கிழியும் டாலரின் டவுசர்... வருகிறதா புதிய BRICS நாணயம்..?



இதுதான் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும்... மாநில அளவிலும் பேசப்படும் பொருள்.அமெரிக்க டாலர் பல ஆண்டுகளாக சர்வதேச வர்த்தகத்துக்கான அதிகாரபூர்வ நாணயமாக  இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலங்களில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக டாலரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் புதிய நாணயத்தை உருவாக்குவது பற்றி பரவலாகப் பேசப்படுகிறது.

குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்த டாலர் பயன்பாட்டை குறைக்கும் யோசனைகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.‘ஸ்டேட் டூமா’வின் துணைத் தலைவரான அலெக்சாண்டர் பாபகோவ் ‘டாலர் அல்லது யூரோவை சார்ந்திருக்கப்போவதில்லை...’ என்ற யுக்தியின் அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளில் டாலரைத் தவிர்த்து பணம் செலுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை குறிப்பிட்டதிலிருந்து ​​இந்த இயக்கம் மேலும் உத்வேகத்தைப் பெற்றுள்ளது.

*நாணயத்தின் ராஜாவை அகற்றுவது

உலகளவில் நாணயத்தின் ராஜாவாக இருப்பது அமெரிக்க டாலர்தான். இது 1944ல் உலகின் அதிகாரபூர்வ இருப்பு நாணயமாக மாறியது. ‘பிரிட்டன் WOOTS ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் 44 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.அப்போதிருந்து, டாலர் உலகில் ஓர் சக்திவாய்ந்த நிலையை அனுபவித்து வருகிறது.

இது மற்ற பொருளாதாரங்கள் மீது அமெரிக்காவுக்கு விகிதாசார செல்வாக்கை கொடுத்துள்ளது. உண்மையில், வெளிநாட்டுக் கொள்கை இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக அமெரிக்கா நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இருப்பினும், எல்லோரும் அமெரிக்க விதிகளின்படி விளையாடுவதை விரும்புவதில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் மேலாதிக்கத்தை நிறுத்த விரும்புகின்றன. இந்த செயல்முறை டி-டாலரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. 

இது உலகளாவிய சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதைக் குறிக்கிறது. இது எண்ணெய் அல்லது பிற பொருட்களை வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படும் நாணயமாக அமெரிக்க டாலரை மாற்றி புதிய பொது பணத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் செயல்முறையாகும்.

இந்த செயல்முறையானது அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது மற்ற நாடுகளின் சார்புநிலையைக் குறைக்கும். இது அமெரிக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் தாக்கத்தை அவர்களின் சொந்தப் பொருளாதாரங்களில் குறைக்க உதவும் என்று டி-டாலரைசேஷன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

மேலும், நாடுகள் டாலர் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்களால் வரும் விளைவுகளுக்கு ஆட்படுவதை குறைக்கலாம். இது பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் நிதி நெருக்கடிகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக வேகம் பெற்று வருகிறது. 2022ம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அமெரிக்க டாலர் கையிருப்பை வெகுவாக குறைத்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.IMFன் - சர்வதேச நிதி நாணயம் - அதிகாரபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு தரவுகளின்படி உலகளாவிய அந்நிய செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு 59 சதவீதத்திற்கும் கீழே சரிந்திருக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இதுவே அதிகபட்ச சரிவு என்று குறிப்பிடுகிறது.

வியக்கத்தக்க வகையில், டாலர் சரிவுக்கு பதிலாக நீண்ட காலமாக பரவலாக டாலருக்கு அடுத்து உலக நாடுகள் கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ ஆகிய நாணயங்களின்  கையிருப்பு அதிகரிக்கப்படவில்லை. 

