கிரிக்கெட் வெற்றியும் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சில நகரங்களும்!
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான பெர்த் டெஸ்ட்டில் வரலாற்று வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேற இந்த வெற்றி இந்திய அணிக்குக் கைகொடுக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரை, பெர்த் கிரிக்கெட் டெஸ்ட் பற்றியோ அல்லது இந்திய அணியின் சிறப்பான வெற்றியைப் பற்றியோ ஆனதல்ல. பெர்த் நகரத்தைப் பற்றியது. உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பெரிய நகரங்களில் பெர்த்தும் ஒன்று என்ற தகவல் குறித்தானது. சரி, அதென்ன தனிமைப்படுத்தப்பட்ட நகரம்?
அதாவது இதைப்போல் ஒரு பெருநகரம் அதன் அருகில் இல்லாமல் இருக்கும். அல்லது அந்நாட்டின் தலைநகரிலிருந்து நீண்ட தொலைவையும், எளிதில் அணுகமுடியாதபடியும் அமைந்திருக்கும். அப்படியான நகரங்களைத் தனிமைப்படுத்தப்பட்டவை எனக் குறிப்பிடுகின்றனர். இது ஆஸ்திரேலியா என்றில்லை. உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள் நிறைய இருக்கின்றன. பெரு நாட்டின் இகியூடோஸ், ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி, அர்ஜென்டினாவின் உஷ்வயா உள்ளிட்ட நகரங்களைக் குறிப்பிடலாம். இதற்கு அவற்றின் அமைவிடம், தொழில் சார்ந்த விஷயங்கள் உள்பட சில காரணங்கள் உள்ளன. அப்படியாக சில தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள் குறித்து இங்கு பார்ப்போம். பெர்த்
மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பெர்த். இங்கு சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரம் பெர்த்தான்.ஆனால், அந்நாட்டின் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நகரமாக விளங்குகிறது. ஏனெனில், ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பெரிய நகரங்கள் உள்ளன. மேற்குப் பகுதியின் ஒரே பெரிய நகரம் பெர்த் மட்டுமே.
இங்கிருந்து அடிலெய்ட் நகரம் சுமார் 2,130 கிமீ தொலைவிலும், மெல்போர்ன் சுமார் 2,700 கிமீ தூரத்திலும், ஆஸ்திரேலியாவின் தலைநகரம் கான்பெர்ரா சுமார் 3,000 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன. அப்படியாக அடிலெய்ட்தான் பெர்த் அருகிலுள்ள மிகப்பெரிய நகரமாகத் திகழ்கிறது. இதற்கு பெர்த்திலிருந்து காரில் செல்ல வேண்டுமென்றால் 28 மணி நேரம் பயணிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேர விமானப் பயணம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல, பெர்த்திலிருந்து சிட்னிக்கு செல்லும் தூரத்தைவிட இந்தோனேஷியாவின் பாலிக்கு செல்வது எளிது எனச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு இரு நகரங்களுக்கான தொலைவு அமைந்துள்ளது.
பெர்த் நகருக்கு 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுரங்கத்திலிருந்து தங்கம் எடுக்கவேண்டி மக்கள் வந்து சேர்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பியர்களின் வருகையும் அதனால் அதிகரித்த சுரங்க நடவடிக்கைகளும் மக்கள் தொகையை உயர்த்தியது.
இன்று பெரிய நகரமாக வளர்ந்து நிற்கும் பெர்த்தில் இரவு விடுதிகள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து அமைப்பு என சகலமும் உள்ளன. ஆனால், வேலை வாய்ப்பு பிரச்னைகள் வந்தால் இந்நகரை விட்டு ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மற்ற பெரிய நகரங்களுக்கே படையெடுக்க வேண்டும். அது பெரும் சவாலானது.
தவிர, நகரில் வசிப்பவர்கள் இந்நகரைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் வேறு நகரங்களுக்குச் சுற்றுலா சென்று வருவதும் சவாலானதுதான். இருந்தும் பெர்த் நகர மக்கள் இந்தத் தனிமையை ரொம்பவே ரசிக்கின்றனர். இந்த வாழ்க்கை முறை மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
இகியூடோஸ்
பெரு நாட்டின் அமேசான் நதிக்கும் பெரு மழைக்காடுகளுக்கும் இடையில் அமைந்துள்ள நகரம் இகியூடோஸ். தலைநகர் லிமாவிலிருந்து சுமார் 1,013 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகருக்கு இன்றுவரை சாலை வசதி கிடையாது. ஒருபக்கம் அமேசான் நதியும் மறுபக்கம் மழைக்காடுகளும் உள்ளதால் சாலை வசதி இல்லை என்கின்றனர்.
