ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர். 150 வருடங்களுக்கு முன்பு தான் துணிகளைத் துவைக்கும் இயந்திரமான வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது துணிகளைத் துவைப்பதோடு மட்டுமல்லாமல், காயவைத்தும் தந்துவிடும் அளவுக்கு நவீன வாஷிங் மெஷின்கள் வந்துவிட்டன. காட்டன், பட்டு, ஜீன்ஸ், லினன் என ஒவ்வொரு வகையான துணிகளைத் துவைக்கவும் வாஷிங் மெஷினில் தனித்தனியான புரோகிராம்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு வாஷிங் மெஷின் தொழில்நுட்பம் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் மனிதர்களை சுகாதார முறையில் குளிக்க வைப்பதற்காக மனித வாஷிங் மெஷின் வந்திருக்கிறது. புதுப்புது கண்டுபிடிப்புகளின் தாய் வீடான ஜப்பானில் இயங்கி வரும் ‘சயின்ஸ் கோ’ என்ற நிறுவனம்தான் இந்த வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த வாஷிங் மெஷினின் செயல்பாடு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. நமது தோல் மற்றும் மனநிலையின் தன்மைக்கு ஏற்ப நம்மை குளிக்கவைக்கும். அதாவது ஸ்பாவில் கிடைக்கும் அனுபவத்தைத் தரும். முதலில் நாம் மெஷினில் ஏறி, கால்களை நீட்டிப் படுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதமான சூட்டில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்படும்.
அதற்குப்பிறகு நம்மைச்சுற்றியும் சிறிய குமிழ்களுடன் வேகமாக நீர் பீய்ச்சி அடிக்கப்படும். அந்தக் குமிழ்கள் உடைந்து நமது உடலில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்யும். 15 நிமிடங்களில் நம்மைக் குளிப்பட்டி, காய வைத்துவிடும். உடலில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வது இதன் தனிச்சிறப்பு.
விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு இந்த மனித வாஷிங் மெஷின் வரப்போகிறது. அடுத்த வருடம் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒரு தொழிற் கண்காட்சியில் ஆயிரம் பேர் இலவசமாக இந்த மெஷினைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
த.சக்திவேல்
|