சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
‘உலகளவில் 82 கோடி சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். இதில் கால் பங்கு... அதாவது 21 கோடிப் பேர் இந்தியாவில்...’ என்னும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுக்கிறது அண்மையில் வெளியான ஓர் ஆய்வு.‘லேன்சட்’ (Lancet) எனும் மருத்துவப் பத்திரிகை உலகப் புகழ்பெற்றது. இந்த இதழ்தான் அண்மையில் செய்யப்பட்ட ஒரு நம்பத்தகுந்த ஆய்வை வெளியிட்டு இந்தியர்களின் ப்ளட் சுகரை எகிற வைத்திருக்கிறது.
என்ன சொல்கிறது அந்த ஆய்வு?
‘‘2022ல் 18 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய சர்க்கரை நோயாளிகள் உலகளவில் 82 கோடி வரைக்கும் இருக்கிறது. இதில் 21 கோடி சொச்சம் இந்தியாவில்.
சுமார் 200 நாடுகளை ஆய்வுக்கு எடுத்ததில் சீனாவில் 14 கோடி சொச்சம் நோயாளிகள், அமெரிக்காவில் 4 கோடி, பாகிஸ்தான் 3 சொச்சம் கோடி, இந்தோனேசியா 2 கோடி மற்றும் பிரேசில் 2 கோடிப் பேர்...’’ என்று சொல்கிறது அந்த ஆய்வு.
வேறு என்ன சொல்கிறது இந்தியா பற்றி இந்த ஆய்வு?
1990ஐ விட இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது என்று சொல்லும் அந்த ஆய்வு ஆண், பெண் என்றும் வேறுபடுத்தி நிறுவுகிறது.
உதாரணமாக 1990ல் பெண்களில் சுமார் 12 சதவீதம் பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இதுவே 2022ல் 24 சதவீதம். ஆண்களைப் பொறுத்தளவில் 1990ல் 11 சதவீதம். 2022ல் 21 சதவீதம். சரி, சிகிச்சையாவது எடுத்துக்கொள்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் அந்த ஆய்வு நிறுவிக் காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, 1990ல் 21 சதவீதப் பெண்கள் மட்டும் இந்த நோய்க்கு முறையான சிகிச்சை செய்தார்கள் என்றால் 2022ல் அது கொஞ்சம் கூடி 27 சதவீதம். அதே ஆண்கள் 1990ல் 25 சத
வீதம் என்றால் 2022ல் கொஞ்சம் கூடி 29 சதவீதம். அதாவது 10ல் 3 பேர்தான் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.
சர்க்கை நோயால் கால் இழப்பு, இதய நோய்கள், கிட்னி செயலிழப்பு, பார்வைக் குறைபாடு மற்றும் இறப்பு போன்ற பிரச்னைகள் எல்லாம் ஏற்படும் எனப் பலருக்கு தெரிந்தாலும், இந்தியாவில் இந்த நோய்க்கு பலர் கைவைத்தியம் பார்ப்பதே பல சிக்கலுக்கு காரணமாகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
பொரித்த மாவு உணவுகள் (கார்போ உணவுகள்), அது கொண்டுவரும் வேண்டாத கொழுப்புகள், கொழுப்பால் உடற்பருமன், உடற் பயிற்சி இன்மை, வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஏற்படும் இந்த நோயை முறையான சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதே பல்வேறு மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
இந்தியா போன்ற சராசரி அல்லது மிகவும் அடிமட்டத்தில் வருமானம் இருக்கும் மக்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதிலும் சிக்கல் உள்ளது என்று சொல்லும் இந்த ஆய்வுடன் இன்னொன்றையும் மறைமுகமாக பொருத்திப் பார்க்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்.
உதாரணமாக இந்தியாவில் சுமார் 55 சதவீத இந்தியர்கள் சத்தான உணவை (நியூட்ரிஷன்) எடுத்துக்கொள்வதில்லை எனும் பட்சத்தில் இதுவும் சர்க்கரை நோயுடன் பெரும்பாலும் தொடர்புடையது என்று சொல்கிறார்கள் இந்திய மருத்துவர்கள். ஜப்பான், கனடா, ஃபிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க்...
போன்ற இன்னும் பல மேற்குலக நாடுகளில் இந்த நோய் மேற்சொன்ன காலக்கட்டத்தில் மேலும் வளராமல் கட்டுப்படுத்தியிருப்பதைப் பார்த்தாவது இந்தியர்கள் திருந்துவார்களா என்று கேட்கிறார்கள் ஆய்வாளர்கள். இத்தோடு இந்திய சர்க்கரை நோயாளிகள் இந்த நோய்க்கு சிகிச்சை வருவதற்கான சூழலை இந்திய அரசு விரைந்து முடுக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
டி.ரஞ்சித்
|