நல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!



பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன். வெள்ளித்திரை - சின்னத்திரை இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள் ?

எவ்வளவுதான் வித்தியாசமான கேரக்டர்களில் நடிச்சாலும் இன்னமும் எனக்கான ரீச் கொஞ்சம் குறைவா இருந்ததா உணர்ந்தேன். அதற்குதான் இடையில் ரெண்டு சீரியல்கள் ரிஸ்க் எடுத்து நடிச்சேன். 
வெள்ளித்திரை டூ சின்னத்திரை அது மிகப்பெரிய ரிஸ்க்தான். ஒண்ணு வாழ்க்கை அங்கே தொடர ஆரம்பிச்சுடும் இல்ல நாம் எதிர்பார்க்கிறதை விட மிகப்பெரிய ரீச் கிடைச்சு குடும்பங்கள்கிட்ட நம்ம பெயர் நிலைக்கும். எனக்கு இரண்டாவது நடந்துச்சு. இப்ப மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.

18+ டாக் உடன் ‘ஃபயர்’ படம்..?

அப்படித்தான் நானும் முதலில் யோசித்தேன். ஆனா, 18+ டாக் போல்டான கதைக்கும் கொடுக்கறதுண்டு. குழந்தைகளுக்கான கதையாக சில கதைகள் இருக்காது, குடும்பங்கள் சேர்ந்து எல்லோரும் சில படங்கள் பார்க்க விரும்ப மாட்டாங்க. அதற்கான அலர்ட்தான் இந்த படத்துக்கான 18+ டாக். நிச்சயம் பெண்கள் கொண்டாடுவாங்க.

இயக்குநர், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் உடன் பணியாற்றிய அனுபவம்..?

இயக்குநராக அவருக்கு முதல் படம். ஆனால், தயாரிப்பாளராகவும் அவ்வளவு கச்சிதமா திட்டங்கள் செய்திருந்தார். இயக்குநராக அவருடைய முதல் காட்சியை நானும் பாலாஜியும் சேர்ந்து நடிக்கற மாதிரிதான் எடுத்தார். முதல் நாளிலிருந்து மொத்த ஷூட்டிங் ஸ்பாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே என்னென்ன காட்சி என்ன கேரக்டர் என முழுமையாக சொல்லிட்டார். ரொம்ப நல்ல மனிதர்.

உங்க கேரக்டர்..?

இந்தப் படத்தில் என்னுடைய பெயர் துர்கா. ஒரு போல்ட் கேரக்டர். மேலும் லவ் ரொமான்டிக் பார்ட்டாகவும் என்னுடைய கேரக்டர் இருக்கும். என்கூட நடிச்ச பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான்... இப்படி அத்தனை பேருமே இந்தப் படத்தின் கதாநாயகி - கதாநாயகர்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான முக்கியமான ரோல். நிச்சயம் இந்தப் படம் சமூகத்துக்கு நல்ல மெசேஜ் ஆகவும் இருக்கும்.

நீங்க எதை அடிப்படையாகக் கொண்டு கதைகள் கேட்கறீங்க..?

நடித்தால் ஹீரோயின் அப்படின்னு என்னைக்குமே யோசித்தது கிடையாது. எவ்வளவு நேரம் வருகிறோம் என்கிறதைத் தாண்டி என்னுடைய கேரக்டர் எந்த அளவுக்கு கதைக்கு முக்கியமா இருக்கு... அதை அடிப்படையாகக் கொண்டுதான் கதைகள் தேர்வு செய்கிறேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

‘சுழல்’ சீசன் 2 சீரிஸ் எதிர்பார்த்து காத்து இருக்கேன். விஜய் ஆதிராஜ் சார் டைரக்‌ஷனில் நரேன் சார் கூட ஒரு படம். நட்டி சார் கூட ரெண்டு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். அரவிந்த்சாமி சார், சிம்ரன் மேடம் கூட ‘வணங்காமுடி’ படம். ஸ்ரத்தா நாத் கூட ஒரு வெப் சீரிஸ், ஸ்டோன் பெஞ்ச் சார்பா ஒரு படம், காந்த் கூட ஒரு படம் முடிஞ்சிடுச்சு. இன்னும் சில படங்கள் ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு.

சினிமாவில் உங்களுக்கான இடம் கிடைச்சிருச்சா?

எனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பே பெரிய லக்குதான். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பைத் தக்க வச்சிக்கிட்டு தொடர்ந்து நடிச்சேன். இப்போ கதைகளை தேர்வு செய்து நடிக்கிறதால நல்ல படங்களும் வர ஆரம்பிச்சிருக்கு. என்னுடைய கேரக்டரும் வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு. சினிமா கரியரையே நான் பெரிதாக திட்டமிடல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியா பயன்படுத்தி முன்னேறி போய்க்கிட்டு இருக்கேன். அதனால் எந்த இடத்தையும் நான் எதிர்பார்க்கலை. நல்ல நடிகை என்கிற பெயர்தான் என்னுடைய எதிர்பார்ப்பு.

பல மொழிகளில் தொடர்ந்து படங்கள்... எப்படி இதை சாத்தியப்படுத்தினிங்க?

ஸ்கூல் ஸ்டுடென்ட் ஆக இருக்கும்பொழுதே படத்தில் நடிக்க வந்தேன். அதனால் அப்போதிருந்தே எதையும் மனப்பாடம் செய்கிற திறமை இருந்தது. அதை வைத்து மொழியே தெரியலைன்னாலும் மனப்பாடம் செய்து நடிக்க ஆரம்பிச்சேன். அதுதான் இப்போ வரைக்கும் என்னுடைய சீக்ரெட். இப்போ சில மொழிகளும் கத்துக்கிட்டு இருக்கேன். நல்ல கதைகள் வரும்போது புரிஞ்சி நடிக்கிறதும் தேவையா இருக்கு.

திருமணத்துக்குப் பின் நடிப்பு..?

எனக்கும் சரி என் கணவருக்கும் சரி... இது என்னுடைய ப்ரொஃபஷன். குடும்பம் வேறு ப்ரொஃபஷன் வேறு. இதை அவரும் புரிஞ்சி இருக்கார். அதனால் எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வேலை செய்கிறேன். அவர் நிறைய சப்போர்ட் செய்கிறார்.

14 வருட சினிமா பயணத்தில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பொறுமையா இருக்கணும். காத்திருப்பு ரொம்ப அவசியம். எல்லாத்துக்கும் மேல ஒரு விஷயத்தை பிடிச்சு ஆத்மார்த்தமா செய்யும்பொழுது அதற்கான பலன் நிச்சயம் தேடி வரும்.

ஷாலினி நியூட்டன்