மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம். இன்று சரக்குக்கு காலாகாலத்துக்கும் பஞ்சமில்லை. ஆனால், கடற்கரைதான் பாவம். தன் கம்பீரத்தை, அழகை புதுச்சேரி பீச் இழந்து வருவதாக சொல்கிறார்கள்.இதற்கு ஏற்ப பாண்டியின் கடற்கரை பரப்பில் சுமார் 56 சதவீதம் காணாமல் போய்விட்டதாக சொல்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவின் மொத்த கடற்கரைப் பரப்பு சுமார் 6000 கிலோ மீட்டர். இதில் சுமார் 30லிருந்து 40 சதவீதம் வரை காணாமல் போய்விட்டதாக அந்த ஆய்வு சொல்கிறது. இப்படி காணாமல் போன பீச்சில் ஒன்றுதான் பாண்டிச்சேரியின் கடற்கரை. பாண்டிச்சேரிக்கு சரக்குக்கு படையெடுக்கும் வெளியூர்க்காரர்களைவிட பீச்சைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.
எடுத்துக்காட்டாக பாண்டிக்கு வருடத்துக்கு சுமார் 18 லட்சம் டூரிஸ்டுகள் படையெடுக்கிறார்களாம். மட்டுமல்ல... பாண்டியின் கடல் தொழிலை நம்பி வாழ்ந்த மீனவர்கள் மட்டும் பாண்டியின் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம். இந்நிலையில் புதுச்சேரியின் கடற்கரை காணாமல்போனால் மீன் தொழில் எப்படி செய்வது?
பாண்டியின் கடற்கரைக்கு செல்பவர்கள் பீச்சுக்குள் கொட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய பாறாங்கற்களைப் பார்த்திருக்கலாம். கடல் அரிப்பை தடுப்பதற்காக கொட்டப்பட்ட கற்கள் அவை.
இந்நிலையில் ஏன் புதுச்சேரியில் கடற்கரை காணாமல்போனது என்பது குறித்து பாண்டியின் கடற்கரையை அறிந்த சந்திரனைப் பிடித்து விசாரித்தோம். இவர் சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தின் மீனவர் என்பது சிறப்பு. பாண்டி மட்டும் அல்லாது சென்னையின் மெரினா கடற்கரை குறித்தும் அவர் பேசத் தொடங்கினார்.
‘‘பாண்டிச்சேரியின் கடற்கரையில் பாதி இல்லாமல் போனதற்கான முதன்மையான காரணம் அங்கு கட்டப்பட்ட துறைமுகம். இந்தத் துறைமுகம் 1986ல் கட்டப்பட்டது.
ஒரு கடற்கரை நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்றால் கடலை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
ஆனால், துறைமுகத்துக்காக கடலில் கட்டுமானங்களைக் கட்டும்போது கடல் அலைக்கு நாம் வாய்ப்பூட்டு போடுகிறோம். இதுதான் பாண்டியின் பீச் அழிவுக்கு முக்கியமான காரணம்...’’ என்று சொல்லும் சந்திரன், கடலில் கட்டப்பட்ட துறைமுகக் கட்டுமானத்துக்கும் கடற்பரப்பு காணாமல் போனதற்குமான காரணங்களை அடுக்கினார்.
‘‘முதலில் திசைகளைக் கணக்கிட்டால் பாண்டியின் பீச் அழிவுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக ஒருவர் பாண்டி பீச்சில் நின்றுகொண்டு கடலைப் பார்த்தால் கடல் இருக்கும் பகுதி கிழக்கு. அவர் நின்றுகொண்டிருக்கும் பகுதி மேற்கு. அப்படியே அவர் இடது பக்கம் கழுத்தைத் திருப்பிப் பார்த்தால் வடக்கு.
வலது பக்கம் கழுத்தைத் திருப்பிப் பார்த்தால் அதுதான் தெற்கு. பொதுவாக பாண்டி இருக்கும் வங்கக் கடலின் கடல் அலை (கடல் அலை ஓட்டம் - கரன்ட்) வருடத்தில் ஒன்பது மாதங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும். அதே மாதிரி மூன்று மாதங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கடல் அலை நகரும்.
