ஏஐ டாய்லெட் கேமரா!



இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம். அல்லது கழிப்பறையில்கூட ஏஐ கேமராவா எனக் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இது உங்கள் உடல்நலத்திற்கானது என்கிறது இதைத் தயாரித்த நிறுவனம்.
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கழிப்பறையில் கழிவு பற்றிய புகைப்படத்தைப் பதிவுசெய்யும் கேமராவை டிசைன் செய்திருக்கிறது. இதன் பெயர் த்ரோன். இந்தத் தயாரிப்பு செரிமான ஆரோக்கியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது த்ரோன் சாதனம் கழிப்பறையின் விளிம்பில் மாட்டப்படுகிறது.

அது கழிவின் வீடியோக்களை எடுக்க கீழ்நோக்கில் அமைந்த கேமராவைப் பயன்படுத்துகிறது. பின்னர் இந்த வீடியோக்கள் மருத்துவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஏஐ மென்பொருளால் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

நாள்பட்ட இரைப்பை குடல் பிரச்னை, செரிமான பிரச்னை இருப்பவர்கள் இந்த வீடியோவின்மூலம் கழிவின் தன்மையையும் ஏஐ பகுப்பாய்வு செய்துதரும் விஷயங்களையும் கொண்டு உடனே பிரச்னையை சரிசெய்ய முடியும் என்கிறது அந்நிறுவனம். இருந்தும் சிலர் பிரைவஸி பற்றி பயம் கொள்கின்றனர். ஆனால், த்ரோன் கழிப்பறை உட்பகுதியை மட்டுமே படமெடுக்கும் என்றும், அதற்கு சம்பந்தமில்லாதவற்றைத் தானாகவே டெலிட் செய்துவிடும் என்றும் சொல்கிறது அந்நிறுவனம்.

பி.கே.