3 வயது சதுரங்க ஜாம்பவான்!



இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம். அந்தளவுக்கு இந்தியாவில் புதிது புதிதாக சதுரங்க விளையாட்டு வீரர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்; சர்வதேச சதுரங்க அரங்கிலும் இந்தியாவின் கொடி தான் உயரப் பறக்கிறது. இந்தியாவின் இளம் சதுரங்க ஆட்டக்காரர்களைக் கண்டு, மற்ற நாடுகளின் அனுபவம் வாய்ந்த வீரர்களே பயந்து போயிருக்கின்றனர் என்பது உண்மை.

நம்முடைய இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடும்போது, அவரது ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார் உலக சாம்பியனான கார்ல்சன்.

மட்டுமல்ல, ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் அறிந்த ஒரே சதுரங்க ஆட்டக்காரராக விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இருந்தார். அவரைத் தவிர, மற்ற இந்தியச் சதுரங்க வீரர்களைப் பற்றி பொதுவெளியில் பெரிதாகத் தெரியாது. 
ஆனால், பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைசாலி போன்ற இளம் சதுரங்க வீரர்கள் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலம். இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் அனிஷ் சர்கார்.

சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த உலகின் மிக இளம் வீரர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார், அனிஷ். அவரது வயது 3. அதாவது தரவரிசைப் பட்டியலில் அனிஷ் இடம்பிடிக்கும்போது அனிஷ் பிறந்து 3 வருடங்கள், 8 மாதங்கள், 19 நாட்கள் ஆகியிருந்தது. கொல்கத்தாவில் வசித்து வரும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், அனிஷ். அவரது குடும்பத்தில் யாருக்குமே சதுரங்க விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாது.

ஒரு வருடத்துக்கு முன்பு, அனிஷுக்கு யூடியூப்பில் இருக்கும் குழந்தைகளுக்கான வீடியோக்களை அவரது தந்தை அறிமுகப்படுத்துகிறார். தந்தையின் ஸ்மார்ட்போனை வாங்கி, யூடியூப் வீடியோக்களைப் பார்ப்பது அனிஷுக்குப் பிடித்தமான ஒன்று. 

கார்ட்டூன் வீடியோக்களைப் பார்க்கும்போது, எதேச்சையாக ஒரு வீடியோவின் லிங்க்கை கிளிக் செய்திருக்கிரார் அனிஷ். அது சதுரங்கம் சார்ந்த வீடியோ. அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து சதுரங்க விளையாட்டு அனிஷுக்கு ரொம்ப பிடித்துப்போய்விட்டது.

 “கடந்த ஜனவரி மாதம் சதுரங்க விளையாட்டின் மீதான ஆர்வம் அனிஷுக்கு அதிகமானது. நிறுத்தாமல் சதுரங்க வீடியோக்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் அவனுக்கு ஒரு செஸ் போர்டையும், காய்களையும் வாங்கிக்கொடுத்தோம். வீட்டுக்குள்ளேயே விளையாடுவதால் அனிஷுக்கு செஸ் பாதுகாப்பானதாக இருக்கும். தெருவில் விளையாடும் விளையாட்டுகளைப் போல அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துதான் செஸ் போர்டை வாங்கிக் கொடுத்தோம்...” என்கிறார் அனிஷின் அம்மா.

காலையில் எழுந்தவுடன் தனியாகவே, தனது விருப்பப்படி சதுரங்கத்தை விளையாட ஆரம்பித்துவிடுவார், அனிஷ். சதுரங்க விளையாட்டைப் பற்றி அவரது பெற்றோர்களுக்கும் தெரியாது என்பதால் அவர்களால் அனிஷுக்குக் கற்றுக்கொடுக்க முடியவில்லை.

“எந்நேரமும் செஸ் போர்டுடன்தான் அனிஷ் இருப்பான். அவனுக்கு செஸ் விளையாட்டை முறையாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக திப்யேந்து சாரிடம் சேர்த்துவிட்டோம்...” என்கிறார் அனிஷின் அம்மா. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இரணடாவதாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற சதுரங்க ஆட்டக்காரர்தான் திப்யேந்து என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம்தான் பயிற்சி பெற்றிருக்கிறார் அனிஷ்.

சதுரங்கப் பயிற்சி பெற்று, நன்றாக விளையாட ஆரம்பித்த நாட்களில் அனிஷின் குடும்பம்ரயிலில் பயணித்திருக்கிறது. அப்போது அனிஷை விட பெரியவர்கள், ரயிலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துவிட்டார் அனிஷ். தானும் விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார். தன்னைவிட மூத்தவரை சில நகர்த்தல்களிலேயே தோற்கடித்துவிட்டார் அனிஷ்.

அருகிலிருந்த எல்லோருக்குமே ஆச்சர்யம். கடந்த அக்டோபரில் மேற்கு வங்காள அளவில் 9 வயதுக்குட்பட்டோர் மற்றும் 13 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டார் அனிஷ். அவர் நாற்காலியில் அமரும்போது மேசையின் மீதிருக்கும் சதுரங்கப்பலகை அனிஷுக்குத் தெரியவில்லை. நாற்காலியின் உயரத்தை அதிகப்படுத்திய பிறகே அனிஷுக்கு சதுரங்கப் பலகை தெரிந்திருக்கிறது.

மேசையைப் பிடித்துக்கொண்டே விளையாடியிருக்கிறார். 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இந்தப் போட்டியில் அதிகபட்ச புள்ளிகளே 8தான்.
140 பேர் பங்கேற்ற போட்டியில் 24 ம் இடத்தைப் பிடித்தார். மட்டுமல்ல, இந்தப் போட்டியில் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இரண்டு இளம் வீரர்களைத் தோற்கடித்திருக்கிறார் அனிஷ். 

இதுவே அனிஷும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க ஆரம்பப்புள்ளியை வைத்தது. சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டுமானால் முதல் நிலையில் உள்ள வீரர்களுடன் மோதினாலே போதும். இதற்கு பல போட்டிகளில் வென்றிருக்க வேண்டும்.

இந்தியாவின் முக்கியமான சதுரங்க ஆட்டக்காரரான அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார் அனிஷ். போட்டியில் தோற்றாலும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.
இதற்கு முன்பு சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த உலகின் மிக இளம் வீரர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்தார் தேஜஸ் திவாரி.

இந்தப் பெருமையை அடையும்போது தேஜஸின் வயது 5. இதை 3 வயதிலேயே முறியடித்திருக்கும் அனிஷின் அம்மாவுக்கு, இப்போது சதுரங்க விளையாட்டில் ஒரு நகர்வும் தெரியாது.

இன்று அவரது தந்தை சதுரங்க விளையாட்டைக் கற்று வருகிறார். மகன் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற பிறகு, தங்களின் பெயர்களைப் பொதுவெளியில் சொல்வோம்
என்கின்றனர் அனிஷின் பெற்றோர்.  

த. சக்திவேல்