வசனம் பேசாத கனி!



‘ஒரு கல்லூரியின் கதை’, ‘மாத்தியோசி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ போன்ற படங்களை ரசனையோடும், கமர்ஷியலாகவும் தந்தவர் இயக்குநர் நந்தா பெரியசாமி.
இந்தியில் இவர் எழுதிய ‘ராஷ்மி ராக்கெட்’ பெரிய ஹிட். இப்போது சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தை இயக்கியுள்ளார். ரிலீஸ் பரபரப்பில் இருந்தவரிடம் படம் பற்றி பேசினோம்.

படம் எதைப் பற்றி பேசுகிறது?

டிஜிட்டல் உலகத்துல நேர்மையா இருக்க முடியுமா என்ற கேள்வியைத்தான் இந்தப் படம் பேசுது. நேர்மைக்கும், மனசாட்சிக்கும் எளிய மனிதன் பயப்படுகிற அளவுக்கு மத்தவங்க பயப்படுவதில்லை. எல்லாமே கார்ப்பரேட் மயமா, வியாபாரமா  மாறிடுச்சு. அப்படி எந்தவித மனிதாபிமானமும் இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு எளிய மனிதனைப்பற்றிய கதை இது.

அப்படி என்னுடைய கதை நாயகன் திரு.மாணிக்கம் நேர்மையை வலியுறுத்துகிறார். அதைக்கேட்டு எல்லோரும் மாணிக்கமா வாழ ஆசைப்பட்டாலே அதுதான் இந்தப் படத்தோட வெற்றி.
சாதாரண மனிதனாக இருக்கும் மாணிக்கம், எப்படி ‘திரு.மாணிக்க’மா மரியாதைக்குரியவராக மாறுகிறார் என்பதை யதார்த்தமா சொல்லியிருக்கிறோம்.‘திரு’ என்ற அடையாளத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

ஒருவர் செய்யும் செயலில், வாழும் வாழ்க்கையில்தான் அந்த ‘திரு’ என்ற அடையாளம் கிடைக்கும். அப்படி ஒவ்வொரு மனிதனும் தன் பெயருக்கு முன் ‘திரு’ என்று சேர்த்துக்கொள்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் நீதி.

பணம், பொருள், செல்வாக்கு... ஒரு மனிதனை மரியாதைக்குரிய மனிதனாக மாற்றாது. பணம் என்பது பாதை மாதிரி. மரியாதை என்பது வெளிச்சம் மாதிரி. வெளிச்சம் இல்லாத பாதையில் பயணம் செய்ய முடியாது. படம் பார்த்த அனைவரும் இந்தக் காலகட்டத்துல வர வேண்டிய படம்னு ஒருமித்த குரலில் சொன்னார்கள். மக்களும் அதைச் சொல்லணும்னு ஆவலோடு காத்திருக்கிறோம்.

சமுத்திரக்கனிக்கு டயலாக் இல்லையாமே?

வழக்கமா கருத்து பேசும் சமுத்திரக்கனியைப் பார்த்திருப்போம். இதுல பேசாத சமுத்திரக்கனியை, கருத்து சொல்லாத கனியைப் பார்க்கலாம். படத்துல அவருக்கு மொத்த டயலாக் அரை பக்கம்தான் இருக்கும்.கொஞ்சமா பேசினாலும் அது அழுத்தமா இருக்கும். அதாவது அவர் பேசமாட்டார். 

அவருடைய பாதை பேசும். அவரைப்பற்றி அவர் பேசாமல் மத்தவங்க அவரைப் பற்றி பேசுவாங்க. அந்த கான்செப்ட்ல இந்தப் படத்தை எடுத்தோம்.மலையாளம், தெலுங்கு, என பிசியா ஓடிட்டு இருக்கும் நெருக்கடியான காலகட்டத்துல இந்தப் படத்துக்கு மொத்தமா முப்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தார்.

உங்க கதையில் அனன்யா நடிக்க மாட்டேன்னு சொன்னதா கேள்வி..?

ஆமா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும். அதனால நடிக்கத் தயங்கினார். ‘கதையை முழுசா கேளுங்க. அப்புறம் முடிவைச் சொல்லுங்க’ன்னு அவரையே முடிவு எடுக்கச்சொன்னேன்.ஜூம் காலில் முழுக் கதையையும் கேட்டபிறகு ‘நான் பண்றேன்’னு சொன்னாங்க. படத்தை சில கோலிவுட் பிரபலங்களுக்கு காட்டினோம். படம் பார்த்த அனைவரும் அனன்யா நடிப்பை வெகுவாகப் பாராட்டினாங்க.

பாரதிராஜாவை இயக்கிய அனுபவம் எப்படி இருந்துச்சு?

பாரதிராஜா ஐயா முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறார். ஷூட்டிங் போகும்போது அவர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். ஷூட்டிங் டைம்ல ட்ரிப் போட்ட பேண்டேஜ் கட்டோடுதான் வந்தார். செலைன் பாட்டிலோடு வந்து நடிச்சுட்டுப்போனது இப்பவும் என் கண்ணுக்குள் அப்படியே இருக்கு. அவருடைய உடல்நிலையைப் பார்த்ததும் எப்படிதான் ஐயாவை வேலை வாங்கப் போறேன்னு நினைச்சுட்டிருந்தேன்.

