வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களில் தினமும் ஒரு புகாராவது இப்படி வந்துவிடும். ஆனால், வீட்டை உடைப்பது யாரென்று காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சமீபத்தில் டசாய்ப்பூ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள், மதியம் ஒரு மணி அளவில் அந்த மர்ம நபர் புகுந்துவிட்டார். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். அவர்கள் ரகசியமாக காவல்துறையிடம் சொல்ல, உடனே அந்த வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரைப் பிடித்துவிட்டனர். ‘‘இப்படி மற்றவர்களின் வீட்டை உடைத்து உள்ளே செல்வது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இதுவரை ஆயிரத்துக்கும் மேலான வீடுகளை உடைத்து உள்ளே போயிருப்பேன். திருட மாட்டேன்.
இது எனக்கு ஒரு திரில்லிங் அனுபவம். வீட்டுக்குள் நுழைந்தவுடனே யாராவது என்னைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பதற்றத்திலும், பயத்திலும் என்னுடைய உள்ளங்கை வேர்க்கும். இந்நிகழ்வு என்னுடைய மன அழுத்தத்திலிருந்து விடுதலையளிக்கிறது...’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த மர்ம நபர்.
த.சக்திவேல்
|