சிறுகதை-மலர் போன்று மலர்கின்ற மனம்



அஸ்திவாரம் போட்ட கட்டடம் நான்கடி வரை உயர்ந்திருந்தது. தெப்பக்குளம் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில், ஆயிரத்தி இருநூறு சதுர அடியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு அது.
ஆறுமுகக் கொத்தனார் வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு மற்றொரு கட்டடத்திற்கு டிவிஎஸ் எக்ஸலில் பறந்து விட்டார். எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.
எழும்பிக் கொண்டிருக்கும் வடக்குப் பக்க சுவரின் இரண்டு மூலைகளில்  இருந்தும், மூலைக்கு ஒருவராக செங்கற்களை சரியாக வைத்து சிமெண்ட் கலவையின் உதவியால் பிணைத்துக் கொண்டே இருவர் வேலை பார்த்தனர்.

கலவையைத் தயார் செய்யும் இடத்தில் ஒருத்தி இருந்தாள். இவர்கள் போக மூன்று பெண்கள் இருந்தனர். கலவையைச்  சுமக்க, கொடுக்க, எதுவும் எடுக்கக் கொள்ள என சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் உடுத்தியிருந்தது சேலைகள் என இடுப்புக்குக் கீழேதான் தெரிந்தன. மேலே தொளதொளவென காலர் வைத்த சட்டைகளை அணிந்திருந்தனர்.

காலை பதினொன்றரை போல ஒருத்தி மட்டும் தூக்கு வாளியைக் கழுவி எடுத்துக் கொண்டு தேநீர் வாங்கச் சென்றாள். வரும்போது ஆளுக்கு இரண்டு ஆமை வடைகளையும் சேர்த்தே வாங்கி வந்திருந்தாள்.

ஆளுக்கு ஒரு கோப்பைத் தேநீரை வடையோடு குடித்து விட்டு மீண்டும் வேலையைப் பார்க்கத் துவங்கினர். இடையில் ஜன்னல், அலமாரி வைக்க இடம் விட்டு எட்டாவது வரிசைக் கற்களை அடுக்க ஆரம்பத்தினர். உச்சி வெயில் காந்தலாய் இருந்தது. பிளாஸ்டிக் குடத்தில் உள்ள தண்ணீரை அவ்வப்போது மொண்டு குடித்தபடி வேலை நீண்டது.

வேலை நடக்கிற இடத்தைச் சுற்றிலும் வீடுகள். இங்கு முன்பு இருந்த கட்டடம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. புகழ் பெற்ற நடிகர் ஒருவருக்குச் சொந்தமானது. அவரது வாரிசுகள் விற்றுவிட, வாங்கியவர் அதனை முழுமையாக இடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

கட்டட வேலை நடப்பதற்கு மிகச் சரியாக எதிர்வீட்டில் குடியிருக்கும் வாணி, இவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். திருமணமாகி சில வாரங்களே ஆகியிருந்தன. வாணியின் கணவன் ராஜாவுக்கு மதுரை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் வேலை. 

பெரியவர்கள் நிச்சயித்து திருமணம் முடிந்த பிறகு, இந்தப் பெரிய வீட்டில் வாடகைக்குக் குடி வைத்தனர். காலையிலே சமையலை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்பாள் வாணி. பின் வீட்டை சுத்தம் செய்து கூட்டிப் பெருக்கி தண்ணீர் வைத்துத் துடைப்பாள். சின்ன தூசி கூட அவளுக்குப் பிடிக்காது. சுத்தம்தான் கோயில், தெய்வம் என்றெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டவள்.

வேலையற்ற நேரங்களில் கட்டட வேலை செய்பவர்கள் பார்க்காதபடி வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது அவளின் பொழுது போக்கு.
எதிரில் கட்டடம் கட்டுவதற்கான மண் வாணி குடியிருந்த வீட்டின் சுவரோரத்தில் குவிக்கப்பட்டிருந்தது. இவள் இட்ட கோலம் வேலை பார்க்க ஆரம்பித்ததும் மண்ணால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும். சமயங்களில் அவளுக்கு அழுகை வரும்.

முன்னறையில் ஒரே நாளில் மூன்று முறை பெருக்கினாலும் தூசி இருந்து கொண்டே இருந்தது அவளுக்குக் கடுப்பாய் இருந்தது. கதவை தினசரி துடைக்க வேண்டும். சமயங்களில் தரையில் படிந்திருக்கும் மிகுதியான தூசியில் ஏதேனும் படத்தை வரைந்து பார்த்துவிட்டு துடைப்பாள்.தினமும் காலையில் தவறாமல் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...’ பாடலைக் கேட்டுவிட்டுதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பாள். அது அவளது வாடிக்கை.

