Must Watch
ஸ்டிங் சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லிங் அனுபவம் வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘ஸ்டிங்’ எனும் ஆங்கிலப்படம். ஒரு பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ப்புத் தந்தையுடன் வசித்து வருகிறாள் சிறுமி சார்லட். துடிப்பான சிறுமியான சார்லட், அடிக்கடி தனியாக வெளியில் உலாவுவது வழக்கம். அவளுக்கு ஒரு சிலந்தி கிடைக்கிறது. வீட்டுக்கு அந்தச் சிலந்தியை எடுத்து வந்து, ஒரு செல்லப்பிராணி போல யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறாள். அதற்கு ஸ்டிங் என்று பெயரையும் வைக்கிறாள்.
மற்ற சிலந்திகளைப் போல இல்லாமல் நாளுக்கு நாள் அதன் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் ஸ்டிங் பற்றிய ரகசியம் வெளியில் தெரிந்துவிடுகிறது. ஆனால், ஸ்டிங்கோ பெரிதாக வளர்ந்து மனிதர்களைத் தாக்க ஆரம்பிக்கிறது. இது சார்லெட்டுக்கும் பெரிய பிரச்னையாகிறது. சார்லட் எப்படி ஸ்டிங்கிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றுகிறாள் என்பதை திரில்லிங்காகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. எங்கேயும் சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாகக் கொண்டு போயிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் கியா ரோச்சி டர்னர்.
விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்திப்படம், ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.தொண்ணூறுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. சிறு வயதிலிருந்தே வித்யாவும், விக்கியும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். தேனிலவுக்காக கோவாவுக்குச் செல்கின்றனர். முதலிரவை வீடியோவாக்கலாம் என்கிறான் விக்கி. தப்பான ஆள்கிட்ட மாட்டிக்கிட்டோம் என்று விக்கியிடம் சண்டை போடுகிறாள் வித்யா.
‘நாம் நெருக்கமாக இருப்பதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டால், பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட அந்த வீடியோவைப் பார்த்தால் நாம் சேர்ந்து விடுவோம். நல்ல நினைவாகவும் இருக்கும். வெளிநாட்டினர் மத்தியில் இப்படி வீடியோ எடுப்பதுதான் டிரெண்டிங்’ என்று வீடியோ எடுக்க வித்யாவைச் சம்மதிக்க வைக்கிறான் விக்கி.
வித்யா - விக்கியின் முதலிரவு சிடி திருடுபோக, சூடு பிடிக்கிறது நகைச்சுவை திரைக்கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையைத் தக்கவைத்திருப்பது இப்படத்தின் பலம். விக்கியாக கலக்கியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். கலகலப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ் சாண்டில்யா.
ஜிக்ரா
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்திப்படம், ‘ஜிக்ரா’. அம்மாவும், அப்பாவும் இறந்த பிறகு ஒரு தாயைப் போல அங்கூரை வளர்க்கிறாள் அவனுடைய சகோதரியான சத்யா. அங்கூரும், சத்யாவும் எப்போதுமே ஒன்றாகவே இருக்கின்றனர். இருவரும் வளர்ந்து பெரியவர்களான பிறகு நடக்கும் ஒரு சம்பவம் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
ஒரு பிசினஸ் பயணமாக உறவினருடன் வெளிநாட்டுக்குச் செல்கிறான் அங்கூர். போதைப் பொருள் வைத்திருந்தான் என்று அங்கூர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவன் சென்றிருக்கும் நாட்டில் போதைப்பொருள் வைத்திருந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். சிலநேரம் மரண தண்டனைகூட கிடைக்கலாம். ஒரு வேளை அங்கூர் அப்பாவியாக இருந்தாலும் கூட, போதைப்பொருள் வழக்கிலிருந்து அவன் வெளிவருவது கடினம்.
தன் சகோதரனுக்கு நேர்ந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நிலைகுலைந்து போகிறாள் சத்யா. அவள் எப்படி அங்கூரைக் காப்பாற்றுகிறாள் என்பதே மீதிக்கதை. சகோதர பாசத்தை மையமாக வைத்து ஒரு திரில்லிங் படத்தைக் கொடுத்திருக்கின்றனர். இதன் இயக்குநர் வாசன் பாலா.
பாணி
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மராத்திப் படம், ‘பாணி’.மகாராஷ்டிராவில் உள்ள நந்தேடு மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறான், ஹனுமந்த் பாபு. அவனுடைய கிராமம் தண்ணீர் பஞ்சத்தால் வறண்டு போய் கிடக்கிறது. இந்நிலையில் ஹனுமந்திற்குத் திருமணம் செய்ய பெண் பார்க்கின்றனர். கிராமத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்னை காரணமாக அந்தப் பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறாள். தன்னுடைய கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைச் சரி செய்கிறேன்.
அதுவரை எனக்காகக் காத்திருக்க முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்கிறான் ஹனுமந்த். ஹனுமந்தின் கோரிக்கையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டாளா? தண்ணீர் பிரச்னையை ஹனுமந்த் எப்படி சரி பண்ணுகிறான்? என்பதை அறிந்துகொள்ள படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். அசலான கிராமத்து வாழ்க்கையையும், அங்கு மக்கள் படுகிற கஷ்டங்களையும், தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம், சமீபத்தில் வெளியான சூழலியல் சார்ந்த படங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் இயக்குநர் அதிநாத் எம். கோதரே.
தொகுப்பு: த.சக்திவேல்
|