சரிபாதியாக இந்தியாவில் புலிகள் கடத்தல்!



இந்தியாவில் புலிகள் இறப்பு கடந்த ஆண்டில் வழக்கத்தை விட சுமார் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு அண்மையில் பதிலளிக்கையில் ஒன்றிய அரசின் வன விலங்குத் துறை சார்பில்கடந்த ஆண்டு மட்டும் சுமார் 182 புலிகள் இறந்திருப்பதாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது. இது 2022ம் ஆண்டைவிட 50 சதவீத அதிகரிப்பு என்பதுதான் புலி நேசர்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. உதாரணமாக 2022ல் புலிகளின் இறப்பு 121. அதேமாதிரி அதற்கு முந்தைய ஆண்டான 2021ல் 127 புலிகள்இறந்திருக்கின்றன.

1973ம் காலக்கட்டத்தில் புலிகளைக் காப்பதற்காக இந்திய அரசு ‘புலிகள் காப்பு திட்டத்தை’ இந்தியா முழுக்க அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி கடந்த ஐந்து வருடங்களாக புலிகளின் எண்ணிக்கையும் அதிர்ச்சிதரக்கூடிய வகையில் அதிகரித்தது. எடுத்துக்காட்டாக 2018ம் ஆண்டில் 2967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டுக்குள் 3682 ஆக அதிகரித்தது. ஆனாலும் புலிகள் இறப்பதும், கடத்தப்படுவதும் நின்றபாடில்லை.

காட்டுக்குள் ஒரு புலி இறந்தால் அதன் இறப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், 2023ல் இறந்த 182 புலிகளில் சுமார் 25 புலிகளின் இறப்பிற்கு மட்டுமே அதிகாரிகளால் காரணம் புரிந்து கொள்ளப்பட்டது. இந்த 25 இறந்த புலிகளில் சுமார் 12வது உடல் பாகங்களுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் அதிகாரிகள். அதாவது பாதிக்குப் பாதி புலிகள் கடத்தப்படுகின்றன.

இப்படி ஏன் புலிகள் கடத்தப்படுகின்றன?

புலிகளின் தோல், நகங்கள், பல் மற்றும் எலும்புகள் உலகளவில் பல கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் வணிகம். இந்த கடத்தல்களும் நேபாளம் - பூட்டான் எல்லை, அசாம் எல்லை, பிரம்மபுத்ரா மற்றும் மும்பை துறைமுகம் வழியாக நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். 

கடந்த ஆண்டு புலிகள் இறப்பு 182 ஆக இருக்க இதில் 32 புலிகளின் இறப்பு மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. இதிலும் மகாராஷ்டிராவில் 13 புலிகள் கடத்தல் என்றால் மத்தியப் பிரதேசத்தில் 8 புலிகள் கடத்தல்.

மற்றபடி ஆந்திரா, பீகார், கேரளா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு புலி வீதம் கடத்தப்பட்டிருக்கிறது. உதகமண்டல வனவிலங்கு அதிகாரிகள் சொல்லும்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் புலி கடத்தல்காரர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

புலிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் இப்படி பாதிக்குப் பாதி புலிகள் கடத்தல்காரர்களால் கடத்தப்படுவது இனிவரும் காலங்களில் புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமா... எதிர்காலத்தில் புலிகளின் இருப்பைக் குறைக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

டி.ரஞ்சித்