முதல் இருநாள் சினிமா விமர்சனங்கள்தான் படத்தோல்விக்கு காரணமா..?
திரைப்படங்களின் வெற்றிக்குப் பத்திரிகைகளே காரணம் என்று பாராட்டிய காலம் போய், இப்போது திரைப்படங்கள் வெளியாகி முதல் மூன்று நாட்கள் விமர்சனம் செய்யத் தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றம் போயிருக்கிறது திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு, ஜூலை 12, 2024 அன்று வெளியான ‘இந்தியன்-2’ மற்றும் நவம்பர் 14, 2024 அன்று வெளியான ‘கங்குவா’ ஆகிய படங்களுக்கு வெளியான கடும் எதிர்மறை விமர்சனங்களே காரணம் என்றும், குறிப்பாக யூடியூப் விமர்சகர்கள் திரைப்படத்தைத் தாண்டி கதாநாயகன் மற்றும் இயக்குநர் உள்ளிட்டோர் மீது தனிமனிதத் தாக்குதல்கள் நடத்துவதுடன் அவர்கள் மீதான வன்மத்தை திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுமே காரணம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இவ்விரு படங்களிலும் கதாநாயகர்களாக நடித்த கமல்ஹாசன் மற்றும் சூர்யா ஆகியோர் மீது பாஜகவைச் சேர்ந்தோர் திட்டமிட்டே அவதூறு பரப்பினர் என்பதும், அதுவும் அந்தப் படங்கள் வெளியாவதற்கு முன்பே அவற்றுக்கு எதிரான வன்மங்களை வெளிப்படுத்தினர் என்பதும் அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் கருத்து. ‘கங்குவா’ படம் வெளிவருவதற்கு முன்பே, ‘இந்தப்படத்தைப் பார்க்கக் கொடுக்கும் பணத்தில், சில ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம் என்றும் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தரலாமென்றும்’ சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டன.சூர்யாவின் மனைவி ஜோதிகா, ‘கோயில்களின் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனைகளின் பராமரிப்பு மற்றும் சுகாதாரத்துக்காகப் பயன்படுத்தலாம்’ என்று பேசியதற்கான எதிர்வினைதாம் இந்த கருத்துகள்.
இந்த விமர்சனங்கள் பட வெளியீட்டுக்குப் பின்பும் தொடர்ந்தன. சூர்யாவைப் பற்றித் தரக்குறைவாக ஒருவர் பேசியதை பல்வேறு யூடியூப் தளங்கள் வெளியிட்டன.
இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். திரையரங்குகளில் மக்கள் கருத்து கேட்கும் யூடியூபர்களை அனுமதிக்கக்கூடாது என்றதோடு, கேரளா போல் தமிழ்நாட்டிலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகி இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்பின் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. பாரதிராஜா தலைமையிலான இந்த சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் இதுதான்.
‘திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது திரைப்படத்தைக் குறித்து மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்கும் விதமாக இருக்கக்கூடாது. திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் இப்படி பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளைச் சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனிதத் தாக்குதல்களும் செய்வது, திரைப்படத்துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.
ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர் (பார்வையாளர்கள் உட்பட), நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்துவிட்டதைப் போல பலர் பேசி வருவது அநீதியான செயல் என்று கருதுகிறோம்.
விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தைப்பற்றிய வெறுப்பை ஊடகங்களில் விதைக்கக் கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த சினிமா துறையால் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர்கள் இனிமேலாவது தங்களைத் திருத்திக்கொண்டு, சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துகளை பதிவு செய்து வரும் பல யூடியூப் சேனல்கள் எல்லை மீறி கருத்துகளை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துகளை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் எடுத்துச் செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சமீபத்தில், ‘கங்குவா’ திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனிதத் தாக்குதல்களுடன், வன்மத்தை கக்கியதை அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற பல யூடியூப் சேனல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில், வெளியே வந்து அந்த ஹோட்டல் பற்றி ஊடகங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாராவது பேசியிருக்கிறார்களா? அப்படி பேசியிருந்தால், அந்த ஹோட்டல் நடத்துபவர்கள் சும்மா விட்டிருப்பார்களா?
