நிறங்கள் பலவிதம்... ஆனால், மனிதர்களில் மூன்று விதம்தான்!
‘பாணா காத்தாடி’ படத்தில் அறிமுகம்... தொடர்ந்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’, ‘ஈட்டி’, ‘100’... இப்படி தனக்கே உரிய தனிப் பாதையில் பல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அதர்வா முரளி. அப்பா பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தாலும் அதர்வாவின் முதல் வாய்ப்பு துவங்கி இப்போது வரையிலும் முழுமையாக அத்தனையிலும் அவரது சொந்த முயற்சியும் கடின உழைப்பும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இதோ தற்போது முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படப் புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ படம் கொடுக்க தயாராக இருக்கும் அதர்வா முரளி, உற்சாகமாகப் பேசுகிறார். என்ன கதை?
என்னுடைய படங்களிலேயே இது நிச்சயமா வேறு ஒரு கதைக்களம், வேறு ஒரு கேரக்டராகவும் இந்தப் படம் இருக்கும். நிறம் என்பதை இங்க குணமா இயக்குநர் எடுத்து வச்சிருக்கார்.
ஒரு மனுஷனுக்குள்ள இந்த மூணு குணங்கள்தான் இருக்கும். ஒண்ணு நல்லவன், இன்னொண்ணு கெட்டவன்.
மூணாவதா ஒரு கேரக்டர்- இந்த ரெண்டுமா நடிக்கிறவன்.ஒருத்தன் நல்லவனாகறதும் கெட்டவன் ஆகறதும் சூழலைப் பொறுத்துதான். அப்படி இந்தப் படத்தில் நிறைய கேரக்டர்கள் இருக்காங்க. அவங்களுக்கான சூழல் என்ன... அதற்கு அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்க... அப்படிங்கிறதுதான் கதை.
இயக்குநர் கார்த்திக் நரேன் பற்றிச் சொல்லுங்க..?
ஒரு படம் அப்படின்னு அவர் கூப்பிட்ட போது ஃபர்ஸ்ட் எனக்கு பயம்தான் வந்தது. காரணம், அவருடைய ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு நான் ரொம்ப பெரிய ஃபேன். அவருடைய கதை சொல்லல் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமா இருக்கும். நிச்சயமா நம்ம முழு உழைப்பையும் கொடுத்தால்தான் அவருடைய கதைக்கு நாம் நியாயம் சேர்க்க முடியும். இந்தப் படத்தில் அவருடைய ஸ்பெஷல் நான் லீனியர். கூடவே ஒரு டைம்லைன் ஷிஃப்ட் கான்செப்டையும் பயன்படுத்தி இருக்கார்.
உங்க கேரக்டர்..?
சினிமாவில் இயக்குநராக வாய்ப்பு தேடி அலைகிற ஓர் இளைஞர். படத்தில் என்னுடைய பெயர் வெற்றி. படம் முழுக்கவே என்னுடைய கேரக்டர் ஒரு கிரே நெகட்டிவ் மோடில்தான் போகும். இதுவரையிலும் நான் நெகட்டிவ் ஷேட் கேரக்டரில் நடிச்சதே கிடையாது. இதுதான் முதல் முறை என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கேன்.
சரத்குமார், ரகுமான்... இரண்டு பேருமே சீனியர் நடிகர்கள்..?
படத்துல நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க. ஆனால், ஒவ்வொருத்தர் கதையும் தனித்தனியாதான் போகும். ஏதோ ஒரு காட்சியில் அல்லது ஏதோ ஒரு லிங்க்லதான் சேர்ந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரெண்டு பேருமே இப்பவும் ஏதோ முதல் படம் நடிக்கிற மாதிரியே அவ்வளவு டெடிகேஷனா வேலை செய்றாங்க. கொஞ்சம் அசந்தா ஸ்கிரீனில் நாம தெரிய மாட்டோம். அப்படிப்பட்ட நடிகர்கள்.
ரகுமான் சாரைப் பொருத்தவரை ஸ்பாட்டில் அதிகம் பேசவே மாட்டார். ஆனால், எல்லாத்தையும் கூர்மையா கவனிப்பார். சரத்குமார் சார் செம ஜாலி கூல் பர்சன். ஆனால், ‘ஷாட் ரெடி’ன்னு சொன்னதும் படு சீரியஸ் காண்பிப்பார். அம்மு அபிராமிக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். அவங்கதான் கதாநாயகி. ஆனால், டூயட், ரொமான்ஸ்... இப்படி எதுவுமே எங்க யாருக்கும் கிடையாது.
அப்புறம் ஜான் விஜய் சார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு சம்பவம், அத்தனையும் சேர்ந்து ஒரு இடத்தில் எப்படி கனெக்ட் ஆகுது என்கிறதுதான் கதை. நிச்சயமா கதை ரொம்ப வித்தியாசமா விறுவிறுப்பா இருக்கும். சினிமாட்டோகிராஃபர் டிஜோ டாமி, எடிட்டர் ஜித் சாரங், ரெண்டு பேருமே டைரக்டர் கார்த்திக் நரேன் உடன் ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் வேலை செய்தவங்கதான்.
மியூசிக் ஜேக்ஸ் பிஜோய். இதற்கு முன்பு ‘போர்த் தொழில்’, ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘இரட்ட’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் மியூசிக் செய்திருக்கார். இந்தப் படத்தில் அவருடைய பேக்ரவுண்ட் ஸ்கோர் ரொம்ப நல்லா வந்திருக்கு.
உங்க தம்பி ஆகாஷ் முரளியும் நடிக்க வந்திருக்கார்... அவருக்கு உங்க அட்வைஸ் என்ன?
எங்க அப்பாவே எங்களுக்கு அதிகமா அட்வைஸ் செய்ய மாட்டார். அப்படித்தான் நானும். ஆனால், அவருடைய ‘நேசிப்பாயா’ கதை, ஷூட்டிங் பற்றி நிறைய பேசுவார். ஆனா, என் அளவுக்கு அதிகம் வெளிப்படையா வெளியில் பேச மாட்டார். ஒருவேளை அடுத்தடுத்து படம் நடிக்கும் போது என்னைப் போலவே பேச ஆரம்பிப்பார்ன்னு நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. தம்பிக்கும் நிறைய படங்கள் வரணும். நிறைய வெற்றிப் படங்களா மாறணும்.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
‘டி என் ஏ’ படத்தின் வேலைகள் எல்லாமே முடிஞ்சிடுச்சு. இந்தப் படத்தின் ரிலீசுக்குப் பிறகு ‘டி என் ஏ’ படத்தின் புரமோஷன், ரிலீஸ் எல்லாமே அடுத்தடுத்து நடக்கும்.
அப்புறம் ரவீந்திர மாதவன் டைரக்ஷனில் ‘தணல்’. இப்போதைக்கு இந்தப் படங்கள்தான். இன்னும் ஒருசில பெரிய ப்ராஜெக்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்கோம். அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரும்.
ஷாலினி நியூட்டன்
|