Must Watch
இட் எண்ட்ஸ் வித் அஸ்
உலகப் புகழ்பெற்ற நாவலைத் தழுவி, உருவான ஆங்கிலப்படம் , ‘இட் எண்ட்ஸ் வித் அஸ்’. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். இறந்துபோன தந்தைக்குப் புகழஞ்சலி செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார் லில்லி. பெரிய பதவியில் இருந்தவர் லில்லியின் தந்தை. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள் லில்லி. மேடையில் ஏறும் லில்லி, புகழஞ்சலி செலுத்தாமல் மௌனமாக நின்றுவிட்டு, கூட்டத்திலிருந்து வெளியேறுகிறாள்.
அவளுக்கு அப்பாவைச் சுத்தமாகப் பிடிக்காது. அப்பாவைப் பற்றி நல்லவிதமாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. நகரத்துக்குத் திரும்பும் லில்லி, புதுசாக ஒரு பிசினஸை ஆரம்பிக்கிறாள். எதேச்சையாக ரைலைச் சந்திக்கிறாள். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. உறவை ஜாலியாகக் கொண்டு போக நினைக்கிறான் ரைல்.
ஆனால், தீவிரமாகக் கொண்டுபோக விரும்புகிறாள் லில்லி. ரைலும் லில்லியும் திருமணம் செய்துகொண்டார்களா? லில்லிக்கு ஏன் அவளது அப்பாவைப் பிடிக்கவில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
குடும்பத்துக்குள் நிகழும் வன்முறையையும், உணர்வுரீதியாக நிகழும் சுரண்டல்களையும் ஆழமாகப் பேசியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ஜஸ்டின் பால்டோனி.
யுத்ரா
‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கும் இந்திப்படம் இது. போதைப் பொருள் கும்பலுக்குக் கடும் சவாலாக இருக்கிறார் காவல்துறை அதிகாரியான கிரிஷ். அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஒரு சாலை விபத்தில் கிரிஷ்ஷும், அவரது மனைவியும் இறந்துவிட, குழந்தை யுத்ராவைக் காப்பாற்றி விடுகின்றனர். கிரிஷ்ஷுடன் வேலை செய்த கார்த்திக், யுத்ராவை வளர்க்கிறார். சிறு வயதிலிருந்தே கோபம் யுத்ராவுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது.
கிரிஷ்ஷின் நண்பனான ரஹ்மானுக்கு நிகத் என்ற மகள் இருக்கிறாள். நிகத்துடன் மட்டுமே நட்புடன் இருக்கிறான் யுத்ரா. வளர்ந்து பெரியவனான பிறகும் அவனுடைய கோபம் அப்படியே பிரச்னையாக இருக்கிறது. கார்த்திக்கும், ரகுமானும் யுத்ராவுடைய கோபத்தைக் கண்காணிக்கின்றனர்.
அந்தக் கோபத்தை நல்ல வழியில் பயன்படுத்தலாம் என்று திட்டமிடுகின்றனர். யுத்ராவின் பெற்றோர் விபத்தில் இறக்கவில்லை. அவர்களின் மரணத்துக்குப் பின்னணியில் பெரும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் இருக்கிறான் என்ற விஷயம் யுத்ராவுக்குத் தெரிய வர, கோபக்காரனான யுத்ரா என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை. ஆக்ஷன் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத இப்படத்தை இயக்கியிருப்பவர் ரவி உதயவார். த பக்கிங்ஹாம் மர்டர்ஸ்
‘நெட்பிளிக்ன்ஸி’ டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்திப் படம் ‘த பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’. பிரிட்டிஷ் - இந்தியன் துப்பறிவாளர் ஜாஸ். போதைப் பொருளுக்கு அடிமையானவனால் கொல்லப்பட்ட தனது குழந்தையைக் குறித்த கவலையில் இருக்கிறாள். இந்நிலையில் பக்கிங்ஹாம்ஷையருக்கு இடம் மாறுதல் செய்யப்படுகிறாள். அங்கே காணாமல் போன இந்தியன் குழந்தை இஸ்பிரீத்தைக் கண்டுபிடிக்கும் வேலை ஜாஸுக்குக் கொடுக்கப்படுகிறது.
இஸ்பிரீத்தின் பெற்றோரைச் சந்தித்த பிறகு, அவன் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று தெரிய வருகிறது. மட்டுமல்ல, ஜாஸின் உயர் அதிகாரி பட்டேலுக்கும், இஸ்பீரித்தின் குடும்பத்தினருக்கும் இடையில் தொடர்பு என்று அவளுக்குத் தெரிய வருகிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், அந்தக் குடும்பத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதும் அவளுக்குத் தெரிய வருகிறது.
இஸ்பிரீத்தைக் கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்குகிறாள் ஜாஸ். ஆனால், ஒரு கைவிடப்பட்ட காரில் இஸ்பிரீத்தின் இறந்த உடல்தான் கிடைக்கிறது. சூடுபிடிக்கிறது திரைக்கதை. எங்கேயும் சுவாரஸ்யம் குன்றாமல் விறுவிறுப்பாகக் கொண்டு போயிருப்பது சிறப்பு. ஜாஸாக கலக்கியிருக்கிறார் கரீனா கபூர். படத்தின் இயக்குநர் ஹன்சல் மேத்தா.
கிஷ்கிந்தா காண்டம்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப்படம், ‘கிஷ்கிந்தா காண்டம்’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது. ஒரு காலத்தில் இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர்அப்பு பிள்ளை. கண்டிப்புடன் இருக்கிறார். அத்துடன் ஞாபக மறதி நோயால் அவதிப்படுகிறார். தன்னுடைய பிரச்னையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார். அப்புவின் மகன் அஜய். வனத்துறையில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
அஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கிறது. முதல் மனைவி இறந்துவிட்டார். மகனைக் காணவில்லை. இரண்டாம் மனைவி மற்றும் அப்பாவுடன் காட்டுக்குள் இருக்கும் வீட்டுக்குக் குடி வருகிறான். காட்டில் குரங்குகளின் தொல்லை வேறு அதிகமாக இருக்கிறது.
தேர்தல் நிமித்தமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல்துறையிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். அப்புவிடமும் ஒரு துப்பாக்கி இருக்கிறது. ஆனால், அந்த துப்பாக்கியைக் காணவில்லை.
உண்மையில் அந்த துப்பாக்கி எங்கு போனது? அஜய் மகனுக்கு என்னஆனது என்பதை உணர்வுபூர்வமாகச் சித்தரித்திருக்கிறது திரைக்கதை. மூன்றே கதாபாத்திரங்களை வைத்து, அற்புதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டின்ஜித் அய்யதான்.
தொகுப்பு: த.சக்திவேல்
|