காதலால் மனதை நனைக்கும் இந்த மழை!
‘ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ்’ சார்பில் பி.ராஜேஷ்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இதில் நாயகனாக அன்சன் பால், நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘சங்கர் குரு’ ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மென்மையான காதல், அதற்கேற்ப நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை வருடும் மெல்லிசை காதல் பாடல்கள் சகிதமாக 90ஸ் ஸ்டைல் காதல் கதையாக கவனம் ஈர்க்கிறது. ‘‘காதல்ன்னாலே மழை மாதிரி அழகானதுதானே. காதல் மழையில் நனையாத மனுஷன் யார் இருக்காங்க?! அப்படி ஒரு மழைதான் இந்த ‘மழையில் நனைகிறேன்’ கதை...’’ தலைப்பின் காரணத்துடன் பேசத் துவங்கினார் அறிமுக இயக்குநர் சுரேஷ்குமார்.
முதல் படம் வெளியாக இருக்கு... இந்தப் பயணம் பற்றி சொல்லுங்க..?
15 வருடங்களுக்கு மேலான காத்திருப்புக்குப் பிறகான முதல் பட வாய்ப்பு இது. படம் ஒப்பந்தம் ஆனதும் இடையில் கொரோனா பிரச்னை. அதையெல்லாம் கடந்துதான் படத்தை முடிச்சிருக்கோம்.சென்னைதான் சொந்த ஊர். அப்பா சென்ட்ரல் கவர்மெண்ட் பணியாளர். அம்மா ஹவுஸ்வைஃப். நானும் எம்.காம் படிச்சேன். என்னையும் ஒரு அகாடமிக்கா, ஒரு கவர்மெண்ட் வேலையிலே பார்க்கவே அப்பா ஆசைப்பட்டார்.
ஆனால், பெரிதாக வற்புறுத்தலை. ஒரு கட்டத்தில் என்னுடைய விருப்பம் இதுதான்னு தெரிஞ்சு விட்டுட்டாங்க. ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ப்ராஜெக்ட் செய்தேன். நிறைய விளம்பரப் படங்கள்ல வேலை செய்திருக்கேன்.
பிறகு தனியா ஒரு படம் செய்யலாமே அப்படின்னு இந்த கதையை எழுதினேன். அப்போ தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் சார் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். அப்போதைக்கு இது பெரிய ப்ராஜெக்ட்... பெரிய பணம். என்னை நம்பி எப்படி இறங்குவாங்க அப்படின்னு யோசிச்சேன். ஆனால், ராஜேஷ்குமார் சார் என்மேல அவ்ளோ நம்பிக்கை வைத்திருந்தார். என்னுடைய காலேஜ் கிளாஸ்மேட் ஃப்ரண்டுடைய பிரதர்தான் அவர். காதல்தான் அடிப்படை கதையா ?
ஒரு பொண்ணும் பையனும் சந்திக்கிறார்கள். பையனுக்கு காதல் வருது. புரபோஸ் செய்கிறார். அந்தப் பொண்ணு ரிஜெக்ட் செய்யறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல அந்தப் பொண்ணுக்கு காதல் வருது. அது எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்குது என்கிறதுதான் கதை.
ரெபா மோனிகா - அன்சன் பால்... ஜோடிப் பொருத்தம் எப்படி வந்திருக்கு?
ரெண்டு பேருமே நல்ல நடிகர்கள். இந்த மொத்த கதையும் அவங்க மேலதான் ட்ராவல் ஆகுது. அன்சன் இதற்கு முன்பு ‘ரெமோ’, ‘90 எம்எல்’, ‘தம்பி’ உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் நிறைய மலையாளப் படங்களிலும் நடிச்சிருக்கார். ரெபா மோனிகா ஜான்... அவங்க நடிக்கிற படங்கள் அடிப்படையிலேயே சொல்லலாம். எண்ணிக்கைக்காக படம் நடிக்கிற நடிகை கிடையாது. இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்தாங்க.