‘கேமரா’ என்றதும் சிங்கம் மாதிரி நிமிர்ந்து எக்ஸ்பிரஷன் கொடுத்தபோது பெரிய உற்சாகம் வந்துச்சு. ஷூட்டிங் மலைப்பிரதேசத்தில் நடந்துச்சு. சுமார் அறுபது படிக்கட்டு இருக்கும். யாருடைய துணையும் இல்லாமல் நடந்து வந்தார். அவருடைய எனர்ஜி லெவல் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு.படம் பார்த்துட்டு ‘என்னைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு’ன்னு கண்கலங்கி, கட்டித் தழுவியதோடு ‘உடனே என்னை அடுத்த படத்துக்கு அழைச்சுட்டுப் போ... நான் வர்றேன்’னு சொன்னார்.  

பாரதிராஜா ஐயாவுக்கு ஜோடியா வடிவுக்கரசி வர்றார். ‘முதல் மரியாதை’யில் அவருடைய டைரக்‌ஷனில் நடிச்சவர் முதன் முறையா இதுல அவருக்கு ஜோடியா நடிக்கிறார்.நாசர் சாருக்கு இதுவரை பார்க்காத கேரக்டர். தம்பி ராமையா சார் ஃபாரீன் ரிட்டர்னா வர்றார். 

அவர் வர்ற போர்ஷன் காமெடிக்கு கியாரண்டியா இருக்கும். சின்னிஜெயந்த், இளவரசு, கருணாகரன், சாம்ஸ், ‘தேன்’ தருண்குமார், ‘இரவின் நிழல்’ சந்துரு, யூடியூப் பிரபலங்கள் ரேஷ்மா, விக்கி, கிரேஸி, ஆகாஷ்ன்னு ஒவ்வொருவருடைய கேரக்டரும் பேசப்படும்.

கேரளாவில் பர்மிஷன் வாங்கி ஏழு யானைகளை வெச்சு எடுத்தோம். யானையிடம் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படும் கேரக்டரில் மன் நடித்துள்ளார். அவருடைய போர்ஷன் குழந்தைகளுக்கு பிடிக்கும்.குமுளி, மேகமலை, தேக்கடி, மூணாறு ஆகிய இடங்களில் படமாக்கினோம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கு பழக்கப்பட்ட லொகேஷன் என்பதால் இயற்கை அழகை அள்ளிக் கொடுத்துள்ளார்.

விஷால் சந்திரசேகர் மியூசிக் பண்றார். அவருடைய ‘சீதாராமம்’ பாடல்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அந்தப் பாடல்களைக் கேட்டதிலிருந்து அவருடன் ஒர்க் பண்ணணும்னு ஆசையா இருந்தேன். அது இதுல நடந்துச்சு. 

மனசைக் கரைக்கிற மாதிரி உருகி உருகி டியூன் போட்டுக்கொடுத்தார். பாடல்களை சினேகன், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்கள்.தயாரிப்பு ரவிக்குமார். ‘ஜெமினி லேப்’ல பல ஆண்டுகளாக வேலை செய்த அனுபவம் உள்ளவர். கதை மேல நம்பிக்கை வெச்சு தயாரிக்க முன்வந்தார். ‘மாஸ்டர்பீஸ்’ சார்பாக லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ரிலீஸ் பண்றாங்க.

சமீபத்திய படங்களை கவனிக்கிறீங்களா... ரசிகர்களின் ரசனை மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?

ஆடியன்ஸ் எல்லா காலத்திலும் எல்லா ஜானர் படங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆக்‌ஷன், லவ் என்று பிரித்துப் பார்க்கமாட்டாங்க. கடந்த காலங்களில் மோகன் சார் படங்கள் காதல் படங்களாக இருந்தால் ரஜினி சார், கமல் சார் படங்கள் ஆக்‌ஷனுக்காக பேசப்பட்டது.அதுமாதிரிதான் இப்போது எல்லா வகை படங்களும் வெளியாகிறது. 

ரசிகர்களைப் பொறுத்தவரை ஆக்‌ஷன் படமோ, காதல் படமோ ஏதோ ஒரு விஷயம் அவங்க இதயத்தின் ஒரு முனையைத் தொடணும். அந்த வகையில் இதயத்தைத் தொடும் அனைத்துப் படங்களும் நல்ல படங்களே. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளியான ‘வாழை’, ‘அமரன்’ படங்களின் வெற்றியைச் சொல்லலாம்.

இந்தியில் நீங்க எழுதிய கதை அதிகம் பேசப்பட்டது. தொடர்ந்து இந்தியில் கதை கேட்கிறார்களா?

எனக்கு சினிமாதான் சோறு போடுகிறது. ஃபங்ஷன், பார்ட்டி என்று எங்கும் போனதில்லை. கதை ரெடி பண்ணுவதுதான் என்னுடைய முழு நேர வேலை.

என்னுடைய கதை மாந்தர்களை புதுசு புதுசா உருவாக்கி அந்த மாந்தர்களுடன் பேசுவேன். அந்த கதை மாந்தர்களை கதாபாத்திரங்களாக நினைப்பதில்லை. என்னுடன் வாழ்கிறவர்களாகவே நினைத்துப் பார்ப்பேன்.

அப்படி என்னுடைய கதை மாந்தர்களுடன் நானும், கதை மாந்தர்கள் என்னுடனும் பேசுவார்கள். என் கதை மாந்தர்களிடம் என் வயதைச் சொல்வதில்லை.  தொடர்ந்து வேலை செய்யும்போதும் நம்மை இளமையாக வைத்திருக்க முடியும்.இந்தியில் நான் எழுதிய கதை பெரிய வெற்றியைக் கொடுத்துச்சு. தொடர்ந்து கதை கேட்கிறார்கள். இப்போது என் கவனமெல்லாம் இந்தப் படத்தை  வெளியீடு செய்யணும் என்பதில்தான் இருக்கு.

எஸ்.ராஜா