கம்மந்த கம்மந்த ம்...
உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான பழங்குடி இனக்குழுக்கள் இருக்கின்றன. இந்த 5 ஆயிரத்துக்கு மேலான இனங்கள், 7 ஆயிரத்துக்கும் மேலான மொழிகளைப் பேசுகின்றனர். 90 நாடுகளில் சுமார் 48 கோடி பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் 6.2 சதவீதத்தினர் மட்டுமே பழங்குடி மக்கள். இந்தப் பழங்குடிகளில் பிரபலமான ஓர் இனம், மாவோரி.
பதினான்காம் நூற்றாண்டில் கிழக்கு பாலினேசியாவில் இருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்த பழங்குடி இனத்தவர்கள்தான், இந்த மாவோரி மக்கள். இன்று நியூசிலாந்தின் மக்கள் தொகையில் இருபது சதவீதத்தினர் மாவோரி மக்கள்தான். நியூசிலாந்தில் சுமார் 10 லட்சம், ஆஸ்திரேலியாவில் 1.7 லட்சம், இங்கிலாந்தில் 8 ஆயிரம், அமெரிக்காவில் 3,500, கனடாவில் 2,500, மற்ற பகுதிகளில் 8,000 என உலகம் முழுவதும் 12 லட்சம் மாவோரி மக்கள் இருக்கின்றனர்.
நியூசிலாந்தில் வசித்து வரும் இரண்டாவது பெரிய இனக்குழுவே மாவோரிதான். மாவோரி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த மக்கள் ஆங்கிலத்திலும் புலமையுடன் இருக்கின்றனர். நியூசிலாந்தின் அரசியல், ஊடகம், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மாவோரி மக்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. பல நூறு வருடங்களாக கிழக்கு பாலினேசியாவில் வாழ்ந்தாலும், அதன் தாக்கத்துக்கு உட்படாமல் தங்களுக்கான தனித்துவமான கலாசாரம், மொழி, கலை, புராணம், கைவினைப் பொருட்கள் என பலவற்றையும் உருவாக்கிக் கொண்டனர்.
இப்படி மாவோரி மக்கள் உருவாக்கிய தனித்துவமான ஒரு கலை வடிவம்தான், ‘ஹக்கா’. பாடிக்கொண்டே நடனமாடும் ஒரு கலை வடிவம் இது.
மாவோரி கலாசாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது, ஹக்கா. அவர்களின் பல்வேறு சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் இடம் பெறுகிறது. தனியாக இல்லாமல், ஒரு குழுவினால் ஹக்கா நிகழ்த்தப்படுகிறது. ஆண்களும், பெண்களும் குழுவாக இணைந்து இதை நிகழ்த்துகின்றனர். விருந்தினர்களை வரவேற்கும்போது, மாவோரி மக்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்தும்போது, திருவிழாக்களின் போது மட்டுமல்லாமல், மரண நிகழ்வுகளிலும் ஹக்கா நிகழ்த்தப்படுகிறது.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த மாதிரி தனித்தனியாக ஹக்கா பாடல்களும், அதற்கேற்ற நடனங்களும் இருக்கின்றன. பள்ளிக்கூடத்திலேயே ஹக்கா பயிற்றுவிக்கப்படுவதால், அனைத்து மாவோரி மக்களுக்கும் விரல் நுனியில் ஹக்கா தெரியும். ஏதாவது ஓர் இடத்தில் ஒரு மாவோரி ஹக்காவை ஆரம்பித்தால், அங்கிருக்கும் அனைத்து மாவோரிகளும் தன்னியல்பாகவே அவருடன் இணைந்து ஹக்காவை நிகழ்த்த ஆரம்பித்துவிடுவார்கள். இது ஹக்காவின் தனிச்சிறப்பு.
