ராஜா... ராஜாதிராஜன் இந்த ராஜா..!
அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம். உடனே அந்தத் தயாரிப்பாளர் ‘ராகதேவன் இசையில்’ அல்லது ‘இசைஞானியின் இசையில்’ என்று பெரும்பாலும் கதாநாயகன் ஃபோட்டோ இல்லாமலேயே இளையராஜாவின் புகைப்படத்தை இடம்பெறச்செய்து செய்தித்தாள்களில் முழுப் பக்க அளவுக்கு விளம்பரம் கொடுப்பார்.
யார் கதாநாயகன்? எந்த இயக்குநர் இயக்குகிறார்... என்பதையெல்லாம் கூடப் பார்க்காமல் இளையராஜா இசை என்பதற்காகவே அந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போடுவார்கள்.இது கூடக்குறையப் பேசப்படும் விஷயமோ இளையராஜாவை தூக்கிப்பிடிப்பதற்காகவோ அல்ல. அப்படியே நடந்த உண்மை என திரையுலக மூத்தோர் சொல்வார்கள். அது ஒரு காலம் என்று சொல்வது பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் சொல். உண்மையில் அவர் எல்லாக் காலத்திலும் எப்போதும் ராஜாதி ராஜாவாக இருந்து வருகிறார். வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு மேல் இசையமைத்திருந்த எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது. எண்ணிக்கை குறைந்தாலும் வீரியம் குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவ்வப்போது அவருடைய படங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
‘சைக்கோ’ (உன்ன நெனச்சே...), ‘மாமனிதன்’ (தட்டிப்புட்டா...), ‘விடுதலை’ (வழி நெடுக காட்டு மல்லி..., ஒன்னொட நடந்தா...) உள்ளிட்ட படங்களும் இப்போது வெளியாகவுள்ள ‘விடுதலை-2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘தெனந்தெனமும் ஒன் நெனைப்பு வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே...’ பாடலும் அவருடைய இருப்பைப் பறைசாற்றும் அண்மைக்காலப் படங்கள்.
இவை அவர் இசையமைத்த படங்கள்.அவர் இசையமைக்காமல் வேறொரு இசையமைப்பாளர் இசையில் தயாராகும் படங்களின் வெற்றிக்கும் அவர் இசையமைத்த பழைய பாடல்கள் காரணமாக இருக்கின்றன என்பதற்கு இவ்வாண்டு மிகப் பெரிய சான்றாக இருக்கிறது.
2024 பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. வளரும் மலையாள நடிகர்கள், தன்னுடைய இரண்டாவது படமாக இந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம், சுசின் சியாம் என்கிற இசையமைப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழு உருவாக்கிய இந்தத் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
எந்தளவிற்கு வெற்றி என்றால் சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இருநூறு கோடி வரை வசூல் செய்து அனைவரையும் வாய்பிளந்து பார்க்க வைத்தது.அவ்வளவு பெரிய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் இளையராஜாதான். 1991ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சந்தானபாரதி இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான படம் ‘குணா’. அந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 5ம் தேதி வெளியானது அந்தப்படம். அதே நாளில் வெளியான இன்னொரு படம் ‘தளபதி’. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி உள்ளிட்டோர் நடிப்பிலும் இளையராஜாவின் இசையிலும் வெளியானது. கமல், ரஜினி போட்டியில் ரஜினி படம் வசூல் வெற்றியைப் பெற்று முந்தி நின்றது. அந்தப்படத்தின் பாடல்கள் இளையராஜாவுக்குப் பெரும் புகழ் சேர்த்தவைதாம்.
அதே சமயம் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...’ பாடல், 33 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னொரு படத்தின் தயாரிப்பாளர் நூறு கோடிக்கும் மேல் லாபம் சம்பாதிக்கத் துணையாக அமைந்தது.
அதுமட்டுமா? அந்தப்படத்தின் இயக்குநரை மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் முன்னணி கதாநாயகர்கள் அழைத்துப் பேசி ‘எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்’ என்று கேட்குமளவுக்கு மாயாஜாலமெல்லாம் நடந்தது.
அடுத்து, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி வெளியான படம் ‘லப்பர் பந்து’. இந்தப் படமும் சில கோடிகளில் எடுக்கப்பட்டு பல கோடி லாபம் சம்பாதித்த படம். இதுபோன்றதொரு சின்னப் படம் இவ்வளவு வசூல் செய்யும் என்று அதற்கு முன் யாராவது சொல்லியிருந்தால் சொன்னவரை எள்ளி நகையாடியிருப்பார்கள்.