மொபைல், இணையம் எல்லாம் பயன்படுத்தத் தெரியாத, பிடிக்காத அரிய உயிரினம். சில நேரங்களில் தொலைக்காட்சியில் மெல்லிசைப் பாட்டுகளாய் இருந்தால் சத்தம் வைத்துப் பார்ப்பாள். அவ்வப்போது நாடகங்களையும் ரசிப்பாள்.காலை ஒன்பது மணிக்குள் சமைத்துக் கட்டிக் கொடுத்து விட்டால் மாலை கணவன் வீடு திரும்ப ஏழு மணி
ஆகிவிடும். இரண்டு படுக்கை அறைகள் உள்ள பெரிய வீடு அது.

பொதுவாக கட்டுமான வேலைகள் நடைபெறும்போதுதான் அக்கம்பக்கத்தினரின் அனுசரணையை அறிந்து கொள்ள முடியும். யாருக்குமே அவர்கள் வீட்டை ஒட்டி மணல், ஜல்லி குவிப்பது பிடிப்பதில்லை. இறக்குகிற செங்கல், மணல் உண்டாக்கும் தூசி, கட்டடம் எழும்ப, எழும்ப அடிக்கப்படும் தண்ணீர் தங்கள் வீட்டின் மேல் சிதறுவது, எதுவுமே பிடிப்பதில்லை. கூடவே அதிக ஆத்திரத்தையே வரவழைக்கும்.

கட்டுகிற ஆள் தங்களை விடப் பெரியவர்கள் என்றால் அக்கம் பக்கத்துக்குள் பேசி திட்டித் தீர்த்துக் கொள்வார்கள். இதே அவர் சற்று இளப்பமானவர் என்பதாய் கணித்து விட்டால், தொட்டதுக்கு எல்லாம் அலறிக் கூப்பாடு போடுவார்கள்.

‘‘எப்படி என் பக்கம் தண்ணீர் வரப் போச்சு?’’
‘‘என் வீடு அழுக்கு ஆகுது...’’
‘‘என்னத்த பெரிய அரண்
மனையைக் கட்டுற?’’

‘‘தெருவையே நாற வைக்கிற...’’ என்கிற ரீதியில் வம்புச் சண்டை போட்டு அற்ப திருப்தி அடைவார்கள்.இதே கட்டடம் கட்டுகிறவர்கள் நெருங்கிய அல்லது முக்கிய உறவுக்காரர் என்றால் கவனிப்பே வேறு விதமாய் இருக்கும். ‘‘எல்லாம் நம்ம இடம்தான் புழங்கிக்கோங்க’’ என உரிமையாய்ப் பேசுவர்.

இது நான்கு மாதம், இது ஆறு மாதம்... அதற்கு மேல் இந்த கட்டடத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்பது போல கட்டடத் தொழிலாளிகள் வேலை பார்ப்பர். சம்பந்தம் அற்ற நபர்களிடம் இருந்து கிடைக்கிற ஏச்சும் பேச்சும் அவர்களுக்குப் பழகிப் போய் இருந்தது. இயன்ற அளவில் சமாதானமாய் பதில் சொல்வர். திருப்தி அடையாவிட்டால்,பேசிய ஆள் பேசி ஓயட்டும் என்று தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டே இருப்பர்.

வாணிக்கு அதிசயமாய் இருந்தது. பக்கத்தில் உள்ள பெரிய வீட்டில்தான் இந்த வீட்டின் சொந்தக்காரர்கள் குடியிருக்கிறார்கள். அவர்களின் வீட்டின் முன்பும் செங்கல் வரிசை கோட்டை சுவர் போல அடுக்கப்பட்டிருக்கிறது. அங்கும் தூசி படிந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிகிறது. அவர்கள் எதுவுமே சொல்வதில்லை. 

மகன், மருமகள் வேலைக்குச் சென்றுவிட, பேரன்கள் கல்லூரிக்குப் போய்விடுவர். வீட்டில் அந்தப் பாட்டி மட்டும் தனியாக இருப்பார். சீரியல் பார்க்கும் சத்தம் ஜன்னல் வழியே அவ்வப்போது கேட்கும். பார்க்கும்போது புன்னகைப்பதோடு சரி. வேறு எதுவும் பேசிக் கொள்வதில்லை.

