சிறுகதை-கேளடி கண்ணம்மா...
‘‘ஏ புள்ள அருக்காணீ... உம் புருசனை வெள்ளனே நாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்லு. வண்டி கட்டிக்கிட்டு தெங்காசி ரயில்வே டேசனுக்கு போவணும். பேத்தி பொண்ணு பட்டணத்திலிருந்து வருது...’’பெரியவரைக் கண்டதும் ஏற்கனவே வத்தலாய் இருந்த அருக்காணியின் உடம்பு மரியாதையில் மேலும் பாதியாய் வளைந்தது.
‘‘சந்தோசங்க ஐயா. மாப்பிள்ள தம்பியும் வர்றாவளா?’’
‘‘பேரப்பிள்ளைக்கு லீவு இல்ல. பேத்தி பொண்ணு மட்டும்தான் வர்றா. அருக்காணி... அப்படியே கிட்டுவ செவ்வளனீ ரெண்டு குல கொணாந்து வீட்டில போடச் சொல்லு. ஆச்சி கிட்ட வேற எதுவும் வேல கிடக்கான்னு கேட்டுகிட சொல்லு.
கிழவி வீட்டை அதகளம் பண்ணுது பேத்தி வர்றான்னு...’’‘‘ஐயா... நம்ம காட்டு பச்ச வேர்க்கடலை அம்புட்டு ருசியா இருக்கும். அம்மிணிக்கு கொணாந்து தாரேன். ஆத்தாள அவிச்சுக்குடுக்க சொல்லுங்க...’’ரயில் தென்காசி ஸ்டேஷனில் நுழைந்து, வேகத்தை குறைத்துக்கொண்டு, மூச்சிரைக்க முதல் பிளாட்பாரத்தில் நிற்க... பேக்கை முதுகில் மாட்டிக்கொண்டு இறங்கினாள் பாரதி.
அதோ தாத்தா... ஓடிப்போய் அவரை சிறுபிள்ளை போல கட்டிக் கொண்டாள். தாத்தா கண்களில் கண்ணீர் கரைகட்ட பேத்தியை அணைத்துக் கொண்டார்.‘‘வாடா கண்ணு... போன தடவை பாத்ததுக்கு இளச்சுப் போயிட்டியே..?’’ என்றார் ஆதங்கத்துடன். பாரதியைப் பார்த்ததும் ஆச்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை ‘‘வாடி பாரதி! மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம். கல்யாணமான புதுசுல விருந்துக்கு ரெண்டு பேரும் வந்தது...’’ ‘‘சரி கிழவி... பேசிக்கிட்டிருக்காம முதல்ல அவளுக்கு குடிக்க ஏதாவது கொடு. ராத்திரி புள்ள எப்ப சாப்ட்டதோ?’’‘‘கண்ணு... பல்லு விளக்கிட்டு வா. காபி சேத்து தாரேன். உனக்கு பிடிக்கும்னு திரட்டுப்பால் கிளறி வச்சிருக்கேன். அங்கதான் வேல... வேலன்னு அலைவ. இங்க நல்லா ரெஸ்ட் எடு...’’ என்றாள் ஆச்சி.
தாத்தா வீடு எப்பவுமே பாரதிக்கு பிடித்த இடம். இயற்கை எழில் கொஞ்சும் இலஞ்சி அவர்கள் பூர்வீக கிராமம். மாளிகை போல பெரிய பழைய காலத்து வீடு. பட்டாளையில் மாட்டி இருந்த தேக்கு மர ஊஞ்சல். கொல்லைப்புறத்தில் பவளமல்லி மரத்தின் கீழ் இருந்த கல் பெஞ்சு. அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடங்கள்.
இரவு சாப்பிட்டதும் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்கச் சென்றாள். தேக்கு மரக்கட்டிலும், இலவம் பஞ்சு மெத்தையும், இதமான தூக்கத்தை தர, ரொம்ப நாளைக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்கினாள்.தூக்கம் பாரதியை இனிமையாகத் தழுவினாலும், அவள் அம்மாவும், அப்பாவும் தூக்கம் தொலைத்து தவித்தனர். எப்போதும் மாப்பிள்ளையுடன் வரும் பாரதி இந்தத் தடவை தனியாக வந்தபோதே, மாப்பிள்ளையிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது.
பாரதி தானாகவே ஆரம்பித்தாள்..‘‘அப்பா... கோகுலுக்கும், எனக்கும் எப்பவும் பிரச்னைதான். எங்களுக்குள்ள ஒத்து வரவேயில்ல.
