வருகிறார் முஃபாசா



உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’. இப்படம் வெளியாகி முப்பது வருடங்கள் ஆன பிறகும்கூட, இன்றும் ஓடிடி தளத்தில் கணிசமான பார்வைகளை அள்ளுகிறது. 
‘வால்ட் டிஸ்னி’ நிறுவனத்துக்காக ‘த லயன் கிங்’ கதையை ஐரின் மெச்சி, ஜோனாதன் ராபர்ட்ஸ், லிண்டா வூல்வெர்ட்டன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கினார்கள். குறிப்பாக உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ நாடகத்தின் தாக்கத்தில், ‘த லயன் கிங்’கின் கதை வடிவமைக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர்.

அனிமேஷன் படங்கள், புத்தகங்கள், குறும்படங்கள், அனிமேஷன் தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை நாடகங்கள், மேடை நாடகங்கள், வீடியோ கேம்ஸ் என பல வடிவங்களில் இந்தக் கதை வெளியாகியிருக்கிறது. 

இருந்தாலும் ஐரின், ஜோனாதன், லிண்டாவின் திரைக்கதையில், ரோஜர் அல்லர்ஸ் மற்றும் ராப் மின்கோப்பின் இயக்கத்தில், 1994-ம் வருடம் வெளியான ‘த லயன் கிங்’ அனிமேஷன் படமும், ஜெஃப் நாதன்சன் திரைக்கதை எழுத, ஜோன் பஃப்ரியூ இயக்கத்தில், 2019-ம் வருடம் வெளியான ‘த லயன் கிங்’ அனிமேஷன் படமும் ரசிகர்களின் மத்தியில் வெகு பிரபலம். இந்நிலையில் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவிருக்கும், ‘முஃபாசா : த லயன் கிங்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.  

*த லயன் கிங் (1994)

விலங்குகளின் கதையினூடாக மனிதர்களின் அதிகார, பதவி வேட்கையைத்தான் இப்படம் சித்தரிக்கிறது. அனிமேஷன்  படங்களின் முன்னோடியாகக் கருதப்படும் இப்படம், பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. 

அதாவது, எல்லா காலங்களிலும் ஹோம் வீடியோ  விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது, ‘த லயன் கிங்’. இதுவரைக்கும்  இப்படத்தின் ஹோம் வீடியோக்கள் 5.5 கோடிக்கும் மேலான பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இப்படம் வெளியான 1994-ம் வருடத்தில் உலகளவில் அதிக  வசூலைக் குவித்த படமும் இதுவே. மறு வெளியீடு உட்பட இன்று வரை, சுமார் 8,300 கோடி ரூபாயை  வசூலித்திருக்கிறது.  

 பொதுவாக அனிமேஷன் படமென்றாலே அதீத கற்பனை என்ற பார்வையை முதன்முதலாக உடைத்ததும் இப்படம்தான். முக்கியமாக இப்படத்தின் உருவாக்கத்துக்குப் பின்னணியில் இருக்கும் நிகழ்வுகள் புதிதாக அனிமேஷன் துறையில் நுழைகிறவர்களுக்குப் பாடம். படத்தின் கதை காட்டில், விலங்குகளுக்கு மத்தியில் நிகழ்கிறது.

திரைக்கதை தயாரானதும், ‘டிஸ்னி’ நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய  அனிமேஷன் கலைஞர்கள் ஆப்பிரிக்க காடுகளில் ஒருசில மாதங்கள் தங்கியிருந்து,  விலங்குகளின் நடவடிக்கைகளையும், காட்டின் இயல்பையும் அறிந்துகொண்ட பிறகே  படத்தில் பணியாற்ற ஆரம்பித்தனர்.

‘டிஸ்னி’யின் அனிமேஷன் ஸ்டூடியோவில் உயிருள்ள ஒரு  குட்டிச்  சிங்கத்தையும், வளர்ந்த சிங்கத்தையும்  மாடலாக வைத்தே  சிங்கத்தின்  உடலமைப்பு, நடக்கும் விதம், உறங்கும் நிலை, கர்ஜிப்பது, பார்வை உள்ளிட்ட சகலத்தையும்  அனிமேஷன்  செய்தனர்.  காடுகளில் தங்களுக்குக் கிடைத்த நேரடியான அனுபவங்களையும் அனிமேஷனாக அவர்கள் மாற்றினார்கள். 

அதனால்தான் இப்படத்தில் காட்டின் இயல்பும், விலங்குகளின் உடல் மொழியும் உண்மைக்கு நெருக்கமாக இருந்தன. அதே நேரத்தில் இந்தப் படம் வெறுமனே விலங்குகளின் கதையாக மட்டுமல்லாமல், மனிதர்களின் கதையாகவும் பரிணமித்தது இதன் சிறப்பு.

