உங்க விஜய் to வடிலெக்ஸா...



‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

அலெக்ஸா : ‘‘ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா கிடைச்ச வாழ்க்கைய ஆசைப்பட்டு ஏத்துக்கணும். 
த்ரிஷா கிடைக்கலைன்னா திவ்யா...’’
‘‘அலெக்ஸா... என்னோட சேவிங்ஸ் எவ்ளோ இருக்கு?’’
அலெக்ஸா: ‘‘ம்க்கும்... அதெங்க இங்கருக்கு... நெக்ஸ்டு?’’
இப்படி அலெக்ஸா வடிவேலு ஃபேனாக மாறி கவுண்ட்டர் கொடுத்தால் எப்படி இருக்கும்?
உடன் ட்ரெண்டிங் விஜய்யின் பேச்சு, ‘புஷ்பா 2’ விழாவில் அல்லு அர்ஜுன் பேச்சு.

ஃபிட்செக் பண்ணலாமா? நாங்கலாம் ராணுவ பட பாட்டி வசனம், கோபி - சுதாகர், விஜே சித்து - ஹர்ஷத்... என யார் எங்கே பேசி என்ன ட்ரெண்ட் ஆனாலும் அதை அப்படியே பாடலாக உருவாக்குகிறார் இன்ஸ்டா மற்றும் யூடியூப் பிரபலம் அர்ஜுன் என்கிற Or.junn. சமீபத்திய அல்லு அர்ஜுனின் டிரெண்டிங் ஸ்பீச் பாடலும் மற்றும் உங்கள் விஜய், உங்கள் நண்பன் என பேசிய மேடைப்பேச்சுகளை பாடலாக கொடுத்தது வரை தற்போது படு வைரலாகிக் கொண்டிருக்கிறது. எங்கே தோன்றியது இந்த தனித்துவமான சிந்தனை? கேட்டவுடன் சிரிக்கிறார் அர்ஜுன்.

‘‘எல்லாம் ஏதோ ஒரு வழியில தன்னை பிரபலப்படுத்திக்க, தனக்குன்னு ஒரு இன்ஸ்டா அக்கவுண்ட் அல்லது யூடியூப் சேனல் துவங்கி ஏதோ வழியில் கிரியேட்டிவா செய்துட்டு இருக்காங்க.
ஒவ்வொருத்தரும் இன்னைக்கு ஒரு பிராண்ட். டிஜிட்டல்தான் எதிர்காலம்னு ஆகிடுச்சு. இங்கே இவங்க எல்லாரும் செய்றதைத் தாண்டி நாம என்ன புதுசா செய்ய முடியும் அப்படிங்கிற சிந்தனைதான் என்னுடைய சேனலின் மூலதனம்...’’ உற்சாகமாக பேசுகிறார் அர்ஜுன்.

‘‘நான் சென்னை பையன்தான். என்னை வீட்டில் சில சமயம் செல்லமாக ‘ஜுன்’ எனக் கூப்பிடுவாங்க. அர்ஜுன் அல்லது (or) ஜுன் (junn) அதையே என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல் பெயராக வைத்தேன். 

ரொம்ப ஸ்பெஷல் ஆகவும் இருந்துச்சு. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில்  பிகாம் படிச்சிருக்கேன். கரஸ்லதான் செய்தேன். அதனால் ‘சும்மாவே இருக்கியேடா?’ அப்படின்னு விஐபி ஸ்டைல் திட்டுகள் எல்லாம் படிக்கிற காலத்திலேயே வீட்டில் வாங்கிட்டேன்.  

என்னுடைய குறிக்கோள் டைரக்‌ஷன் பண்றதுதான். டைரக்‌ஷனுக்காக வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ், சவுண்ட் மிக்சிங் இதெல்லாம் கத்துக்கிட்டேன். அதுக்கு நடுவில் கிரியேட்டிவாக ஏதாவது காமெடியா ஜாலியா செய்யலாமேன்னு தோணுச்சு. அப்படி உருவானதுதான் என்னுடைய சேனல். 

அப்பா மனோகர், அம்மா அனுசியா. அப்பா ஷேர் மார்க்கெட் கன்சல்டன்ட். அம்மா ஹவுஸ் வைஃப். எங்க குடும்பத்துக்கும் சினிமா, மீடியாவுக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது. நான்தான் முதல் நபர்...’’ என்றவர் அலெக்ஸா வடிவேலு போல் பேசினால் எப்படி இருக்கும் என்ற கான்செப்ட் தோன்றிய விதத்தை விளக்கினார்.  