தினமும் சண்டைதான். அவனோட போராட முடியாது. அவன் எனக்கு செட்டாக மாட்டான். பேசாம டிவோர்ஸ்ஸுக்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்...’’ என்றதும் சுந்தரமும், வசந்தாவும் ஆடிப் போனார்கள்.‘‘என்னம்மா... கல்யாணமாகி ஆறு மாசமாகல... இப்படியொரு வார்த்த சொல்றியே?’’ என்றார் ஆதங்கத்துடன். ‘‘அப்பா... எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல... அனுசரிச்சுப் போன்னு அட்வைஸ்ஸ மட்டும் ஆரம்பிச்சுராதீங்க. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்...’’ என்றாள் தீர்மானமாக.
அடுத்து வந்த நாட்களிலும், அவள் உம்மென்று இருக்க, சுந்தரம் மெதுவாக ‘‘ஏன் பாரதி... ஒரு வாரம் லீவு போட்டுட்டு இலஞ்சிக்கு தாத்தா வீட்டுக்கு போயிட்டு வாயேன்.
தாத்தா, ஆச்சிக்கும் சந்தோஷமாக இருக்கும்...’’பாரதிக்கும் அது சரியாகப்பட்டது. ஆச்சி வீடு அவளுக்கு ரொம்ப பிடித்த இடம். அடுத்த நாளே டிக்கெட் போட்டு தென்காசிக்குக் கிளம்பினாள். அவள் ஊருக்கு கிளம்பியதும் சுந்தரமும், வசந்தாவும் பாரதிக்கு தெரியாமல் கோகுலை போய் பார்த்தனர்.
‘‘வாங்க மாமா... வாங்க அத்தை...’’ தன்மையாய் வரவேற்றான் கோகுல்.‘‘மாப்பிள்ளை... பாரதி ஏதோ சிறுபிள்ளைத்தனமா நடந்துக்கறா... நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீங்க...’’ என்றார் சுந்தரம்.
‘‘மாமா... உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. தப்பா நினைச்சுக்காதீங்க. பாரதி ரொம்ப பொஸஸிவ் டைப். 24 மணி நேரம் நான் அவள் கட்டுப்பாட்டிலேயே இருக்கணும்னு நினைக்கிறா... ஆபீஸ் போனாலும், நான் என்ன செய்றேன்... எங்க சாப்பிடுறேன்... யார் கூட பேசுறேன்... எல்லாம் அவளுக்கு தெரியணும். எல்லாத்துக்கும் சண்டைதான். நான் பார்த்துப் பார்த்து செஞ்சாலும் அவளுக்கு அது பெருசா தெரியல.
எனக்கு பர்சனல் ஸ்பேஸ் கொஞ்சம் கூட கிடையாது. அவளா வழிக்கு வரட்டும். இந்தப் பிரிவு கூட நல்லதுக்குத்தான். அவகிட்ட ஏதாவது மாற்றம் வருதான்னு பாப்போம்...’’ மாப்பிள்ளையை சமாதானப்படுத்தினாலும், பாரதியின் பிடிவாதம் தெரிந்த விஷயம் என்பதால் கவலையுடன் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.நிம்மதியாகதூங்கி எழுந்த பாரதி, பல் தேய்த்துவிட்டு, ஆச்சி கொடுத்த காபியுடன் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த தோட்டத்து கல்பெஞ்சில் அமர்ந்தாள்.
‘‘ஆச்சி... தாத்தா எங்க? வயக்காட்டுக்குப் போயிட்டாரா? இந்த வயசான காலத்துல எதுக்கு காலையில எந்திரிச்சு இப்படி ஓடுறாரு? கால சாப்பாடு?’’
‘‘இல்லட்டீ... புள்ள வந்திருக்குது... நான் சாப்பிட வந்துடுவேன்னு, சொல்லிட்டுதான் போயிருக்காரு. வழக்கமா அருக்காணி, இல்லன்னா செம்பருத்தி கொண்டு போய் குடுத்துடுவாளுக. களத்து மேட்டிலேயே சாப்டுட்டு ஒரேடியா மதியம் வந்து சேருவாரு...’’‘‘ஏன் ஆச்சி... களத்து மேட்டுல ஒரே கலகலப்பா இருக்கும்ல... நான்தான் பார்த்திருக்கேனே. உன்கிட்டதான் கோவமா பேசுறாரு.