தவிர, குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் என்று ஆரம்பத்தில் ‘த லயன்  கிங்’கில் இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் தயக்கம் காட்டினார். பிறகு படத்தில்  வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து கதையுடன் ஒன்றிப்போய்விட்டார். தனது நெருக்கமான உறவுகளுடனான பிணைப்பை இப்படம் நினைவுபடுத்தியதாகவும்,  தான்  இசையமைத்த படங்களில் ‘த லயன் கிங்’ ஒரு சிறப்பான அனுபவம் என்றும்  பின்னாட்களில் சொல்லியிருக்கிறார் ஹான்ஸ்.

இப்படத்தில்  இசையமைத்ததற்காகத்தான் ஹான்ஸுக்கு முதல் ஆஸ்கர் கிடைத்தது. இதுபோக இப்படத்தில் 600க்கும் மேலான அனிமேஷன் கலைஞர்கள் வேலை செய்திருக்கின்றனர். 10 லட்சத்துக்கும் மேலான ஓவியங்கள் கைகளாலே வரையப்பட்டு, அவற்றை அனிமேஷன் முறையில் கோர்த்து இப்படத்தை உருவாக்கியிருக்கின்றனர். 

படத்துக்கான முக்கிய காட்சிகளை  அனிமேஷன் செய்யும்போது பூகம்பம் வந்துவிட்டது. அதனால் ஸ்டூடியோவை  மூடிவிட்டு, அனிமேஷன் கலைஞர்கள் வீட்டிலிருந்து மீதி வேலைகளைச்  செய்துகொடுத்தனர். ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பயன்படுத்திய முதல் அனிமேஷன் படமும் இதுவாகத்தான் இருக்கும்.  இப்படி இந்தப் படத்துக்குப் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

*த லயன் கிங் (2019)

கைகளால் வரையப்பட்டு உருவான, ‘த லயன் கிங் (1994)’கின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த கம்ப்யூட்டர் அனிமேஷன் படம். இதுவரைக்கும் வெளியான படங்களில் அதிக  வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. உண்மையாகவே காட்டுக்குள் சென்று நேரடியாக படம் பிடித்தார்களோ என்று  ஆச்சர்யப்படும் அளவுக்கு இதன் அனிமேஷன் வியப்பளிக்கிறது.

 இப்படத்தில் இரு வேறு  உலகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. முதல் உலகம் சிங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிங்கத்தின் ராஜ்ஜியம் தான் என்றாலும் அங்கே பசுமையான இடத்தைக் காண்பது அரிது. தந்திரம், பதவி ஆசை, அதிகாரம், துரோகம், பெண்ணாசை, பசி என  அவலங்கள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. அதனாலேயே அந்த உலகத்தை வறண்டதாக,  மகிழ்ச்சியற்றதாக காட்சிப்படுத்தியிருந்தனர்.   இன்னொரு உலகம்  பசுமையானது. 

அங்கே கவலைக்கு மட்டுமல்ல அதிகாரம், பதவி என எதற்கும் இடமில்லை. ஒரு வேளை அதிகாரம், பதவி , அடக்குமுறைக்கு இடமில்லாததால் தான் அங்கே கவலைஇல்லையோ என்று பார்வையாளர்கள் உணரும் அளவுக்கு அந்த இடத்தையும், சூழலையும் வடிவமைத்திருந்தனர்.

அந்த உலகில் வசிப்பவர்கள் எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அதனால்தான்  எங்கே பார்த்தாலும் பசுமை. சிங்கமே அந்த இடத்துக்குப் போனாலும் தன் இயல்பை மறந்து சாதுவாகிவிடுகிறது. அவர்கள் சாப்பிடுவதை மட்டுமே சாப்பிடுகிறது; வேட்டையாடுவதில்லை. கவலைகள் இல்லாத உலகம் தான் எவ்வளவு அழகானது; மகிழ்ச்சியானது என்பதை இந்தப் படம் ஆழமாக உணர்த்தியது.

*முஃபாசா : த லயன் கிங்

‘த லயன் கிங் (2019)’ கின் கதைக்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகளை இப்படம் பேசுகிறது. அனாதையான முஃபாசா எப்படி காட்டுக்கே தலைவனாகிறான் என்பதுதான் படத்
துடைய மையக் கருத்து. இப்படமும் வசூலில் புது சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதை வென்ற பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

த.சக்திவேல்