ஆனால், துறைமுகம் கட்டியதால் கடல் அலை இந்த மாதங்களில் தெற்கில் இருந்து வடக்குக்கும், வடக்கில் இருந்து தெற்குக்கும் நகரமுடியாமல் தத்தளிக்கிறது. இதனால் வருடத்தின் ஒன்பது மாதங்களில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரக்கூடிய அலைகள் நகரமுடியாமல் தெற்கிலேயே தேங்கவேண்டிய நிலை.
அலை நகரமுடியாமல் இருப்பதால் தெற்கில் அலை கொண்டுவரும் மணல் குவிந்து தேங்கவேண்டிய நிலை. இதனால் இந்த 9 மாதங்களில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி போகக்கூடிய மணல் வடக்கு நோக்கி போகாததால் கடல் அலைகள் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மணலைக்கூட வடக்கில் அரித்துவிடும்.
இதனால்தான் பாண்டியில் வசிக்கும் பெரும்பான்மையான வடக்கு நகரவாசிகளின் வசிப்பிடங்கள் கடல் அரிப்புக்கு உள்ளாகின்றன. வடக்கில்தான் கடல் அரிப்பைத் தடுக்க பெரிய பெரிய பாறாங்கற்கள் கொட்டப்படுகின்றன...’’ என்று சொல்லும் சந்திரன், செயற்கையாக போடப்படும் அலைகளை தடுக்கும் கற்களால் என்ன பிரச்னை ஏற்படும் என்றும் வரித்தார்.‘‘தமிழ்நாட்டையும் பாண்டியையும் இணைக்கும் ஊர் கோட்டைக்குப்பம்.
பாண்டியின் வடக்கில் கடல் அரிப்பு இருப்பதால் பாறைகள் கொட்டப்பட்டன. இப்படிக் கொட்டும்போது கற்கள் கொட்டப்படாத ஊரின் பீச்சுகள் அரிக்கப்படும். இதுதான் இன்று கோட்டைக்குப்பம் பீச்சிலும் நடக்கிறது. கோட்டைகுப்பம் பீச் அரிக்கப்படுகிறது என்று சொல்லி அங்கேயும் கற்களைக் கொட்டினார்கள். இது தமிழகத்தின் கடற்கரைகளைத்தான் அரிக்கச் செய்யும்...’’ என்று சொல்லும் சந்திரன் தமிழக கடற்கரைகளைப் பற்றியும் பேசினார்.‘‘சென்னை மெரினா பீச் ஒரு இயற்கையான கடற்கரை கிடையாது. அது செயற்கையாக உருவாக்கப்பட்ட கடற்கரை. உதாரணமாக கடந்த கால சென்னை வரைபடத்தை எடுத்துக்கொண்டால் சென்னையின் பீச் எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு என்று கோட்டை வரைக்கும் வரும்.
ஆனால், சென்னையில் துறைமுகம் கட்டப்பட்டதால் மெரினாவில் இன்று பல மீட்டர் தூரம் மணல் கிடக்கிறது. மற்ற இடங்களில் - அதாவது சென்னையில் - கடற்கரை என்ற ஒன்றே இல்லை. இதுவும் பாண்டிச்சேரி போலவே மாறியது. சென்னை பீச் ஒருபக்கம் அதிக மணல்... இன்னொரு பக்கம் பீச்சே இல்லாத பாறைகள் போடப்பட்ட சூழல்.
செயற்கையான கடல் சூழல்களால்தான் சென்னையும், இன்று பாண்டியும் பீச்சை காலி பண்ணிக்கொண்டிருக்கின்றன...’’ என அழுத்தமாகச் சொல்கிறார்.ஒருவேளை புதுச்சேரியின் கடற்கரை காணாமல்போனால் பாண்டியின் அடையாளமாக சரக்கு மட்டுமே நிலைக்கும். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?!
டி.ரஞ்சித்
|