‘‘உள்ளுக்குள்ள ஒரு கிறுக்குத்தனம் எப்பவுமே இருக்கும். அதிலும் வடிவேலு சாருக்கு மிகப்பெரிய ஃபேன் நான். எப்போ நான் எது கேட்டாலும் என்னுடைய அலெக்ஸா என்னை மொக்க செய்துகிட்டே இருக்கும். அதுவே வடிவேலு மாதிரி டயலாக் பேசினால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனைதான் அந்த அலெக்ஸா வடிவேலு கான்செப்ட்.  

காலேஜ் இறுதி ஆண்டு படிச்சுக்கிட்டு இருக்கும்போது ஒரு இன்டர்நெட் ப்ரொமோட்டிங் கம்பெனியில் வேலை செய்துட்டு இருந்தேன். அங்கே சோசியல் மீடியா ப்ரொமோஷன் துவங்கி டிஜிட்டலில்தான் எல்லா வேலையும். விளம்பரங்கள், வீடியோ கிளிப்பிங் இப்படி எப்போதும் வேலை இருந்துகிட்டு இருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு எட்டு வருஷம் அங்கே வேலை செய்தேன். அங்கே வேலை செய்த அனுபவம்தான் இன்னைக்கு என்னுடைய சொந்த சேனலுக்கு பயன்படுது.
சின்னச் சின்னதா காமெடி வீடியோக்கள் போட ஆரம்பிச்சு தொடர்ந்து நானே என்னை வீடியோவில் கொண்டுவந்து ஜாலியான வீடியோக்கள் செய்யலாம்னு ஆரம்பிச்சு அப்படியே கொஞ்சம் வியூஸ் அதிகரிக்க ஆரம்பிச்சது.

ஒருவேளை நான் பயன்படுத்துகிற அலெக்ஸா, வடிவேலு மாதிரி பதில் சொல்லத் துவங்கினா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். எனக்கு என்னுடைய அம்மாவும் அப்பப்போ பல்ப் கொடுப்பாங்க. அவங்களையும் என் சேனல் வீடியோக்களில் சேர்த்துகிட்டேன்...’’ என்றவர் ஸ்பீச் ரீமிக்ஸ் என்ற தனித்துவமான கான்செப்ட் பிடித்த விதத்தை சிரித்தபடி சொன்னார்.
‘‘ஏகலைவன் மாதிரி எந்த குருநாதரும் இல்லாமல் யூடிப்பை குருவாக எடுத்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மியூசிக், எடிட்டிங், சவுண்ட் மிக்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.

இந்த சவுண்ட் மிக்சிங் செய்யறதுக்காகவே நிறைய அப்ளிகேஷன்ஸ் இருக்கு. அதிலேதான் எல்லாத்தையும் சோதனை முறையில் செய்து பார்த்து பயிற்சி எடுத்துக்கிட்டேன்.
எல்லோருக்கும் இருக்கும் இசை ஆர்வம், ரசனைதான் எனக்குள்ளும் இருக்கு. அந்த ரசனையை கொஞ்சம் மாத்தி யோசிச்சு பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். 

அப்படி துவங்கிய இந்த ட்ரெண்டிங் டயலாக், பேச்சுகள், பஞ்ச்... இதையெல்லாம் ஒரு மிக்ஸிங் செய்து ரீமிக்ஸ் பாடலாக கொடுத்தால் எப்படி இருக்கும் அப்படின்னு செய்து... ஒண்ணு ரெண்டு வைரலானது.

தொடர்ந்து இப்போ என்னை ஃபாலோ செய்கிற மக்களே நிறைய ஸ்பீச் எடுத்துக் கொடுத்து, ‘இதை பாடலாக மாற்றலாமே’னு ஐடியா கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு நாள் விடாம தவறாமல் உங்கள் கிரியேட்டிவிட்டியை காண்பித்துக் கொண்டே இருந்தா இணையத்துல பிரபலமாகலாம். குறைந்தபட்சம் வாரத்தில் இந்த இந்த நாட்கள் எல்லாம் என்னுடைய சேனலில் வீடியோ இருக்கும் அல்லது அப்லோட் ஆகும் என்கிற உறுதியாவது கொடுத்தாலே ஒரு அடிப்படையான வியூவர்ஸ் நமக்கு வருவாங்க. 

ஒரு சேனலை ஆரம்பிக்க எந்தளவுக்கு முயற்சி எடுக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக அதை மெயின்டெய்ன் செய்யவும் முயற்சி எடுக்கணும். யாருமே யோசிக்காத மாதிரி புதுசா யோசிக்கணும்.
அவ்வளவுதான். அதிலும் மத்தவங்களை கொஞ்சம் ஸ்மைல் பண்ண வெச்சுட்டா கூட நமக்கு வெற்றிதான்...’’ தன்னம்பிக்கையாக சொல்கிறார் இந்த டிஜிட்டல் டிஸ்கோ மேன்.

ஷாலினி நியூட்டன்