பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது ‘மிஸ் யூ’. இதன் இயக்குநர் என்.ராஜசேகர். இயக்குநர் எழில் உதவியாளரான இவர் ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடைசி கட்ட வேலையில் பிசியாக இருந்தவரிடம் பேசினோம்.‘‘இந்தப் படம் என்னுடைய முந்தைய படங்கள் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். ப்யூர் லவ் ஸ்டோரி...’’ என படபடவென பேச ஆரம்பித்தார்.
லவ்வுல புதுசா என்ன சொல்லப் போறீங்க?
‘லவ் யூ’வை விட ‘மிஸ் யூ’ என்ற வார்த்தையில்தான் அதிகமா லவ் இருக்கிறதால இந்த டைட்டிலை வெச்சோம். ரொம்ப சிம்பிளா சொல்றதா இருந்தா எல்லோரும் புடிச்ச பொண்ணை லவ் பண்ணுவாங்க. என்னுடைய ஹீரோ புடிக்காத பொண்ணை லவ் பண்றார். புடிக்காத பொண்ணை ஹீரோ ஏன் லவ் பண்ணார், ஹீரோவுக்கு தன்னைப் பிடிக்கலைன்னு ஹீரோயினுக்கும் தெரியும். அப்படியிருந்தும் ஹீரோயின் எப்படி சம்மதிக்கிறார்? அதுக்காக ஹீரோ என்ன முயற்சி எடுத்தார்? அது ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவா, இல்லையா என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளோம்.
லவ் படம் என்றால் ஒரு ஃபார்மூலா இருக்கும். அது மாதிரி இதுல வழக்கமான ஃபார்மூலா எதுவும் இருக்காது. லவ்வை வித்தியாசமான கோணத்துல சொல்ல முயற்சித்துள்ளோம். அது ஆடியன்ஸுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என சித்தார்த் பிசியாக இருப்பவர்.
அவர் எப்படி படத்துக்குள் வந்தார்?
பிடிக்காத பொண்ணை ஹீரோ எப்படி லவ் பண்ணுகிறார் என்ற அந்த ஒன்லைன் அவருக்குள் ஒருவித கியூரியாசிட்டியை ஏற்படுத்தி, முழுக் கதையையும் கேட்க வெச்சது. கடந்த சில வருடங்களாக ‘ஜிகர்தண்டா’, ‘அருவம்’, ‘டக்கர்’, ‘சித்தா’ என வித்தியாசமான படங்கள் அதிகமா பண்ணினார். கம்ப்ளீட் லவ் படம் பண்ணி ரொம்ப நாளாச்சு. கதையைக் கேட்டதும், ‘ரெகுலர் படம் இல்லாம முழுக்க முழுக்க லவ் படம் பண்ணுவது எனக்கே வித்தியாசமா இருக்கு’ன்னு சொன்னார்.
சித்தார்த் சார் மணிரத்னம் சாரிடமிருந்து வந்தவர். பல மொழிகளில் பல படங்கள் பண்ணியவர். ஆனால், அவரை ஹேண்டில் பண்ணுவதில் எந்த கஷ்டத்தையும் கொடுக்கல. கதை, கேரக்டர் என எல்லாத்தையும் சுலபமா புரிஞ்சுக்கிட்டார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸையும் ஷேர் பண்ணினார். அவருடைய கேரக்டர் பேர் வாசு. சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர். அந்தக் கேரக்டருக்கு எந்தளவுக்கு நியாயம் சேர்க்க முடியுமோ அதை மிக அழகா செய்தார்.
அவரைப் பொறுத்தவரை அந்த மாதிரி ரோலை ஈசியா பண்ணிடுவார்ன்னு சொல்லிட முடியும். ஆனால், அவர் ஈசியான கேரக்டர்ன்னு சும்மா இல்லாம அதிக மெனக்கெடலுடன் நடிச்சார். உதாரணத்துக்கு, ஒப்பனிங் சாங்கை கவனிச்சி பார்த்தீங்கன்னா மத்த பாடல் மாதிரி இல்லாம புதுசா ஒண்ணு டிரை பண்ணியிருப்பார். ‘Do small things with great effort’ன்னு சொல்வாங்க. அந்தமாதிரி சின்னச் சின்ன வேலைகளை மிக அழகா பண்ணினார்.
ஹீரோயின் புதுமுகம் மாதிரி தெரியுதே?
இந்தக் கதைக்கு பிரபலமான முகம் தேவைப்படவில்லை. ஃப்ரஷ் லுக்ல இருந்தா நல்லாயிருக்கும் என்ற ஐடியாவுல ஹீரோயின் தேடினோம். பிசினஸ் வேல்யூக்காக பார்க்காமல் கதைக்கு நியாயம் செய்யக்கூடிய ஹீரோயின் வேண்டும் என்று டீமா முடிவு செஞ்சோம். அப்படி கிடைச்சவர்தான் ஆஷிகா ரங்கநாத். கன்னடத்துல முன்னணி ஆக்ட்ரஸ். தமிழில் அதர்வாவுடன் ‘பட்டத்து அரசன்’ பண்ணியவர். அவருடைய கன்னடப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ரொம்ப பிரமாதமான நடிகை. இதுல ஆடிட்டர் கேரக்டர் பண்ணியிருக்கிறார். ரொம்ப சூப்பரா பெர்ஃபாம் பண்ணியுள்ளார். அவர் பண்ணிய படங்களில் பெஸ்ட் பெர்ஃபாம்ன்ஸ் படமா இதுதான் இருக்கும். மற்ற வேடங்களில் பொன்வண்ணன், கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், அனுபமா குமார், சஷ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துளார்கள். எல்லோருமே கதையொட்டிய கதாபாத்திரமாகத்தான் வருவாங்க.
