செஸ் விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குவது எப்படி?



சமீபத்தில் கேல் ரத்னா விருதினைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார் உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ். செஸ் விளையாட்டிற்காக இந்த உயரிய விருதினைப் பெறும் இரண்டாவது இந்தியர் மற்றும் தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்குமுன் கேல் ரத்னா விருது 1991 - 92ல் முதன்முதலாக  உருவாக்கப்பட்டபோது அதன் முதல் விருதினைப் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் செஸ் விளையாட்டிற்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது. காரணம், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இளம் வயதில் டி.குகேஷ் வசப்படுத்தினார் என்பதே. 
இதனால், இப்போது செஸ் விளையாட்டு இந்திய அளவில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.இந்தியாவில் கிரிக்கெட் எப்படி அனைவரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதேபோல் இப்போது செஸ் விளையாட்டும் நிறைய குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் ஆர்வத்தை உண்டாக்கி உள்ளது.

குறிப்பாக இந்திய அளவில் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதல் இன்டர்நேஷனல் மாஸ்டர், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் உலக ஜூனியர் சாம்பியன், முதல் உலக சாம்பியன் என அனைத்து பட்டங்களையும் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.சுமார் எழுபது ஆண்டுகளாக தமிழ்நாடு செஸ் விளையாட்டில் கோலோச்சி வருகிறது. இதற்கான முதல் விதையைத் தூவியவர் மானுவல் ஆரோன்.

இவர்தான் 1961ம் ஆண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். அதுமட்டுமல்ல. ஒன்பது முறை தேசிய சாம்பியனாகவும் திகழ்ந்தார். தமிழகத்தில் செஸ் விளையாட்டை மேம்படுத்த உறுதுணையாகவும் இருந்தார்.  பின்னர் 1988ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் எனப் பெயரெடுத்தார். தொடர்ந்து 1980களில் இளம் செஸ் வீரர்களுக்கு ஆதர்சமாக விளங்கினார்.

இப்போது டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட இளம் சாதனையாளர்கள் அந்த இடத்தில் முன்னுதாரணங்களாக நிற்கின்றனர். இதனால் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இன்னும் கூடியிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு செஸ் விளையாட்டில் சிறந்து விளங்குவது குறித்து தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் செயலாளர் ஸ்டீபன் பாலசாமியிடம் பேசினோம்.

‘‘தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் 1947ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட ஒரு பழமையான சங்கம். அன்றைக்கு ஆளுமையானவர்கள் சங்கத்தை வழிநடத்தினர். பொள்ளாச்சி மகாலிங்கம், இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன், ராம்கோ நிறுவனத்தின் வெங்கட்ராம ராஜா, இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அசோசியேஷனின் தலைவர்களாக இருந்தனர்.
 
இவர்கள் தமிழகத்தில் செஸ் விளையாட்டை வளர்த்தெடுக்க பெரிதும் துணைபுரிந்தனர். தவிர, இவர்கள் அகில இந்திய செஸ் அசோசியேஷனின் தலைவர்களாகவும் இருந்ததால் செஸ் விளையாட்டை இந்தியா முழுவதும் பரவலாக்கினர்.  

இதில் தமிழகத்தில் செஸ் விளையாட்டு வேகமாக வளர முக்கிய காரணம், இந்தியாவின் ‘காட்ஃபாதர் ஆஃப் செஸ்’ எனச் சொல்லப்படும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மானுவல் ஆரோன் சார்தான். அவர் அன்று பலருக்கு ஆதர்சமாக விளங்கினார். 

தமிழகத்தில் செஸ் விளையாட்டை முன்னுக்குக் கொண்டு வந்தார். இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றவர். 9 முறை தேசிய சாம்பியனாகவும் இருந்தார். அப்போதெல்லாம் தேசிய போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். அதனால், 18 ஆண்டுகள் மானுவல் ஆரோன் சார்தான் தேசிய சாம்பியனாக வலம் வந்தார். இப்போது அவருக்கு 89 வயது ஆகிறது.   

இவரும் மற்றவர்களும் இணைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அசோசியேஷனை பலம் வாய்ந்ததாக மாற்றினர். குறிப்பாக செஸ் விளையாட்டில் ஒரு சிஸ்டத்தைக் கொண்டு வந்தனர். அதன்வழியாக செஸ் விளையாட்டிற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் நிறைய ப்ரொமோஷன் செய்தனர்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் ப்ரொமோஷன் பண்ணினர். இதனால் செஸ் விளையாட்டில் பலர் ஆர்வத்துடன் சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். இது தமிழ்நாட்டை இந்திய அளவில் டாப் லெவலுக்குக் கொண்டு சென்றது.  

மானுவல் ஆரோன் சாரின் சிறந்த ஆட்டம் விஸ்வநாதன் ஆனந்த்தை ஈர்த்தது. அப்படியாக விஸ்வநாதன் ஆனந்த் 1980களில் வந்தார். அவரும் சிறப்பாக விளையாடினார். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக பிரகாசித்தார்.  