ஹோட்டல் மட்டுமில்லை, எந்த பொருளை வாங்கும் அல்லது உபயோகிக்கும் இடத்தில், அது பிடிக்காத பட்சத்தில், அதை நாகரிகமாக எடுத்துச் சொல்லி அதற்கான தீர்வைக் காண்பார்களே தவிர, ஊடகங்களில் அது பற்றி மோசமாகப் பேசி, அந்த ஹோட்டலையோ, விற்பனை அங்காடியையோ, சர்வீஸ் சென்டரையோ- எவரும் வசைபாடி, பேசி நாம் பார்த்ததில்லை.
திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தைக் கேட்டு யூடியூப் சேனல் களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் (Audience) இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போலவும் பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள்.
அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல யூடியூப் சேனல்கள் அவற்றை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யாமல் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன.
சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் திரைத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் அறிவித்தது போல, திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த யூடிப் சேனல்-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களைப் பற்றி பேட்டி எடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்கக் கூடாது.
Public Review/Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வன்மத்தைக் கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்தப் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கொண்டு, திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குதல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள்/ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க நமது சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். பார்வையாளர்கள்/ரசிகர்கள், தங்களின் இத்தகைய வன்மம் மிகுந்த கருத்துக்கள், எவ்வாறு பெருமளவில் பாதிப்பை திரைத்துறைக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, பொறுப்பான முறையில் விமர்சனங்களை இனிமேலாவது சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த 2024ம் வருடத்தில் ‘இந்தியன்-2’, ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன. அவற்றை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையைச் சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையைத் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டு மொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்...’ என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
அறிக்கையோடு நில்லாமல் அச்சங்கம் சார்பில், புதிதாக வெளியாகும் தமிழ்ப் படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘சமீபகாலமாக புதிதாக வெளியாகும் திரைப்படங்களை யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது.
இந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, பல படங்களை தோல்வியடையச் செய்கின்றன. இதனால் பல கோடிகளைச் செலவிட்டு பெரிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே புதிய படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்கள் பற்றி முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். அதேபோல விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூ-டியூப், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்...’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி எஸ். சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்கள்பற்றி விமர்சனம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்துக்களைத் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர். இதனால் முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கலாம். அதே நேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்துச் சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
சில படங்களுக்கு நேர்மறையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களும் வருகின்றன. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூ-டியூப் நிறுவனமும் 4 வார காலங்களில் பதிலளிக்க வேண்டும்...’ என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்ந்து நடக்கவிருக்கிறது.இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர், ‘‘எஃப்டிஎஃப்எஸ் எனப்படும் முதல்நாள் முதல்காட்சி பார்க்கும் ரசிகர்களிடம் கருத்து கேட்டு உங்கள் யூடியூபில் வெளியிடுங்கள் என்று நேற்றுவரை கோரிக்கை வைத்தது இதே தயாரிப்பாளர்கள்தாம்! இப்போது இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்.
நீதிபதி சொன்னது போல், அவதூறு பரப்புவோர் மற்றும் தனிமனித தாக்குதல் செய்வோரை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணியாமல் பொத்தாம் பொதுவாக எல்லோர் மீதும் பாய்வது சம்பந்தப்பட்டோரை நீங்களே பாதுகாப்பதாகத்தான் அர்த்தம்.
அடுத்து, ஒரு படம் நன்றாக இருந்தால் எத்தகைய எதிர்மறை விமர்சனங்களும் அப்படத்தைப் பாதிக்காது. படம் சரியில்லை என்றால் எவ்வளவு நேர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அப்
படத்தைப் பாதுகாக்கமுடியாது.‘என் அக்கா தப்பானவர்தான்... ஆனால், அதை நீ சொல்லக்கூடாது’ என்று ஒரு படத்தில் வசனம் வரும்.
அதுபோல் ‘எங்கள் படம் சரியில்லைதான்... ஆனால், அதை நீங்கள் சொல்லக்கூடாது’ என்னும் எண்ணம் திரைப்படத் துறையைப் பாதுகாக்கக் கூடியதல்ல.இதை சம்பந்தப்பட்டோர் உணரவேண்டும்...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்.சமபந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய கருத்து.
எஸ்.ராஜா
|