பாடல்கள் எப்படி வந்துள்ளது?
ஜிப்ரான் சார் மியூசிக் கண்டிப்பா நம்பிக்கை கொடுக்கும். ‘தீரன்அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ மாதிரி ஆக்ஷன் படம் நிறைய பண்ணியுள்ளார். இது ப்யூர் லவ் படம் என்பதால் ஆர்வத்தோட பண்ணினார்.
இந்தப் படத்துக்குப் பிறகு ஜிப்ரான் சார் மியூசிக் புது கலர்ல தெரியும். படத்துல மொத்தம் எட்டு பாடல்கள். ஜிப்ரான் சாரிடம் கதை சொல்லி கமிட் பண்ணும்போது நாலு பாட்டு என்றுதான் கமிட்டானோம். போஸ்ட் புரொடக்ஷன்ல படம் புடிச்சுப்போய் அவரே இன்னும் நாலு பாட்டு சேர்த்துக்கலாம்னு சொன்னார். பாடல்களுக்கு எப்படி அவரே இன்ட்ரஸ்ட் எடுத்துப் பண்ணினாரோ அதேபோல் பின்னணி இசையையும் பண்ணிக்கொடுத்தார். எல்லா பாடல்களையும் மோகன் ராஜன் எழுதியுள்ளார். மோகன் என்னுடைய நண்பர். ஸ்டோரி டிஸ்கஷனிலிருந்து என்னுடன் டிராவல் பண்ணியதால பாடலுக்காக தனியாக நாங்கள் ப்ளான் பண்ணவில்லை. சொல்லப்போனால் பேமன்ட் கூட இன்னும் அவர் முழுசா வாங்கவில்லை. பாடல்கள் பெஸ்ட்டா வந்திருக்கு. சித்தார்த் சார் பாடிய ‘நீ என்ன பார்த்தியா...’, ‘சொன்னாரு நைனா...’ பாடல்கள் இணையத்தில் பெரிய லெவலில் டிரெண்டாகியிருக்கு. ஒரு பாடலை ரோகேஷ் எழுதினார். அசோக் டயலாக் எழுதியுள்ளார்.
கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சாவிடம் வித்தை கற்றவர். ‘சதுரங்க வேட்டை’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உட்பட பல படங்கள் பண்ணியவர். மனோஜ் பரமஹம்சா சார் ஒர்க் பண்ணினால் எப்படியிருக்குமோ அப்படியொரு அவுட்புட் கொடுத்துள்ளார். கேமராமேன் ஒர்க் எப்படியிருக்கும் என்பதற்கு டீசர் பார்த்தாலே, நான் சும்மா எதுவும் பேசலைன்னு தெரியும்.
தயாரிப்பு ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ சாமுவேல் மேத்யூ. அவருக்கு இதுதான் முதல் படம். டிஜிட்டல் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர். குறிப்பாக மார்க்கெட்டிங், பிராண்டிங் செய்வதில் நிபுணர். என்னை முழுசா நம்பினார். ஆரம்பத்துல சொன்ன பட்ஜெட்டைவிட கொஞ்சம் தாண்டிடுச்சு. நான் சொன்ன காரணங்கள் அவருக்கு திருப்தியா இருந்ததால் தாராளமா செலவு பண்ணினார்.
சினிமாவை அனலைஸ் பண்ணியவர் என்பதால் வெளியீட்டுக்கு முன்பே படத்தை நல்லவிதமா பிராண்டிங் பண்ணினார். ஓடிடி உரிமையை பிரபல பன்னாட்டு நிறுவனம் வாங்கியிருக்கு. ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது. பிரபல ஆடியோ நிறுவனம் ஆடியோ ரைட்ஸையும், பிரபல தயாரிப்பு நிறுவனம் எஃப்.எம்.எஸ். உரிமையையும் வாங்கியுள்ளது. உங்க இயக்குநருக்கு படத்தை காண்பிச்சீங்களா?
எனக்கு சொந்த ஊர் காரைக்குடி. படிச்சது எம்பிஏ. சில வருஷங்கள் தனியார் நிறுவனத்துல வேலை பார்த்தேன். என்னுடைய நண்பனின் பாஸ் மூலம் எழில் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.
அவரிடம் ஒரு கதையைச் சொல்லி உதவியாளர் வாய்ப்பு கேட்டேன். அது புடிச்சதால ‘மனம் கொத்தி பறவை’யில உதவியாளராக சேர்த்துக்கிட்டார். ‘தேசிங்கு ராஜா’வுல டயலாக் எழுத வெச்சார். எழில் சாரிடம்தான் சினிமா கத்துக்கிட்டேன். எழில் சார் இன்னும் படம் பார்க்கவில்லை. பிரீமியர் ஷோவுல பார்க்கவுள்ளார்.
எஸ்.ராஜா
|