அப்போது இன்டர்நேஷனல் மாஸ்டர் என மானுவல் ஆரோன் சார் ஒருவரே இருந்தார். அந்நேரம் அவருக்குப் பெரிதாக எக்ஸ்போஷரும் கிடைக்கவில்லை. விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டரான பிறகு அவருக்கு லைம்லைட் கிடைத்தது. நிறைய குழந்தைகளும், இளைஞர்களும் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு செஸ் விளையாட்டில் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

அதேநேரம் நிறைய பப்ளிசிட்டியும், நிதியுதவிகளும் கிடைத்தன. இதனால் ஆர்வமாகவும், நுணுக்கமாகவும் விளையாட ஆரம்பித்தனர். நாங்களும் ஊக்கப்படுத்தியதால் அடுத்தடுத்து கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகினர். 

ஒருகாலத்தில் 35, 40 வயதில்தான் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவார்கள். ஆனால், இன்றைக்கு 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகின்றனர். அந்தளவுக்கு தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.  

இன்னும் சொல்ல வேண்டுெமன்றால் இன்றைக்கு இந்தியாவில் மொத்தம் 130 பேர் இன்டர்நேஷனல் மாஸ்டராக இருக்கின்றனர். இதில், 44 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டுக்காரர்கள். இதேபோல், இந்தியாவில் 85 பேர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர். இதில் 32 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் நாம்தான் இருக்கிறோம்.

கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவரின் சிறப்பான விளையாட்டைப் பார்த்து நிறைய குழந்தைகள் செஸ் விளையாட முன்வந்தனர். பெற்றோரும் தங்கள் குழந்தைகளைச் செஸ் விளையாட ஊக்கப்படுத்தினர். இப்போது குகேஷ், உலகச் சாம்பியன் ஆனதும் இந்த ஆர்வம் இன்னும் கூடியிருக்கிறது.

நான் எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு செஸ் அசோசியேஷனின் செயலாளராக இருக்கிறேன். 2017ம் ஆண்டு செயலாளராக நான் வந்த போது தமிழகத்தில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை செஸ் வீரர்-வீராங்கனைகள் இருந்தனர். 

இன்று சுமார் 30 ஆயிரம் வரை உள்ளனர். முன்பு 25 டூ 30 டோர்னமென்ட்கள் மட்டுமே நடந்தன. இப்போது 200 டோர்னமென்ட்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு தமிழ்நாடு செஸ் அசோசியேஷனின் சப்போர்ட் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மற்றும் இந்திய அரசும் உறுதுணையாக இருக்கின்றன.

கடந்த 2022ம் ஆண்டு 44வது செஸ் ஒலிம்பியாடை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. நாங்களும் நிறைய வீரர், வீராங்கனைகளைப் பதிவு செய்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.
மாவட்ட வாரியாக செஸ் அசோசியேஷன்களும் இருக்கின்றன.

அதன்வழியாக நிறைய போட்டிகளும் நடத்துகிறோம். இதனால், ஒருகட்டத்தில் அனைவரின் ஊக்கத்தாலும், தனிப்பட்ட ஆர்வத்தாலும் சிறப்பாக விளையாடி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்கின்றனர். அடுத்து உலகச் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் இன்னும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அதனால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் நிறைய சாம்பியன்கள் வருவார்கள். தமிழ்நாடும் என்றைக்கும் செஸ் விளையாட்டில் உலக அளவில் சிறந்த இடமாகத் திகழும்.
அதற்கான விஷயங்களை எங்கள் அசோசியேஷனும் தொடர்ந்து முன்னெடுக்கும்...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் ஸ்டீபன் பாலசாமி.

வரலாறும்... சதுரங்க வல்லபநாதர் கோயிலும்...

செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு உதாரணமாக சதுரங்கப் வல்லபநாதர் கோயில் குறிப்பிடப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் பூவனூரில் இருக்கிறது இந்தக் கோயில். தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவராக சதுரங்க வல்லபநாதர் இருக்கிறார். இங்குள்ள இறைவன் சித்தர் வேடத்தில் வந்து சதுரங்கப் போட்டியில் வென்று அம்மனை மணமுடித்ததாக தலவரலாறு சொல்கிறது.

இதனால், சதுரங்கப் போட்டியில் தங்கள் குழந்தைகள் ஜெயிக்க பெற்றோர் பலர் இந்த இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாடை பிரதமர் மோடி தொடங்கி வைத்தபோது இந்தக் கோயில் பற்றியும், பண்டைக்காலம் தொட்டே சதுரங்கம் தமிழகத்தில் விளையாடப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்போது இந்தக் கோயில் பலருக்கும் தெரிய வந்தது. இதுமட்டுமல்ல. தமிழகத்தில் கீழடி உள்பட பல்வேறு அகழ்வாராய்ச்சிகளிலும் சதுரங்க காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சதுரங்கம் பல காலமாகவே தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

பேராச்சி கண்ணன்