மாறாக, இரண்டு திசைகளில் டாலருக்கு மாற்றாக வேறு பணத்தின் கையிருப்புகள் அதிகரிக்கப்படுகிறது. அதில் நான்கில் ஒரு பங்கு சீன யுவான் ஆகவும் மற்ற மூன்று பங்கு இதற்கு முன்பு மிகவும் குறைவான அளவிலேயே கையிருப்பில் வைக்கப்பட்ட சிறிய நாடுகளின் கரன்சிகளின் கையிருப்புமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்காக தண்டிக்க, மேற்கத்திய அரசாங்கங்கள் ரஷ்யாவின் 300 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணய இருப்புக்களை முடக்கின. இது மொத்தத்தில் பாதியாக இருந்தது. இது போதாது என்று ரஷ்ய வங்கிகளை ஸ்விஃப்ட் சர்வதேச கொடுப்பனவு அமைப்பிலிருந்து  வெளியேற்றியது.

முதலீட்டுத் தளமான பெஸ்டின்வெஸ்டின் நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹாலண்ட்ஸ் விளக்குவது போல், ‘டாலர் ‘ஆயுதமயமாக்கல்’ என்று அழைக்கப்படுவது ரஷ்யாவை மட்டுமல்ல, பல நாடுகளையும் உலுக்கியுள்ளது...’“இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகள், அதற்கு பதிலாக ரூபாய் மற்றும் யுவானில் அவ்வாறு செய்யத் தொடங்கியுள்ளன. 

சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் மதிப்பை குறைப்பது பற்றிய விவாதத்தை தூண்டுகின்றன...”பிரேசிலும் சீனாவும் இப்போது யுவானில் பரஸ்பரம் வர்த்தகம் செய்து வருவது, சீன ரென்மின்பியை ( யுவான்) சர்வதேச நாணயமாகவும் டாலருக்கு சவாலாகவும் நிலைநிறுத்த உதவுகின்றன.

இந்தியாவும் டாலரை விட்டு விலக முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில், இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 18 நாடுகளுக்கு இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரபல பொருளாதார நிபுணர் நூரியல் ரூபினி, காலப்போக்கில் இந்திய ரூபாய் உலகின் உலகளாவிய இருப்பு நாணயங்களில் ஒன்றாக மாறக்கூடும் என 2018ம் ஆண்டு தெரிவித்ததை இந்த இடத்தில் நினைவுகூர்வது நல்லது.

‘ET Now’க்கு அளித்த பேட்டியில், ‘டாக்டர் டூம்’ என்ற புனைப்பெயர் கொண்ட பொருளாதார நிபுணர், “இந்தியா உலகின் பிற நாடுகளுடன் செய்யும் சில வர்த்தகங்களுக்கு, குறிப்பாக தெற்கு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் ஒரு பொது நாணயமாக மாறக்கூடும் என்பதை ஒருவர் பார்க்கலாம்...” என்று கூறுகிறார்.

“அது (இந்திய ரூபாய்) கணக்கின் யூனிட்டாக இருக்கலாம், பணம் செலுத்தும் வழிமுறையாக இருக்கலாம், மதிப்புக் கடையாக இருக்கலாம். நிச்சயமாக, இந்திய ரூபாய் காலப்போக்கில் உலகின் பல்வேறு உலகளாவிய இருப்பு நாணயங்களில் ஒன்றாக மாறக்கூடும்...’’ என்றும் குறிப்பிடுகிறார்.

*BRICS நாணயம்

இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பும் வர்த்தகத்தை எளிதாக்க புதிய நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த யோசனையின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ரஷ்யாவும் இந்தியாவும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்குவதன் மூலம் பரஸ்பரம் பயனடைய முடியும் என்றும், இந்த நேரத்தில் ‘மிகவும் சாத்தியமான’ பாதை என்றும் அலெக்சாண்டர் பாபகோவ் குறிப்பிடுகிறார். “புது தில்லியும், மாஸ்கோவும் ஒரு புதிய பகிரப்பட்ட நாணயத்துடன் ஒரு புதிய பொருளாதார கூட்டமைப்பை நிறுவ வேண்டும். அது டிஜிட்டல் ரூபிளாகவோ அல்லது இந்திய ரூபாயாகவோ இருக்கலாம்...” என்று பாபகோவ் மேற்கோள் காட்டினார்.

அத்துடன் 1.4 பில்லியன் பங்கேற்பாளர்களை இந்த அமைப்பில் சேர்க்கும் வகையில், பொது நாணயத்தை உருவாக்குவதில் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
“புதுதில்லி, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆகியவை பல்துருவ உலகை உருவாக்கும் திறன் கொண்டவை என்பது பெரும்பான்மையான அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன...” என அடித்துச் சொல்கிறார்.