ஆனால், அந்தச் சாதனையைச் செய்தது அந்தப் படம். அந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிகர்கள், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் சமுதாயப் பார்வை ஆகியன அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் எனினும் அந்த வெற்றிக்கு உறுதுணையாக இளையராஜாவின் பாடல் இருந்தது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் என்றாலும் அந்தப் படத்தில் இளையராஜா பாடல் இடம்பெற்றிருந்தது.1989ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மனச் செல்வன்’. இந்தப்படத்தில் விஜயகாந்த்தின் அறிமுகப் பாடலாக அமைந்திருந்த பாட்டு, ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்... ஊருக்கு நீ மகுடம்...’ எனும் பாட்டு.
இளையராஜா இசையமைப்பில் கங்கை அமரன் எழுதியிருந்த அந்தப் பாடல் 35 வருடங்களுக்குப் பிறகு வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் கூஸ்பம்ப் ஆக அமைந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.அந்தப் பாடல் அந்தப்படம் வெளியான காலத்தில் கூட இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது பட்டி தொட்டியெல்லாம் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியான படம் ‘வாழை’. இதுவும் கையடக்க பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வருவாயை ஈட்டிய படம்.
மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். ஆனால், அவர் இசையில் உருவான பாடல்களைக் காட்டிலும் சூழலுக்குத் தக்க பழைய படப் பாடல்கள் சிலவற்றைப் பயன்படுத்தியிருந்தார்கள்.
அவற்றில் இளையராஜா இசையில் உருவாகியிருந்த ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி...’ என்கிற பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலும் ஒன்று. இந்தப் பாடல் 1993ம் ஆண்டு பன்னீர் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, கனகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘சந்தனத் தேவன்’ படத்தில் இடம்பெற்ற பாடல்.
இந்தப் படத்தில் வாலி எழுதி இளையராஜா இசையமைத்திருந்த பாடல்தான் ‘மஞ்சள் பூசும்...’ பாடல். படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னொரு படத்தின் வெற்றிக்கு அந்தப்பாடலும் துணை புரிந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும்தான் இளையராஜா பாடல்களால் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வோர் ஆண்டும் இது நடக்கிறது. அவையெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை என்பதுதான் உண்மை.2018ல் வெளியான ‘96’ திரைப்படம் உடனடியாக நினைவுக்கு வரக்கூடிய படம். விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைய இளையராஜா பெரும் பங்காற்றினார் என்பதில் மிகையில்லை.
அதுமட்டுமல்ல, 2008ம் ஆண்டு வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்போது முன்னணி நடிகராக வலம் வரும் சசிக்குமாரை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக அடையாளப்படுத்திய படம் அது.
அந்தப் படத்தில்தான் ‘சின்னத்திரை’ புகழ் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.80களின் மதுரை மனிதர்கள் வாழ்வியலை 2கே கிட்ஸுக்கு காட்சிப்படுத்திய அந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் எழுதி உருவான ‘சிறு பொன்மணி அசையும்...’ பாடலை பயன்படுத்திய விதம் படத்துக்கு பெரும் பலம் சேர்த்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
சொல்லப்போனால் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது சமீபத்தில்தான் அதிகமாகியுள்ளது என்றாலும் அதற்கு முதல் பாதையை எவ்வித குளறுபடியும் இல்லாமல் செம்மையாக அடித்தளம் அமைத்துக் கொடுத்த படம் ‘சுப்ரமணியபுரம்’. இவை மட்டுமல்ல, ஏராளமான படங்கள் இளையராஜாவின் இசையில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களைப் பயன்படுத்தி லாபம் பார்த்துள்ளன.
அவருடைய பின்னணி இசைக் கோர்ப்பைப் பயன்படுத்தி வரும் படங்களும் ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
அதே சமயம் எந்த இசையமைப்பாளர் இசைத்திருந்தாலும் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் எல்லாவற்றிலுமே இளையராஜாவின் பின்னணி இசை எங்கேயாவது எட்டிப்பார்த்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
எவ்வளவோ இசை மேதைகள் கோலோச்சிய திரையுலகம் இது. எல்லோரையும் தாண்டி இளையராஜா நிலைத்திருப்பதற்கும் நீடித்திருப்பதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
எழுத்தில் வடிக்கப்படாத, பாமர மக்களின் உழைப்பின் வலியிலிருந்து உருவான இசையிலிருந்து பிறந்தவர் அவர். கிராமம் கிராமமாகப் போய் மக்களுடன் கலந்து அவர்களிடம் பாடி, பழகியவர் என்பது ஒன்று.
இந்தத் துறைக்கு முழுமையாக வந்தவுடன் முறையாக இசை கற்று எந்தப் பாடலுக்கும் எந்த முன்னுதாரணமும் மேற்கோளும் இல்லாத, அதாவது ரெஃபரென்ஸும் இல்லாமல் உள்ளத்திலிருந்து இசையை வெளிப்படுத்துபவர் என்பது மற்றொன்று.அந்த உண்மை வலியது. அதுவே காலம் கடந்தும் வெல்கிறது.
எஸ்.ராஜா
|