சைபர் மோசடி... Data’s மோசடி!



2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.2,28,094 புகார்களில் ரூ.4,636 கோடியுடன், பங்கு வர்த்தக மோசடிகள் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியது. 
முதலீடு தொடர்பான மோசடிகளைத் தொடர்ந்து, 1,00,360 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3,216 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளால் 63,481 புகார்களில் இருந்து ரூ.1,616 கோடி இழப்பு ஏற்பட்டதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தெரிவிக்கிறது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அணுகிய ‘குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு’ (CFCFRMS) தரவுகளின்படி, 2024ல் கிட்டத்தட்ட 12 லட்சம் இணைய மோசடி புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றில் 45% கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தவை எனவும் குறிப்பிடுகிறது.2021ல் ‘குடிமக்கள் நிதியியல் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு’ தொடங்கப்பட்டதிலிருந்து (CFCFRMS) 30.05 லட்சம் புகார்களைப் பதிவு செய்துள்ளது. மொத்த இழப்புகள் 27,914 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 2023ல் 11,31,221 புகார்களும், 2022ல் 5,14,741 புகார்களும், 2021ல் 1,35,242 புகார்களும் வந்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 115வது எபிசோடில் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் குறித்து உரையாற்றினார். விசாரணைக்காக எந்த ஒரு அரசாங்க நிறுவனமும் தனிநபர்களை தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்புகொள்வதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் ‘சட்டத்தின் கீழ் டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு எதுவும் இல்லை’ என்றும் கூறினார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் கைது மோசடிகளில் இந்தியர்கள் ரூ.120.3 கோடி இழந்ததை அடுத்து, இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு இந்திய குடிமக்களை மோடி வலியுறுத்தி தன் அறிவுரையை வாரி வழங்கினார்.

இங்கு திருடப்படுவது பணம் மட்டுமல்ல. அதற்கு மூலகாரணமாக இருக்கும் மனிதர்களின் விவரங்கள் என்பதையும் சேர்த்து பார்த்தால் இதன் ஆபத்தை முழுமையாக உணரலாம்.
எந்த ஒரு நிறுவனமும் தங்கள் சேவையை பயனர்களுக்கு ஏற்றாற் போல் வழங்க தனிப்பட்ட நபர்களின் தரவுகளை சேகரிக்க பயன்படும் தொழில்நுட்பத்தை டேட்டா அனலிடிக்ஸ் என்கிறார்கள். 

அப்படி என்ன பயனர்களின் மீது அந்த நிறுவனங்களுக்கு கரிசனம்? வேறு ஒன்றுமில்லை, லாபநோக்கம்தான்.எந்த வேலையையும் காசாக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் கல்வித்துறையில் ‘டேட்டா அனாலிசிஸ் கோர்ஸ்’ என்று புதிய வகையிலான தரவுகளை சேகரிக்கும் படிப்பு தற்போது பிரபலமாகி வருகிறது.

இதன் மூலம் நிறுவனங்களிடமிருந்து  தரவுகளை சேகரித்தல் மற்றும் அந்தந்த தரவு கிடங்குகளில் ஏற்றுதல், தரவுகளை சேமித்தல் மற்றும் நிர்வகித்தல், cloud computer அல்லது உள் சேவையகங்களில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் தரவை அணுகுதல், தரவு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தல்... என இப்பணிக்கு பயன்பாட்டு மென்பொருள் தீர்வுகள் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இருக்கும்.

தரவரிசைப் படுத்துதல், அட்டவணை அல்லது வரைபடம் போன்ற இறுதி பயனர்களால் பயன்படுத்த எளிதான மற்றும் பகிர்வு வடிவத்தில் தரவை வழங்குதல் ஆகிய அனைத்தையும் கொண்டதுதான் ‘டேட்டா அனாலசிஸ் கோர்ஸ்’.இங்குதான் கொள்ளையர்களின் சிலந்தி வலை பின்னப்படுகிறது. 

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், கூகுள் போன்ற ஆப்களையும், தேடுபொறிகளையும் நீங்கள் பயன்படுத்தினாலும் சரி, ஒரே ஒரு முறை சொடுக்கினாலும் சரி, உங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுவிடும். அது உங்களுக்கே தெரியாது.
இதைத்தான் திருட்டு என்கிறார்கள். பிறகு அதனை வைத்துக் கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு மனிதர்களை டிசைன் செய்ய விரும்புகிறார்கள்.

ஏனென்றால் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டிஜிட்டல் உலகம்தான். இங்கு அனைத்துமே தரவுகளாகத்தான் இயங்கும். நீங்கள் அள்ளிக்கொடுக்கும் தனிநபர் பற்றிய தரவுகளைக் கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு நீங்களே அடித்தளம் அமைத்துத் தருகிறீர்கள். தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் உங்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பணமாக்கப்படுகின்றன.

மனிதனை உயிருள்ள பண்டமாக மாற்றியதுதான் முதலாளித்துவத்தின் மிகப் பெரிய சாதனை. மனிதனே ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விட்ட பிறகு, அவனைப் பற்றி புதிதாக தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அல்லது அவர்களின் விருப்பங்களை தீர்மானிப்பதற்கும் அதன் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், லாப வெறியுடன் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒருவர் எந்த மாதிரியான இசையை ரசிக்க வேண்டும், எந்த மாதிரியான பொழுதுபோக்குகளைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத நிறுவனங்கள் தீர்மானிப்பதைப் போல தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்த துடிக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வதே நம் உழைப்பின் வழியாக வரும் வருமானத்தைக் காப்பதற்கான ஒரே வழி.

ஜான்சி