சம்பவம் செய்த தீவிர வானிலை!



 3238 மனிதர்கள் பலி...
3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள்  நாசம்...
2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள்  தரைமட்டம்...
9457 கால்நடைகள் இறப்பு...


‘‘274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள். 3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. 2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டமாகியிருக்கின்றன. 9457 கால்நடைகள் மடிந்திருக்கின்றன...’’

இந்தச் சம்பவங்கள் எல்லாம் எங்கே நடந்திருக்கின்றன?

இந்தியாவில்தான் என்று அதிர்ச்சியூட்டுகிறது அண்மையில் வந்த அறிக்கை ஒன்று.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிறுவனம் (சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்வயரன்மென்ட்) தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பிரபல தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பு அவ்வப்போது இந்தியா குறித்து பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்த ஆய்வுகளை வெளியிட்டு இந்திய மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது.

அந்தவகையில் அண்மையில் அந்த அமைப்பு வெளியிட்ட ‘க்ளைமேட் இண்டியா 2024’ என்ற அறிக்கையில்தான் மேற்சொன்ன குண்டுகளை பூமாரி பொழிகிறது.

அறிக்கையில் வேறு என்ன இருக்கின்றன?

‘ஒருகாலத்தில் காலநிலை மாற்றங்கள் சுமார் 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில்தான் அவ்வப்போது நிகழும். ஆனால், இப்போது காலநிலை மாற்றத்தால் விளையும் கேடுகள் 2 அல்லது 3 வருட இடைவெளியிலேயே நிகழ்கின்றன’ என்று நொந்துகொள்ளும் அறிக்கை இந்த வருடத்தின் 9 மாதங்களில், அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் என்னென்ன சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது இந்தக் காலக்கட்டத்தில் வரும் 274 நாட்களில் நிகழ்ந்த அந்த கேடான சம்பவங்களை பட்டியலிடுகிறது. கட்டுரையின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தைத் தவிர மீதமுள்ள பட்டியலும் டெரர் வகை. இந்த அறிக்கை தீவிர வானிலை மாற்றங்களாக (Extreme Weather Change) சிலவற்றை குறிப்பிடுகிறது. அவை மின்னல், புயல், பெரு மழை, வெள்ளம், நிலச்சரிவு, வெப்ப அலை, குளிர் அலை, மேக மூட்டம்... என இன்னும் பல.

இதனால் விளைந்த சம்பவங்கள்?

அவற்றையும் பட்டியலிட்டுள்ளது.‘கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக 40 நாட்களும் அதற்கு மேலாகவும் தீவிர வானிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

274 நாட்களில் 255 நாட்கள் மொத்த இந்தியாவிலும் தீவிர வானிலை நிலவியதால் மத்திய இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 218 நாட்கள் இந்த தீவிர வானிலை இருந்துள்ளது. அதிலும் மத்தியப்பிரதேசத்தில் 176 நாட்கள் தீவிரம். இறப்பைக் கணக்கிட்டால் அதிகபட்சமாக கேரளாவில் 550, மத்தியப்பிரதேசத்தில் 353, அசாமில் 256.

பயிர்ச் சேதம் என்றால் மொத்த இந்தியாவில் மகாராஷ்டிராவில் மட்டும் 60 சதவீத இழப்பு. மகாராஷ்டிராவில் தீவிர வானிலை நாட்களான 142 நாட்களை கணக்கிட்டால் இந்தப் பயிர் நாசத்துக்கான காரணத்தை ஒருவர் உணரமுடியும். தீவிர வானிலை மாற்றத்தால் இறப்பின் எண்ணிக்கை 3238. அதில் 219 பேர் அதிவெப்பத்தால் இறந்திருக்கின்றனர்.

மொத்த வீடுகள் சேதமான தொகை 2 லட்சத்து சொச்சம் என்றால் அதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 85806 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன - அதாவது சிதிலமாகியுள்ளன...’ என்று சொல்லும் அறிக்கை எந்தெந்த மாதங்களில் தீவிர வானிலை இந்தியாவைப் பிடித்து ஆட்டியிருக்கிறது என்றும் லிஸ்ட் போடுகிறது.‘1901ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், 9வது அதி சூடான மாதம்.

அதேபோல பிப்ரவரி மாதம் என்பது இந்தியாவின் 123 வருடத்தில் அதிக வெப்பமான மாதம். மே மாதம்கூட இந்திய சரித்திரத்தில் 4வது சராசரியான வெப்பமான மாதம்.
இந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பரை எடுத்துக்கொண்டால் 1901ம் ஆண்டைவிட அதிக வெப்பமான மாதம்.

தீவிர வானிலையால் நிகழ்ந்த அசம்பாவிதங்களைக் கணக்கிட்டால் பருவமழையால் இறந்தவர்கள் 1021 பேர், வெள்ளத்தால் இறந்தவர்கள் 1376  பேர், வெப்பத்தால் இறந்தவர்கள் 210 பேர். இது எல்லாமே 2022 மற்றும் 2023ஐவிட அதிகம் என்றால் சிந்திக்க வேண்டியதுதானே...’ என்று சொல்லும் அறிக்கை இந்தப் பிரச்னையை சமாளிக்க ஒன்றிய அரசு போதுமான நிதிகளை வாரி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. ‘பைசா நகி’ என்று சொல்லிவிடாதீர்கள் ஆட்சியாளர்களே!

டி.ரஞ்சித்