இந்தியாவின் புது ஹீரோ!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு நட்சத்திர வீரர் கிடைத்துவிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து 2 சதங்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தன் வருகையை அறிவித்திருக்கிறார் திலக் வர்மா. அவரது அதிரடி சதத்தால் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3 - 1 என்ற காணக்கில் வென்றுள்ளது. தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் 2002ம் ஆண்டு பிறந்த திலக் வர்மாவின் முழுப் பெயர் நம்பூரி தாகூர் திலக் வர்மா.திலக் வர்மா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா நம்பூரி நாகராஜு ஒரு எலக்ட்ரீஷியன். மிகக்குறைந்த வருமானத்தை கொண்டவராக அப்பா இருந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார் திலக் வர்மா.
திலக் வர்மாவின் சிறப்பான பேட்டிங்கைப் பார்த்து, சலிம் பயாஷ் என்ற பயிற்சியாளர் 10 வயதில் இருந்து அவருக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சி பெறுவதற்காக நாள்தோறும் 40 கிமீ பயணம் செய்துள்ளார் திலக் வர்மா.இவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. அவரது பேட்டிங் ஸ்டைலையே, தான் பின்பற்றுவதாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். கடந்த 2018 - 19ம் ஆண்டில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக ஹைதராபாத் அணிக்காக ஆடினார். தனது முதல் சீசனில் அவர் 215 ரன்களை எடுத்தார். அப்போதே அவரது ஸ்டிரைக் ரேட் 147.26.
இதைத்தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக ஆட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து, மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 2022ம் ஆண்டில் வாங்கியது. தனது முதல் தொடரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 33 பந்துகளில் 61 ரன்களை விளாசினார்.
திலக் வர்மாவுக்கு செல்லப்பிராணிகளை மிகவும் பிடிக்கும். தன் வீட்டில் ட்ரிக்கர் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட திலக் வர்மாவின் இஷ்டதெய்வம் விநாயகர். மிக முக்கிய போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால் விநாயகரை வணங்கிவிட்டு செல்வார்.இந்த தொடருக்கு முன்புவரை 4வது அல்லது 5வது பேட்ஸ்மேனாகத்தான் திலக் வர்மா ஆடினார்.
ஆனால், இத்தொடரின் 3வது போட்டிக்கு முன் கேப்டன் சூர்யகுமார் யாதவின் அறைக்குச் சென்று தன்னை 3வது பேட்ஸ்மேனாக களம் இறக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரும் அதற்கு சம்மதிக்க, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தென் ஆப்பிரிக்க அணிக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.வாங்க திலக் வாங்க!
என்.ஆனந்தி
|