 “ நமது பொருளாதாரக்  கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலரையோ, ஐரோப்பாவின் யூரோவையோ சார்ந்திருக்காமல் நமது பரஸ்பர நோக்கங்களுக்கும் நலன்களுக்கும் பயன்  அளிக்கும் திறன் கொண்ட வகையில்  புதிய கரன்சியை உருவாக்க வேண்டும்...” என்கிறார்.

சுவாரஸ்யமாக, பிரேசில் ஏற்கனவே யுவானில் வர்த்தக தீர்வுகள் மற்றும் முதலீடுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் வர்த்தகத்துக்கான ரூபாய் - ரூபிள் பொறிமுறையைக் கொண்டுள்ளன. 

அதில் அவர்கள் டாலர் அல்லது யூரோக்களுக்குப் பதிலாக ரூபாய்களில் நிலுவைத் தொகையைச் செலுத்துகிறார்கள்.BRICS நாடுகள் டாலர் ஆதிக்கம் செலுத்தும் முறையை மாற்ற உத்தேசித்துள்ளன என்பதையே இது காட்டுகிறது. இது இறுதியில் உலகம் முழுவதும் டாலர் மதிப்பிழப்புக்கு வழிவகுக்கும்.

*BRICS நாணயத்தின் தாக்கங்கள்

BRICS நாடுகள் தங்கள் திட்டத்தை முன்னோக்கிச் சென்று புதிய நாணயத்தைக் கொண்டு வந்தால், அது அவர்களின் பொருளாதாரத்தை வலிமையாக்க உதவும். முதலீட்டாளர்களின் பார்வையில் BRICS நாடுகளில் இது நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும். 

இது வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.ஆனால், இந்த புதிய நாணயத்தை இந்தியா ஏற்குமா? எல்லையில் முட்டுக்கட்டை போடும் சீனாவுடன் பொருளாதார ரீதியாக ஒத்துப்போக விரும்புமா? மேலும், இந்த புதிய ஒப்பந்தம் புதுதில்லியை விட பெய்ஜிங்கிற்கு அதிக பலன் அளிக்கக்கூடும் எனவும் சிலர் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், டாலர் சக்தியை இழக்கிறது என்பது மட்டும் சர்வநிச்சயம்.(‘ஃபர்ஸ்ட் போஸ்ட்’ தளத்தில் வெளியான ‘Dumping the Dollar:  Will a new BRICS currency replace the US currency for trade?’ என்ற கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது).

பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

இந்தியா உட்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் எந்தவொரு வர்த்தகமும் செய்ய முடியாமல் தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் எனப்படுவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் ஏற்கனவே துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகியவை உறுப்பினர்களாகச் சேர விண்ணப்பித்துள்ளன. மேலும் பல நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில் டிரம்ப் இதுபோல கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச அளவில் இப்போதும் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலர்தான் உள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தகத்திற்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து வர்த்தகத்திற்கும் டாலர் தான் பயன்படுத்தப்படும். 

அதாவது நாம் ஜப்பானில் இருந்து மின்சாதனப் பொருட்களை வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் ஜப்பானுக்கு இந்திய ரூபாய் அல்லது ஜப்பானிய யென் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்த மாட்டோம். மாறாக அமெரிக்க டாலரிலேயே பணம் செலுத்துவோம்.

இதுபோல உலகில் எந்த இரு நாடுகளுக்குள் நடக்கும் வர்த்தகமாக இருந்தாலும் பொதுவாக டாலர் தான் பயன்படுத்தப்படும். கடந்த காலங்களில் பல சிக்கல்கள் வந்தாலும் அதைத் தாண்டி சர்வதேச வணிகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக டாலரே இருக்கிறது. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் அமைப்பில் அமெரிக்காவின் இந்த ஆதிக்கம் உலகின் பல நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் டாலருக்குப் பதிலாக வேறு பொது கரன்சியை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. கடந்த அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்.ஆனந்தி