விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் குற்றவாளி!



சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளியை, விவசாயம் செய்வதற்காக 90 நாட்கள் பரோலில் விடுவித்துள்ளது கர்நாடகாவின் உயர் நீதிமன்றம் என்பதுதான் அந்தச் செய்தி.

அதென்ன பரோல்?

கோடை விடுமுறையைப் போல சிறைவாசத்திலிருந்து கிடைக்கும் விடுமுறைக்குப் பெயர்தான், பரோல். இது சிறைச்சாலையின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டது. குறிப்பாக சிறைச்சாலையில் எந்தவித பிரச்னையும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்துகொண்ட சிறைக் கைதிகளுக்கு மட்டுமே பரோல் கிடைக்கிறது. 
அதுவும் அந்தக் கைதிகள் தங்களின் குடும்பங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், உறவினர்களின் மரணம், நோய்க்கான சிகிச்சை, மகன், மகள் போன்ற நெருங்கிய உறவுகளின் திருமணம், சொத்துப்பிரச்னை போன்ற முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே பரோல் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் எல்லோருக்குமே பரோல் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஒரு கைதி பரோலில் 10 நாட்கள் செல்கிறார் என்றால், அந்த 10 நாட்களைச் சிறைத்தண்டனையிலிருந்து கழிக்க மாட்டார்கள். மொத்த சிறைத்தண்டனைக் காலத்துடன் சேர்த்து, அந்த 10 நாட்களும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

எந்த காரணத்துக்காக பரோல் வழங்கப்பட்டதோ அதைத் தவிர வேறு செயல்களில் ஈடுபடக்கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறைச்சாலைக்குச் சென்று கையொப்பம் இட வேண்டும்.

கையொப்பம் இடுவதற்கு வரவில்லை என்றாலோ அல்லது வேறு செயல்களில் ஈடுபட்டாலோ  பரோல் ரத்து செய்யப்பட்டு, மறுபடியும் சிறையில் அடைக்கப்படுவார்.

இப்படியான சட்டக் கட்டுப்பாடுகள் நிறைந்த பரோல், விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்க காரணம்.கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் கைதியின் பெயர், சந்திரா.

இவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் வெளியில் வரவில்லை. 2014ம் வருடம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2018ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆக மொத்தம், 10 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார் சந்திரா.

கர்நாடக மாநிலம் ரமணகாரா மாவட்டத்திலிருக்கும் சித்ததேவரஹள்ளி எனும் கிராமத்தில் சந்திராவின் குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கே விவசாயம் செய்வதை மேற்பார்வையிட சந்திராவின் குடும்பத்தில் அவரைத் தவிர, வேறு ஆண் உறுப்பினர்கள் யாரும் இல்லை. 

ஆகவே விவசாயம் செய்ய பரோல் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார் சந்திரா. கடந்த செப்டம்பர், 23ம் தேதியன்று சந்திராவின் பரோலை பெங்களூருவின் மத்திய சிறை அதிகாரி நிராகரித்துவிட்டார். பிறகு தனக்கு பரோல் வேண்டும் என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சந்திரா.

கர்நாடகாவின் உயர்நீதிமன்ற நீதிபதி சந்திராவின் பரோல் கோரிக்கையை ஏற்று, அவரது குடும்ப நிலத்தில் விவசாயம் செய்வதற்காக 90 நாட்களுக்குப் பரோல் வழங்கியுள்ளார்.
கடந்த 11 வருடங்களில் சந்திராவுக்கு ஒருமுறை கூட பரோல் வழங்கப்படவில்லை; மற்றும் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்ற அடிப்படையில் நீதிபதி பரோல் வழங்கியிருக்கிறார்.

இந்த 90 நாட்களில் சட்டத்துக்கு விரோதமான எந்த செயல்களிலும் சந்திரா ஈடுபடக்கூடாது;  வாரத்தின் முதல் நாளில் வீட்டுக்கு அருகிலிருக்கும் காவல்நிலையத்துக்கு வந்து கையொப்பம் இட வேண்டும் என்பது சந்திராவுக்கான அழுத்தமான நிபந்தனை. அவர் கையொப்பம் இடவில்லை என்றால் கூட பரோல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். சந்திராவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரோலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

த.சக்திவேல்