அதனால், இகியூடோஸ் நகருக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒன்று விமானத்தில் செல்ல வேண்டும் அல்லது நதியின் வழியே படகில் பயணிக்க வேண்டும். இந்த இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன.
பல நூற்றாண்டுகளாக இந்நகரில் பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமேசான் ரப்பர் ஏற்றம் கண்டது. அப்போது இகியூடோஸ் நகர் அமேசான் ரப்பர் உற்பத்தியின் ஏற்றுமதி மையமாக மாறியது. ரப்பர் வணிகம் செழித்தோங்கியது. இதனால், இந்நகருக்கு அதிகளவில் ஐரோப்பா மற்றும் பெருவைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நகரம் அதன் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தியது.
மரம், மீன் பிடித்தல், எண்ணெய் மற்றும் கனிமங்கள் எடுத்தல், விவசாயப் பயிர்களை ஏற்றுமதி செய்தல் எனப் பல்வேறு தொழில்களைச் செய்தனர். இப்போது சுற்றுலாவும் வருவாயை ஈட்டித் தருகிறது. ஆனால், சாலை வசதிதான் பலரையும் யோசிக்க வைக்கிறது. இதனால், இதனை தனிமைப்படுத்தப்பட்ட நகரம் என்றே சுற்றுலாப் பயணிகள் வர்ணிக்கின்றனர்.
உஷ்வயா
End of the World என அழைக்கப்படும் நகரம் உஷ்வயா. அர்ஜென்டினாவின் தென்முனையில் இருக்கும் நகரம் இது. அர்ஜென்டினா தலைநகர் புவனர்ஸ் அயர்ஸில் இருந்து சுமார் 3,100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது உஷ்வயா. அங்கிருந்து மூன்று மணி நேர விமானப் பயணத்தில் இந்நகரை அடையலாம். சாலை வசதி இருந்தாலும் அது சிலி நாட்டைக் கடந்து படகு மூலம் அர்ஜென்டினாவை அடையும்படியாக உள்ளது. அதனால், விமான மார்க்கம் மட்டுமே நேரடியாக வரும் வழி. இதனாலே தனிமைப்படுத்தப்பட்ட நகரம் என அழைக்கப்படுகிறது.
அண்டார்க்டிகா கண்டத்திற்கு செல்லும் கடல் பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருப்பதும் இந்நகரம்தான். ஏனெனில், அண்டார்க்டிகா தீபகற்பத்திற்கு இங்கிருந்து 1,100 கிமீ தூரம்தான்.
ரயில்வே, கோல்ஃப் மைதானம், ஸ்கை ரிசார்ட் என பலவும் இந்நகரில் உள்ளன. இதனால் சுற்றுலாவிற்கான இடமாக மிளிர்கிறது. இயற்கை வாயு, எண்ணெய் வளம், மீன்பிடித்தல், சுற்றுலா போன்றவை உஷ்வயாவின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.
பெட்ரோபாவ்லோவ்ஸ்க் -கம்சாட்ஸ்கி
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அலாஸ்கா அருகே இருக்கும் நகரம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி. இந்நகருக்கும் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கும் இடையே உள்ள தூரம் சுமார் 6,750 கிமீ. இந்நகர் இயற்கை எழில் சூழ்ந்த அவாச்சா விரிகுடாவின் கரையில் பனி மூடிய சிகரங்களாலும், ஐந்து தொடர் எரிமலைகள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
கோடைக் காலத்தில் மட்டுமே இந்நகர் கொஞ்சம் இதமாக இருக்கும். மற்ற நாட்களில் குளிர்தான். இந்நகரை விமானம் வழியாக மட்டுமே அடையலாம். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நகரமாக இருக்கிறது. மீன் பிடித்தல் இம்மக்களின் தொழிலாக உள்ளது. தவிர கடற்கரையில் கிடைக்கும் நண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பேராச்சி கண்ணன்
|