அங்க செம்பருத்தி... செம்பவம்... பேச்சியம்மானு களத்து மேட்டுல என்ன கலகலப்பா எல்லாத்தையும் கிண்டல் அடிச்சு பேசுறாரு...’’‘‘ஆமாம்ட்டீ... உங்க தாத்தா எசப் பாட்டு பாடுனா அம்புட்டு பொண்டுகளும், நாத்த கையில வச்சுக்கிட்டு, போட்டி பாட்டு பாடுவாளுக. அதுக்கு எசவா இவரும் பாடுவாரு. அவளுகளால இவர செயிக்க முடியாது. ஒரே பாட்டும் கூத்துமா எடம் கள கட்டிடும். அதுலயும் பொன்னுத்தாயின்னு ஒரு கிழவி இருக்கா... அவ பாட்டோட நிக்காம, ஆட்டம் வேற போடுவா. நான் சில நேரம் சாப்பாடு கொண்டுகிட்டு போவேன். அப்ப என்னையும், அவரையும் சேர்த்து வச்சு கிண்டல் அடிச்சு பாடுவாளுக...’’ உற்சாகமாகப் பேசும் ஆச்சியை கடுப்பாகப் பார்த்தாள் பாரதி.‘‘ஆச்சி... நான் உன் இடத்தில இருந்தா, ஒருத்தியை வாய தொறக்க விடமாட்டேன். நாத்து நடனும்ன்னா நாத்த நட வேண்டியதுதான. எதுக்கு பாட்டு, கூத்து எல்லாம்... இதுக்கெல்லாம் நீ விடக்கூடாது ஆச்சி...’’‘‘என்ன ஆச்சியும், பேத்தியும், என் தலைய உருட்ராப்ல இருக்கு...’’ என்றபடியே தாத்தா வந்தார்.
‘‘இந்தா... பித்தளை தூக்குல பதனி இருக்கு. செல்வராசு கொண்டு வந்தான். உனக்கு ரொம்ப பிடிக்கும்னு கொடுக்கத்தான் வந்தேன். பதனி உடனே குடிச்சாதான் நல்லா இருக்கும்...’’ என்று தூக்கை கையில் கொடுத்தார்.‘‘உங்க களத்துமேட்டு கூத்ததான் புள்ள கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்...’’‘‘தாத்தா... இதெல்லாம் உங்க வயசுக்கு ரொம்ப ஓவர். நான் கோகுல் சாப்பிடும் போது கலகலன்னு சிரிச்சு கூட உள்ளவங்க கூட பேசினாலே, கோபப்படுவேன்.
நீங்க கிராமத்தில இப்படி பண்றீங்க..?’’
‘‘ஆத்தா... நீ என்ன அப்படி சொல்லிட்ட. வேல நடக்கிற இடத்தில கம்முன்னு இருக்க சொல்லுதியா? ஆம்மாடி... ரொம்ப நேரம் வேலை செய்யும்போது, மனசு, உடம்பு சோர்வா போகும். அதுவும் வயக்காட்டுல, உச்சி வெயில்ல இறங்கி, நாத்து நடுற பொம்பளைகளுக்கு அலுப்பும், சலிப்பும், நிறையவே வரும். அத மாத்துறதுக்குத்தான் இப்படி பாட்டு பாடி உற்சாகப்படுத்துறது.
எத்தனை பொண்டுவ இருந்தாலும், இந்த கிழவிய மாதிரி வராது... என்ன இந்த செம்பவம் புள்ள என்கிட்ட ரொம்ப பாசமா இருக்கும். உனக்கு இந்த ஆச்சி போரடிக்குதுன்னா சொல்லு... ஒரு சின்னாச்சிய கொணாந்திடுதேன்...’’‘‘ஆளையும் மூஞ்சியும் பாரு... யோவ் கிழவா... ரொம்ப துள்ளாதீரும்.
இன்னும் வயசாகி கை, கால் விழுந்தா நான்தான் பாக்கணும். செம்பவமும், அருக்காணீயும் சீந்த மாட்டாளுக. அத புரிஞ்சுகிடும்...’’‘‘சரி... சரி... வுடுகிழவி. ஆப்பமும், தேங்காப் பாலும் செஞ்சயே... எனக்கும், புள்ளைக்கும் சூடா குடு. நாங்க ரெண்டு பேரும் சாப்பிடுதோம். உன் கை மணம் ஆருக்கும் வராது கிழவி...’’ என்று பேச்சை மாற்றினார். ‘‘தாத்தா ரொம்ப வழியாதீங்க. அதான் தெரியுதே... பொண்டாட்டிக்கு பதனிய தூக்கிக்கிட்டு ஓடி வந்ததிலேயே...’’ கலகலவென சிரித்தாள் பாரதி. வெளிப்படையாக ரெண்டு பேரும் சண்டை போட்டாலும், ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசம் அவளுக்கு புரிந்தது.
