CIBIL... அரக்கனா... தேவனா..?
சிபில்... மத்தியதர வர்க்கம் இன்றைய நிலையில் அலறும் ஒரே சொல் இதுதான்.எமதர்மனுக்கு சித்ரகுப்தன் எப்படி உலகத்தில் நாம் செய்யும் அனைத்தையில் குறிப்பு எடுக்கிறாரோ, அப்படி சிபில் என்ற அமைப்பு நம் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிறது. நீங்கள் கார் லோன் எடுக்க வேண்டுமானாலும், நிதி அமைச்சர் வீட்டு லோன் எடுக்க வேண்டுமானாலும் அனைத்தும் சிபில் ஸ்கோரை பொறுத்தே அமைகிறது.
நமது pan எண்ணை வைத்து எவனோ எங்கோ போர்ஜரி செய்து லோன் வாங்கினால் பக்காவாக சிபில் அதனை ரெக்கார்ட் செய்துகொள்ளும். ஆனால், அது நாம் இல்லை என்று நிரூபித்து சிபிலிலிருந்து வெளியே வருவதற்குள் நாக்கு தள்ளிவிடும். லோன்களில் வங்கிகள் செய்யும் தவறுகள் சிபிலில் திருத்தப்படுவதே இல்லை. சிபிலை அணுகி நம் பக்கத்து நியாயத்தைச் சொல்லும் வழிகள் எல்லாமே மாய மந்திரமாகவே இருக்கிறதே தவிர எளிமையாக இருக்காது. வங்கிகள் செய்யும் அலட்சியம், சிபில் என்ற இத்துப்போன ரேட்டிங் காரணமாக ஏகப்பட்ட நடுத்தர மக்கள் அவசரத்திற்கு லோன் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
ஒரு சிறிய தாமதத்தைக் காரணம் காட்டி சிபில் ஸ்கோர் குறைக்கப்பட்டு, கடன் மறுக்கப்படுகிறது அல்லது வட்டி அதிகமாகக் கேட்கப்படுகிறது.
உதாரணத்துக்கு உங்கள் கிரெடிட் கார்டில் பணத்தை அதிகமாகச் செலுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது மைனஸில் ஸ்டேட்மெண்ட் காண்பிக்கும். அதையும் நீங்கள் பாக்கி வைத்திருப்பதாக சிபில் உங்கள் ஸ்கோரைக் குறைக்கும்.எனவேதான் இது ஒரு பக்கா ஸ்கேம் (Scam) என்கிறார்கள். இந்த CIBIL அரசாங்கத்தால் நடத்தப்படுகிறதா?
அதுதான் இல்லை. மாறாக Experian, Equifox போன்ற தனியார் நிறுவனங்களே இந்த CIBIL-ஐ நடத்துகின்றன. நம் மொத்த ஃபைனான்சியல் டேட்டாவும் அவர்களுக்குச் செல்கிறது. அவர்கள் நமக்கு ரேட்டிங் போடுகிறார்கள்.தனிநபர்களின் ஆதார், பான் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் துவங்கி சகல பரிவர்த்தனை விவரங்களும் ஒருசில தனியார் கம்பெனிகளுக்கு செல்வதுதான் நம் இந்திய சிஸ்டம்.
சமீபகாலமாகத்தான், நம் சிபில் ஸ்கோரை யாராவது செக் செய்தால் எஸ்எம்எஸ் வருவதுபோல ஒரு விஷயத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதற்கு முன் யார் நம் சிபில் ஸ்கோரை பார்க்கிறார்கள் என்பதே நமக்குத் தெரியாது. இந்நிலையில் இரு amendmentகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வங்கிக்கணக்கில் நாம் செய்யும் நாமினேஷன் பற்றியது இது.முன்னர் ஒரு நாமினியைத்தான் ஒருவர் தன் மறைவுக்குப் பின்னர் நியமிக்க முடியும். இப்பொழுது நான்கு பேரை நாமினியாக நியமிக்கலாம்.
Successive Nomination, Simultaneous Nomination. என்ன வித்தியாசம்?
முதலில் Successive Nomination. நாமினேஷனுக்கு பரிந்துரைக்கப்படும் நான்குபேரில் வரிசைப்படி, முதலாம் நபர் இல்லாவிட்டால், இரண்டாவது நபருக்கு மொத்தப் பணமும் செல்லும். இரண்டாம் நபர் இல்லாவிட்டால் மூன்றாவது... இப்படி வரிசைப்படி யாருக்குப் பணம் செல்லவேண்டும் என்பதை இந்த Successive Nomination முறை தீர்மானிக்கிறது.அடுத்து, Simultaneous Nomination. நான்குபேருக்குமே சரி சமமாகப் பிரித்துத் தரப்படும் முறையே இந்த Simultaneous Nomination. ரேங்கிங் எல்லாம் இல்லை.
ஒருவர் 50 லட்ச ரூபாய் வங்கியில் வைத்துவிட்டு மரணிக்கிறார். அவருக்கு நான்கு பிள்ளைகள். கடைசிப் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை, மற்ற மூவருக்கும் ஆகிவிட்டது.
பாவம் சின்னப்பிள்ளை என்ன செய்வான்? ஒரு பாதுகாப்பு இருக்கட்டுமே என்று கணக்கு துவங்கும்போது அவனை நாமினியாகப் போடுகிறார்.
மற்றவர்கள் அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர் இறக்கும்போது கடைசிப்பிள்ளை திருமணம் ஆகி செட்டிலாகிவிடுகிறார். இப்பொழுது மொத்தப் பணமும் அவருக்கே செல்லும். மற்ற மூவருக்கும் பணம் தேவைப்பட்டாலும் இவர் தரமாட்டார், தரவும் தேவையில்லை.
இதுபோன்ற சிக்கல்களுக்கு முடிவுகட்டத்தான் இந்த நான்குபேர் நாமினேஷன் முறை நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆனால், வங்கி லாக்கர்களில் Successive Nomination முறை மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது ஒருவர் இல்லாவிட்டால் அடுத்தவர் எனும் ரேங்கிங் முறை. இப்பொழுது CIBIL விஷயத்துக்கு வருவோம்.
முன்பே சொன்னபடி இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. தனியார் அமைப்பு என்பதால் இதன் நடைமுறை, இயங்கும் விதம் எல்லாம் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது; தோற்றமளிக்கிறது.
இந்த தனியார் நிறுவனம்தான் நம் ஒவ்வொருவரின் கிரெடிட்டையும் மதிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள், சரியாக நம் கிரெடிட்டுகளை அப்டேட் செய்கிறார்களா, அதில் எதாவது தவறு நடந்தால் எப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
இந்திய குடிமக்களுக்கும், இந்த தனியார் நிறுவனத்திற்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறது.வங்கிகளில் ‘கடனை சரியாகக் கட்டி இருக்கிறோம்’ என்று கூறினால், உங்கள் சிபில் ஸ்கோர் மோசமாக இருக்கிறது என்பதையே இந்திய மத்தியதர வர்க்கம் அன்றாடம் எதிர்கொள்கிறது. மக்களுக்கும் சிபிலிடம் எப்படி முறையிடுவது என்று தெரியவில்லை.விவசாயிகள் மானியம் மூலம் தங்களது கடனை அடைத்தால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை என்பதே பலரது குற்றச்சாட்டு. ஏ.ஆர்.சி மூலம் செட்டில்மெண்டுக்கு சென்றால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை. இந்த விஷயங்களில் பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இதை அரசு செய்ய வேண்டுமென்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
என்.ஆனந்தி
|