அந்தப் பாட்டி ஐந்தடி உயரத்தில் தலையில் உள்ள வெள்ளை முடிகளைப் பின்னித் தொங்க விட்டிருப்பார். கழுத்தில் ஒரு முகப்பு வைத்த ஒற்றை வடச் சங்கிலி பளீரென்று மின்னும். நெற்றியில் விபூதியை பட்டையாகப் பூசியிருப்பார். ஒரு கருப்பு முடி கூட இல்லாமல் இருக்கும் போது கொண்டை போடாமல் எதற்கு சடை போட்டு தொங்க விட்டுள்ளார் என வாணிக்குத் தோன்றும்.

இவளும் அதே ஐந்தடி உயரம். இடுப்பு வரை தொங்கும் அடர்ந்த கூந்தலைப் பின்னி பூச்சூட்டி இருப்பாள். நடிகை சரிதாவை நினைவுபடுத்தும் முகம். ஐம்பது சேலைகள் வரை கொண்டு வந்திருந்தாள். எல்லாம் புத்தம் புதிதானவை. ஆசை ஆசையோடு எடுத்து, ரவிக்கை தைக்கப்பட்டவை. தினந்தோறும் ஒவ்வொன்றாகக் கட்டி அழகு பார்ப்பாள்.

தனி வீடாக இருப்பதால், யாரும் தன் புதுச் சேலையைப் பார்க்க முடியவில்லை என கொஞ்சம் கவலை இருக்கும். வீட்டின் பின்புறம் சென்று காத்திருப்பாள். வீட்டுக்காரப் பெண்மணி அல்லது அடுத்த பக்கம் இருக்கும் நடுத்தர வயதுப் பெண் யாராவது ஒருவராவது தனது புதுச் சேலையைப் பார்த்த பின்தான் மீண்டும் வீட்டிற்குள் வருவாள். கொல்லைப் புறத்தை சுத்தம் செய்யும் சாக்கில் இதைச் செய்வாள்.

அலைபேசி ஒலித்தது. ஓடிப் போய் எடுத்தாள். இன்று கட்டியுள்ள சேலையை யாரும் பார்க்கவில்லை என்பதால் பின்புறம் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தாள்.வாணி மதிய உணவாய் கட்டிக் கொடுத்த தக்காளி சாதம் அருமையாக இருந்தது என பாராட்டி பேசிக் கொண்டு இருந்தான் கணவன். அவளுக்கு வெட்கமாக வந்தது. வீட்டிலேயே ஐந்து வருடங்களாக சமைத்துப் பழகியவள். ரசித்து ரசித்து சமைப்பாள். அது சுவையில் தெரிகிறது. போக, அவளும் அவள் சமைத்ததை சாப்பிட வேண்டுமே. அவனின் பாராட்டில் வாணியின் மனமெல்லாம் குளிர்ந்தது.

இன்று காலையில் சுத்தம் செய்த கதவை மதியமும் துடைத்தாள். கட்டட வேலை பார்க்கும் பெண்கள் அவர்களுக்குள் சிரித்துப் பேசிக்கொள்வர். பணி செய்யும்போது சுறுசுறுப்பாய் நடப்பர், ஓடுவர். நக்கல் நையாண்டியாய் தங்களுக்குள் கிண்டல் கேலி செய்து மகிழ்வர். சமயத்தில் சிரிப்பில் கொத்தனாரும் கலந்து கொள்வார்.

ஒருத்தி தலையைக் கவனித்தாள். தலைக்குக் குளித்து, நுனியில் இரண்டு பின்னலிட்டு ரப்பர் பேண்டை சுற்றியிருந்தாள். அதில் கொஞ்சம் பிச்சிப் பூவும் செருகியிருந்தது. ஆனால், மண், சிமெண்ட் கலவை என சும்மாடுக்கு மேல் வைத்து சுமந்தாலும் தலை முடியில் அழுக்குப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதை அவள் சட்டை செய்வது போல் தெரியவில்லை. 

இவர்கள் விடுமுறை நாட்களில் தலைக்குக் குளித்து சுத்தப்படுத்தலாமே என்கிற யோசனை வாணிக்கு வந்தது. ஒரு மணி வாக்கில் சின்ன குட்டி யானை வண்டி வந்து நின்றது. அதிலிருந்த சிமெண்ட் மூட்டைகளை இறக்கி முன்னால் போடப்பட்டிருந்த குடிசையுள் வைத்தனர். அப்போது கிளம்பிய தூசி இவள் வீட்டையும் தழுவியது.