தும்பைப் பூ மாதிரி வெள்ளை வெளேர்னு இருந்த ஆப்பத்தையும், நல்ல நாட்டு சக்கரை, ஏலக்காய் தட்டிப் போட்ட திக்கான தேங்காய் பாலையும் ஒரு பிடி பிடித்தனர் இருவரும்.அவர் வயக்காட்டிற்குப் போனபிறகு ஆச்சியும், பேத்தியும் ஓய்வாக உட்கார்ந்தனர். ‘‘ஏன் கண்ணு... பல்லாங்குழி விளையாடுவோமா? வேர்க்கடலைய அவிச்சு வச்சிருக்கேன். தட்டுல போட்டு எடுத்துட்டு வா...’’‘‘ஆச்சி... தாத்தா பாட்டுக்கு வயக்காட்டிலேயே கிடக்காரு.
வீட்ல தனியா இருக்க போரடிக்காதா?’’
‘‘ஆம்பளைங்க வெளில போயிட்டு வந்தாதான் பாரதி நமக்கும் கொஞ்சம் விட்டாத்தியா இருக்கும். பொழுதன்னைக்கும் நாலு சுவத்துக்குள்ள, ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துகிட்டு இருந்தா அலுப்புதான் வரும். மனஸ்தாபத்துல சண்டையும் அதிகமா வரும்...’’‘‘ஆனாலும் நீ அந்த பொண்ணுகளுக்கு ரொம்ப இடம் கொடுக்கற...’’‘‘தாத்தா பேசுனதுக்கு பயந்துக்கிட்டியா? அது சும்மா அப்படி பேசும்.
மத்தபடி என் மேல அவருக்கு ரொம்ப பாசம், மரியாத...’’‘‘அதான் பார்த்தேனே... உனக்கு பதநீர் தூக்கிக்கிட்டு ஓடி வந்தத. இப்படித்தான் ஆச்சி கோகுல் சண்டை போட்டா உடனே எனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிட்டு வருவான்...’’ முதல் முறையாக தன்னை மறந்து கோகுலைப் பற்றிப் பேசினாள்.
‘‘அதுதாண்டி புருஷன் பொண்டாட்டி உறவுங்கறது. சண்டை சச்சரவெல்லாம் எப்படியோ... அதே மாதிரிதான் அன்பும் அரவணைப்பும் இருக்கணும். எனக்கும் உங்க தாத்தாவுக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகாது. நான் சொல்ற எதையுமே அவர் ஏத்துக்க மாட்டாரு. நான் ‘ஏனைன்னா அவர் கோனைம்பாரு’. பொதுவா ஆம்பளைங்க குணமே அதுதான்.
சுளுவா நாம சொல்றதை ஏத்துக்க மாட்டாங்க...’’‘‘ஆமாம் ஆச்சி... ஆம்பளைங்களுக்கே ஈகோ ஜாஸ்தி...’’‘‘கண்ணு நீ சொல்றது எதுவோ அது பாட்டுக்கு இருக்கட்டும்... நாம அதை அலசி ஆராய்ஞ்சுகிட்டு இருக்கக் கூடாது.
குடும்பம் என்பது ரெட்டை மாட்டு வண்டி மாதிரி. அதுல ஒரு மாடு தயங்கி நின்னுட்டா, இன்னொரு மாடால இழுக்க முடியாது. எத்தனை பொம்பளைங்ககிட்ட சிரிச்சு பேசினாலும் அவக அன்பு நம்மமேலதான். நம்மளோட அன்பு அவகள கட்டிப் போடணும். பரஸ்பரம் நம்பிக்கை இல்லைன்னா வெளியில் வேலைக்குன்னு போறவகள சந்தேகப்பட்டுக்கிட்டு பின்னாலேயே போயி வேவு பாக்கவா முடியும்?
நம்பிக்கைதான் கண்ணு எல்லாத்துக்கும் அஸ்திவாரம். வாழ்க்கையில விட்டுக் கொடுக்கறது ரொம்ப அவசியம். நல்ல தாம்பத்தியம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்ந்து காட்டுறதுலதான் இருக்கு. அது இப்ப புரியாது கண்ணு... வயசாகி கை கால் தளரும்போதுதான் துணையோட அரும புரியும்.
சரி கண்ணு நீ லீவுக்கு வந்துருக்க உன்னை போட்டு போரடிக்கிறேன்...’’ ஆச்சி சொல்வது புரிய, லேசாகவொரு தெளிவு பிறந்தது.‘‘இல்ல ஆச்சி... நீங்க ஒரு அனுபவ பெட்டகம். அதிலிருந்து நான் எடுத்துக்க வேண்டிய பொக்கிஷம் நிறையவே இருக்குது...’’ என்றாள் தெளிவான மனதோடு. முதல்முறையாக யோசிக்க ஆரம்பித்தாள் பாரதி.
தி.வள்ளி
|