உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன. அப்படியாக நிரந்தர கண்குறைபாடு பிரச்னை உள்ளவர்களுக்கு பார்வையளிக்கும் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறது ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம்.  இந்தப் பல்கலைக்கழகம் உலகின் முதல் பயோனிக் கண் எனும் செயற்கைக் கண்ணை உருவாக்கியிருக்கிறது. உலகில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் ஒரு தொழில்நுட்பம்தான் இது. அதில் சிறப்பாக ஒருபடி முன்னேறி இதனை உருவாக்கி இருக்கின்றனர் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இது ஒரு அதிநவீன தொழில்நுட்பம். இதனை, ‘ஜென்னரிஸ் பயோனிக் விஷன் சிஸ்டம்’ என அழைக்கின்றனர். பார்வையை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த சிஸ்டம்.
குறிப்பாக குணப்படுத்த முடியாத கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர். பொதுவாக பார்க்கும் திறன் என்பது ரெட்டினா எனப்படும் விழித்திரையில் ஒளி படுவதால் நடக்கிறது. அதாவது நம் கண்களில் ஒளி பட்டதும் அதனை போட்டோ ரிசெப்டர்ஸ் எனும் சிறப்பு செல்கள் எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றும்.
இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் விழித்திரையிலிருந்து பார்வை நரம்புகள் வழியாக மூளையைச் சென்றடையும். மூளை இந்த சிக்னல்களைக் காட்சியாக நமக்குக் காட்டும். ஆனால், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்களைக் கடத்தும் பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிக்னல்கள் மூளைக்குச் செல்லாது. இதனால் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
ஆனால், ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களின் இந்த ஜென்னரிஸ் விஷன் சிஸ்டம், கண்ணில் இருந்து மூளைக்குக் காட்சித் தகவலை அனுப்பும் சேதமடைந்த அந்தப் பார்வை நரம்புகளைத் தவிர்த்துவிடுகிறது. அதற்கு மாறாக இந்த சிஸ்டமே மூளையின் பார்வை மையத்திற்கு சமிக்ஞைகளை அனுப்பும். அதன்வழியாக பயனர்கள் காட்சிகளை உணர அனுமதிக்கும். அதுதான் கான்செப்ட்.
இதன்படி வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டரும் கேமராவும் பொருத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தலைக்கவசத்தைப் பார்வையற்றவர்கள் அணிய வேண்டும். தவிர, அவர்களுக்கு 9 மில்லிமீட்டர் அளவே கொண்ட இம்பிளான்ட்ஸ் மூளையின் உள்ளே வைக்கப்படும். இது பயனர்களுக்கு காட்சிகளை உள்வாங்கி, பகுப்பாய்வு செய்து பார்வையைக் கொடுக்கும்.
இதற்குமுன் பயோனிக் கண்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் பல நாடுகளில் நடந்துள்ளன. ஆனால், அவற்றில் விழித்திரையின் குழிவான வடிவத்தை மீண்டும் உருவாக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்த ஜென்னரிஸ் சிஸ்டம் இயற்கையான கண்களின் அமைப்பை பிரதிபலிக்கும்விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிஸ்டம் 100 டிகிரி பார்வையை வழங்குகிறது. மனிதக் கண்களின் 130 டிகிரி வரம்பைக் காட்டிலும் சற்று குறைவானது என்றாலும், 70 டிகிரி வரம்பை மட்டுமே வழங்கிய முந்தைய ஃப்ளாட் சென்சார் தொழில்நுட்பங்களை விஞ்சி நிற்கிறது.தற்போது செம்மறி ஆடுகளின் மூளைகளில் பொருத்தி இந்தச் சோதனையை வெற்றிகரமாக ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திவிட்டனர். இதனால், மெல்போர்னில் மனிதர்களிடையே சோதனையை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
பி.கே
|