மணல் கூட பரவாயில்லை, இந்த சிமெண்ட், செங்கல் தூசிதான் உடலில் பட்டாலே எரிகிறது. எதுவும் செய்ய இயலாமல் முகத்தை மூடிக் கொண்டாள். மதிய உணவு வேளைக்கு எதிரில் சற்று தள்ளி இருந்த காம்பவுண்டு சுவர் பக்கத்தில் இருந்த நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டனர் மூவரும். அவர்களின் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. எப்படி சாப்பிட்டனர் எனத் தெரியவில்லை. பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தது தெரிந்தது.

மூவரில் இருவர் எழுந்து இவள் வீட்டை ஒட்டி மெதுவாக நடந்து வந்தனர். சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி விட்டு, வீட்டுக்காரர் இருந்த வீட்டின் பக்கம் நடந்தனர். அந்த வீட்டை ஒட்டி இரண்டடி அகலத்தில் நாற்பது அடிக்கு நீண்ட காலி இடத்தின் முன்னால் ஒருத்தி நிற்க இன்னொருத்தி உள்ளே சென்றாள். சில நிமிடங்களில் அவள் வெளியே வர காவல் காத்தவள் உள்ளே சென்றாள். இவளுக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் இருவரும் சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கின்றனர். அதற்கடுத்து ஒரு தேவாலயம் உள்ளது.

இந்த வீச்சத்தைப் பற்றி யோசிக்காமல் இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறார்கள் என கோபமாய் வந்தது. தடாலென கேட்கக் கூடாது. வீட்டுக்காரப் பாட்டியிடம் போட்டு விட வேண்டும் என காத்துக் கொண்டிருந்தாள். அவர் நாலு திட்டு நன்றாகத் திட்டினால், அதன்பின் இப்படியான கருமங்களை இங்கே செய்ய மாட்டார்கள் என எண்ணியவளுக்கு பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்துவிட்ட உணர்வு.

நான்கு மணியை நெருங்கும் வரை வயதான பெண்மணி வெளியே வரவில்லை. தூக்கு வாளியை எடுத்துக் கொண்டு தேநீர் வாங்கிவரச் சென்ற ஒருத்தி அந்த சந்துக்குள் சடாரென நுழைந்தாள்.

கையும் களவுமாய் மாட்டி விட எண்ணி வெளியே வந்தாள். தன் வீட்டை ஒட்டியிருந்த பக்கத்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்த பெண்மணி இவளைப் பார்த்ததும் முகம் மலர புன்னகைத்து உள்ளே அழைத்தார். தேநீர் கொதிக்கும் மணம் வீட்டை நிறைத்து இருந்தது.

இருக்கையில் அமர்ந்து, இவளையும் அமரச் சொன்னார்.“பாட்டி... எதுக்க வேலை பார்க்குற பொம்பளைக வீட்டை ஒட்டி உள்ள சந்துல ஒண்ணுக்குப் போகுதுக. கொஞ்ச நேரம் முன்ன கூட ஒருத்தி போயிருக்கா. வந்து அமட்டுங்க...’’ பொரிந்து தள்ளினாள் வாணி. அவள் எதிர்பார்த்திருந்த எதிர்வினை அந்தப் பெண்மணியின் முகத்தில் இல்லை. கருணை மிகுந்திருந்தது அவரின் கண்களில். நிதானமாகப் பேச ஆரம்பித்தார்...

“நாள் முழுக்க வேலை பார்க்கிறாங்க. நீயும் பார்க்குற... சுத்தி முத்தி வீடா இருக்கு. அவங்களுக்கும் ஒண்ணுக்கு வரும்ல, எங்க போக முடியும்?

ஆம்பிளைகனா, கொஞ்சம் தூரத்தில போய் ஆளுக பார்த்தாலும் பரவாயில்லைன்னு கூட இருந்திட்டு வருவாங்க. பொம்பளைக பாவம் எப்படிப் போவாங்க? நெதம் சாயந்திரம் அவங்க வேலை முடிஞ்சு போனப்புறம் கொஞ்சம் தண்ணீ ஊத்திப் பினாயில் தெளிச்சு விட்டுருவேன்...’’எதுவும் பேசாமல் இருந்த வாணியின் முகத்தில் மிக மெதுவாக அமைதி படர ஆரம்பித்தது.

“இரு... டீ ரெடி ஆகியிருக்கும். எடுத்திட்டு வாறேன். சேர்ந்தே குடிப்போம்...’’சமையலறைக்குள் அவர் சென்றதை பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி. ஒரு மாபெரும் மனுஷியைச் சந்தித்த உணர்வு. தான் தினசரி கேட்கும் பாடலில் உள்ள ‘வலியோர்கள் வாட்டாமல் வகைகாட்டு தாயே...’ என்ற வரி மீண்டும் மீண்டும் அவள்  மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தீபா நாகராணி