நியூசிலாந்தைச் சேர்ந்த கால்பந்து அணி, ரக்பி அணி சர்வதேச போட்டிகளில் பங்குபெறும்போது, போட்டிக்கு முன்பு எதிரணிக்குச் சவால் விடுவதற்காக ஹக்காவை நிகழ்த்துவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறது. அந்தளவுக்கு மாவோரி அல்லாத மற்ற நியூசிலாந்து மக்கள் மத்தியிலும் ஹக்காவுக்கு நல்ல மதிப்பு. மட்டுமல்லாமல், போரின்போதும் ஹக்காவை நிகழ்த்துகின்றனர் இந்த மாவோரிகள்.
கடந்த நவம்பர் 14ம் தேதி நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடந்தது. மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த மசோதா இருந்தது. அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மசோதாவைக் கிழித்துப் போட்டு, ‘கம்மந்த கம்மந்த ம்...’ என புரட்சிகரமான ஹக்கா பாடலை ஆக்ரோஷமாகப் பாடி, நடனமாடி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினரான ஹனா ராவிட்டி.
அவருடன் மற்ற மாவோரி பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஹக்காவை நிகழ்த்த பாராளுமன்றமே அல்லோலகல்லோலப்பட்டது. அதனால் பாராளுமன்றத்தில் 24 மணிநேரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார் ஹனா. பாராளுமன்றத்தில் ஹனாவின் ‘ஹக்கா’ போராட்டம் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. ஹனாவும் டிரெண்டானார். யார் இந்த ஹனா ?
ஹனா ராவிட்டி கரேரிக்கி மைய்ப்பி கிளார்க் என்பது இவரது முழுப்பெயர். மாவோரி இனத்தின் இளம் அடையாளமாகத் திகழ்கிறார் ஹனா. இவரது தந்தை ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாத்தா மாவோரி மொழிப் போராளியாக இருந்தவர். இவரது கொள்ளுத் தாத்தாதான் முதல் மாவோரி பாராளுமன்ற உறுப்பினர்.
ஹண்ட்லி எனும் இடத்தில் மாவோரி மக்களுக்கான பிரத்யேகமான கல்வி நிலையத்தில் கல்வி கற்றார் ஹனா. 17 வயதிலேயே மாவோரி லூனார் காலண்டர் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். 2022ம் வருடம் மாவோரி மொழி குறித்தான ஒரு உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். ஹனாவின் பேச்சு அங்கிருந்த அரசியல்வாதிகளைக் கவர, முன்னணி அரசியல்வாதிகள் பலர் ஹனாவைத் தங்களின் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால், மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாக இருக்கும் மாவோரி கட்சியில் ஹனாவும், அவரது தந்தையும் முக்கிய அங்கத்தினராக இருந்தனர். 2023ல் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் வந்தது. பாராளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராக இளம் தலைமுறையினரைக் களமிறக்கலாம் என்று மாவோரி கட்சி முடிவு செய்தது. ஹனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றிபெற்று, இளம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹனா.
ஆம்; தேர்தலில் வெற்றிபெறும்போது ஹனாவின் வயது 21தான். மட்டுமல்ல, நியூசிலாந்தின் இரண்டாவது இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பினையும் தன்வசப்படுத்தினார் ஹனா.
170 வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் ஸ்டூவர்ட் வோர்ட்லி என்பவர் இளம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேம்ஸ் பாராளுமன்ற உறுப்பினராகும்போது அவரது வயது 20 வருடங்கள், 7 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினராக குறைந்தபட்ச வயது 21. தனது வயது குறித்த பொய்யான சான்றிதழ்களை ஜேம்ஸ் சமர்ப்பித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகி, தனது கன்னிப்பேச்சை ஆரம்பிக்கும்போது கூட ஹக்காவை நிகழ்த்திவிட்டுத்தான் தொடங்கினார் ஹனா. மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளையும், வாழ்வியல் முன்னேற்றங்களையும் முக்கிய நோக்கமாக வைத்து இயங்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் உலகளவிலான சிறந்த இளம் அரசியல்வாதிகளுக்கான விருது நான்கு பேருக்கு வழங்கப்பட்டது. இதில் ஹனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|