நாங்க அவங்ககிட்ட கேட்டது ‘பிகில்’ படம் வெளியான நேரத்துல. கதை கேட்டுட்டு புடிச்சிருக்குன்னு சொன்னாங்க. இவங்க இல்லாம அனுபமா குமார், மேத்யூ வர்கீஸ், வெற்றி வேல் ராஜா, கிஷோர் ராஜ்குமார் எல்லோருக்குமே முக்கியமான கதாபாத்திரங்கள். படம் முழுக்க மழை சீசனான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் ஷூட்டிங் எடுத்தோம். அந்த உணர்வையும் படம் முழுக்க கொடுக்கணும்னு முடிவு செய்தோம்.
அதிகம் வெயில் இல்லாத ஒரு டோன். அதை ரொம்ப அழகா திரையில் கொண்டு வந்திருக்கிறார் சினிமாட்டோகிராபர் ஜே. கல்யாண். இதற்கு முன்பு ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’, ‘விஷமக்காரன்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்திருக்கார். எடிட்டர் ஜி. பி. வெங்கடேஷ் இதற்கு முன்பு ‘வடசென்னை’, ‘பொறியாளன்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அவர்தான் எடிட்டர்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறைய மெலோடி பாடல்கள் இருக்கிற முழுமையான ஆல்பமா கொடுத்திருக்கார் மியூசிக் டைரக்டர் விஷ்ணு பிரசாத். பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. பின்னணி இசையும் தென்றல் மாதிரி இருக்கும்.
இக்கால காதல் மற்றும் ரிலேஷன்ஷிப்புக்கு படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா?
அப்படியான பிரசார நெடியில் இல்லாமல், எந்தக் காலத்துக்கும் எந்த மெசேஜும் இந்தப் படத்தில் கிடையாது. ஒரு அழகான காதல் கதை. காதல் புரபோஸ் கூட ஒருவிதமான ஸ்டாக்கிங் அல்லது டார்ச்சர் மாதிரியான காட்சிகள் கூட நாங்க செய்யல. எப்பவுமே எக்காலத்திலும் காதல், தானாக நடக்கும். அந்த விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டு இந்தக் கதையை உருவாக்கி இருக்கோம்.
ரஜினிகாந்தின் வாழ்த்து..?
இப்போ இந்த மொமெண்ட் வரையிலும் கனவு மாதிரி இருக்கு. தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் சார் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி சாருக்கு யார்தான் ரசிகர் கிடையாது! எங்களுடைய படம் சரியா ரஜினி சார் பிறந்தநாள் அன்னைக்கு டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது. எங்கேயோ எங்க படம் மேலே கடவுள் அருள் இருக்குன்னு நினைக்கிறேன். தானாகவே அந்த தேதி அமைந்தது.
மொத்த படத்தையும் ரஜினி சாருக்கு டெடிகேட் செய்கிறோம் அப்படின்னுதான் சாரை சந்திச்சு வாழ்த்து கேட்டோம். அப்படிதான் அந்த மொமெண்ட் நடந்துச்சு. இல்லைனா பொதுவா சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரஜினி சார் இதுவரையிலும் வீடியோ பைட்ஸ் கொடுத்ததில்லை. பெரிய படங்களுக்குக் கூட ஒருவேளை அவரால் வர முடியாத பட்சத்தில் வாழ்த்துச் செய்தி அனுப்புவார்.
படம் வெளியான பிறகு பெரிய அளவில் வெற்றி அடைந்தா ரஜினி சாரே கூப்பிட்டு மொத்த குழுவையும் வாழ்த்தி செய்திகள் வரும். ஆனால், இது ரொம்ப புதுசு. அந்த லக் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.
‘மழையில் நனைகிறேன்’...?
நாயகி ரெபாவின் முதல் காட்சி துவங்கி படத்தின் கிளைமாக்ஸ் வரையில் ஏதாவது ஒரு கட்டத்தில் படத்தில் மழை இருந்துகிட்டே இருக்கும். அதற்காக சும்மா மழை அப்படின்னு இல்லாம கிளைமாக்ஸில் இந்தத் தலைப்புக்கு நியாயம் சேர்க்கற மாதிரி ஒரு காட்சியும் காரணமும் இருக்கும். மழை அழகானது. அப்படிதான் காதலும். மென்மையான ஒரு காதல் கதை. அதை எதிர்பார்த்து வாங்க.
ஷாலினி நியூட்டன்
|