வளர்ச்சிப் பணிகளில் வேகம் காட்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்....



தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வரும் நவம்பர் 27ம் தேதி 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் அவர்.
ஒரு சினிமா தயாரிப்பாளராகத் தொடங்கிய அவரின் பயணம், நடிகராக, கட்சித் தொண்டனாக, இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என நிதானமாகவே வளர்ச்சி கண்டது. இப்போது துணை முதல்வரானபின் இன்னும் சுறுசுறுப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிக்காக அத்தனை வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நேரம் அவர் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - துர்க்கா ஸ்டாலின் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் உதயநிதி. பள்ளிப் படிப்பு முடிந்ததும் சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றார். பின்னர் அமெரிக்கா சென்று எம்பிஏ படித்தார். 
படிப்பை முடித்து சென்னை திரும்பியவர், ஸ்னோ பவுலிங் மையத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் ஸ்னோ பவுலிங் மையம் இது. இதற்கிடையே 2002ம் ஆண்டு கிருத்திகாவை காதலித்து மணம்முடித்தார். தற்போது இவர்களுக்கு இன்பநிதி, தன்மயா என இரு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து 2007 - 2008ம் ஆண்டு காலக்கட்டத்தில் உதயநிதியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது. ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்வழியாக முதன்முதலில் விஜய் நடிப்பில், ‘குருவி’ படத்தைத் தயாரித்தார். 
2008ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ஆதவன்’ படத்தைத் தயாரித்தார். இதில் கடைசியாக ஒரு காட்சியிலும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் தோன்றினார்.

பின்னர், 2010ம் ஆண்டு மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கைகோர்த்தார். இந்தமுறை உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘மன்மதன்அம்பு’ படத்தைத் தயாரித்தார். சினிமா துறையில் அவரின் நிறுவனம் பரவலாக கவனம் பெற்றது. இதனையடுத்து 2011ம் ஆண்டு இவரின் தயாரிப்பில் ‘7ம் அறிவு’ படம் திரைக்கு வந்து வெற்றியைப் பெற்றது. இதேநேரத்தில் அவர் பட விநியோகஸ்தராகவும் இருந்தார். 2010ம் ஆண்டில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘மைனா’ என நான்கு படங்களை விநியோகம் செய்தார்.

அதன்பிறகு 2012ம் ஆண்டு நடிகராக புதிய அவதாரம் எடுத்தார். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றியை ஈட்டியது. சிறந்த அறிமுக நாயகன் என ‘ஃபிலிம்பேர்’ விருது பெற்றார்.  பின்னர் படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றுடன் நடிப்பிலும் கவனம் செலுத்தினார். அப்படியாக,  ‘மாமன்னன்’ வரை அவர் நடிப்பில் 15 படங்கள் வெளிவந்தன. இதற்கிடையேதான் அவரின் அரசியல் வருகையும் நடந்தது.

ஆரம்பத்தில் அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை உதயநிதி. இந்நிலையில் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார்.

அப்போது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதும், கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதுமாக அவரின் அரசியல் பிரவேசம் வேகமெடுத்தது. தொடர்ந்து 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

அப்போது தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரின் இயல்பான பேச்சு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் அவரின் வித்தியாசமான தேர்தல் பிரசாரம் திமுகவிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலில் 38 இடங்களில் திமுக கூட்டணி வென்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு திமுக இளைஞரணி செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து முழு மூச்சுடன் தீவிர அரசியலில் இறங்கிச் செயல்பட்டார்.

இந்நிலையில் 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தது. இதில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அத்துடன் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். 

குறிப்பாக மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் குறிக்கும் வகையில் ஒற்றைச் செங்கல்லைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்த பரப்புரை பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குச் சென்றார். திமுக கூட்டணியும் பெரும் வெற்றியைப் பெற்றது.  

அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டுமென திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்தான் 2022ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி அந்தத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது, பாராட்டுவது, கௌரவிப்பது, உதவித் தொகை வழங்குவது எனப் பல்வேறு விஷயங்களைச் செய்தார். தமிழ்நாடு விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை மாநிலமாக  ஜொலிக்க அவர் முன்னெடுத்துவரும் பணிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

கேலோ இந்தியா இளையோர் போட்டிகள், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், பார்முலா-4 கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் சிறப்பாக நடத்தி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் உதயநிதி.இதற்கிடையே 2024 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இதில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதற்கு உதயநிதியின் தீவிர பிரசாரம் முக்கிய காரணியாக அமைந்தது.

இதன்பிறகுதான் அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்கிற குரல்கள் திமுகவில் ஒலிக்கத் தொடங்கின.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 

இதன்பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடுவது, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வது என பம்பரமாகச் சுழன்று வருகிறார் உதயநிதி.இந்தப் பிறந்தநாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்! ஏனெனில், துணை முதல்வரானபின் அவர் கொண்டாடும் பிறந்தநாள் இது. 47வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பி.கே