்னாலஜி நிறுவனத்தை துவக்கி, தற்போது சென்னை கிண்டியில் வசித்து வருகிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு மாடுபிடி வீரராக வந்திருந்த இவரிடம் பேசினோம்...‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளை டிவியில் பார்த்து அதன் மீது ரொம்பவும் காதல் வந்திருச்சு. ஜல்லிக்கட்டு காளைகளையும், அதனை மடக்கிப் பிடிக்கும் வீரர்களையும் பார்த்த எனக்கு நாமும் மாடு பிடிக்கணும்னு ஆசை வந்துச்சு.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்னு மதுரை மாவட்ட நிர்வாகத்தோட அறிவிப்பை பேப்பர்ல பார்த்தேன். வெளிநாட்டு மென்பொறியாளரான நானும் என்னுடைய பெயரையும் மாடுபிடி வீரராக பதிவு செஞ்சேன். எனக்கு அனுமதி அளித்து டோக்கனும் கிடைச்சது. அதனை எடுத்துக்கிட்டு, ரொம்பவே உற்சாகத்தோடு சென்னையிலிருந்து அலங்காநல்லூருக்கு வந்தேன்.

மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்தேன். இன்னும் சில மணி நேரத்துல நான் களத்துல இருப்பேன், காளையை அடக்குவேன்னு உள்ளத்துக்குள்ளே உற்சாகம் பெருக்கெடுத்தது. என்னை அங்கே பார்த்த பலரும் சுற்றுலா வந்தவர் மாறி வந்துட்டதா நினைச்சு, வாடிவாசல்ல கேலரி இருக்கு அங்கே போங்கன்னு சொன்னாங்க.

நான் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வரல, வாடிவாசல்ல இருந்து வர்ற காளையை அடக்குற ஒரு வீரனா வந்திருக்கேன்னு விளக்கம் சொன்னேன். அத்தனை பேரும் ஆச்சர்யத்தோடு பார்த்தாங்க. சென்னையில் குடியிருப்பதையும், ஆதார் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் என்னை உடல் பரிசோதனைக்கு உள்ளே அனுப்பினாங்க.

மது குடிச்சிருக்கேனா? எடை, உயரம் என்ன? ரத்த அழுத்தம் உள்ளதான்னு டாக்டர்கள் பரிசோதிச்சாங்க. அத்தனையிலும் பாசாயிட்டேன். என் வயதை 53ன்னு சொன்னேன். ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 40 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே விளையாட அனுமதிக்க முடியும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லி என்னை நிராகரிச்சுட்டாங்க.

நானொரு மாரத்தான் வீரர், காளையை அடக்குற நல்ல உடல் திடகாத்திரம் இருக்குன்னு எவ்வளவோ சொல்லியும், சட்ட விதிகளைக் காட்டி டாக்டர்கள் மறுத்துட்டதால போட்டியில் கலந்துக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புறேன். என்னைப் பொருத்தவரை வீர விளையாட்டுல உலகளவுல ஜல்லிக்கட்டுதாங்க ஃபர்ஸ்ட்... மற்றதெல்லாம் நெக்ஸ்ட்தான்...’’ என்கிறார்.

செய்தி: செ.அபுதாகிர்  

படங்கள்: வெற்றி, நிவேதன், சண்முகராஜா