நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கும் திருமணங்களும் 6 லட்சம் கோடி ரூபாய் புரளும் இந்திய திருமணச் சந்தையும்!
இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 48 லட்ச திருமண நிகழ்வுகள் நடக்கும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு கணித்திருப்பதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ்.
இத்திருமணங்கள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வணிக வாய்ப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக தில்லியில் மட்டுமே 4.5 லட்சம் திருமணங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லியில் நடக்கும் திருமணங்கள் மூலம் நிகழும் வணிகப் பரிவர்த்தனைகள், உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பங்களிப்பு செய்யும் என்கின்றனர்.
இந்தக் கல்யாணத் திருவிழா கடந்த நவம்பர் 12ம் தேதியிலிருந்து சூடுபிடித்திருக்கிறது. அதுவும் குறிப்பாக நவம்பர் 12, 13, 17, 18, 22, 23, 25, 26, 28, மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் , டிசம்பர் 4, 5, 9, 10, 11, 14, 15, 16 ஆகிய தேதிகளிலும் திருமண நிகழ்வுகள் பற்றி எரியும். இந்தத் தேதிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகள் நடக்கும். பலருக்கு மண்டபம் கிடைக்காமல் கோயில்களில் நடத்துவார்கள். வசதியானவர்கள் நட்சத்திர விடுதிகளில் திருமணத்தை நடத்துவார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் திருமணத்தை நடத்த முடியுமோ அந்த இடங்கள் எல்லாம் திருமண நிகழ்வுகளால் நிறைந்திருக்கும். மட்டுமல்ல, சில்லறை வணிகர்கள் முதல் நகைக்கடை அதிபர்கள் வரை இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே திருமண வியாபாரத்துக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். அக்டோபரிலிருந்தே திருமணத்துக்காக நகைகள் வாங்குபவர்களின் கூட்டம் இந்தியாவில் உள்ள முக்கியமான நகைக்கடைகளை மொய்க்கிறது. திருமணத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று நகைகள் வாங்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த 48 லட்சம் திருமணங்களில் ஒவ்வொரு திருமணத்துக்கும் 3 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் 10 லட்சம் திருமணங்கள் நடக்கும். ஒவ்வொரு திருமணத்துக்கும் 6 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் இன்னொரு 10 லட்சம் திருமணங்கள் நடக்கும். ஒவ்வொரு திருமணத்துக்கும் 10 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் மற்றுமொரு 10 லட்சம் திருமணங்கள் நடக்கும்.
ஒவ்வொரு திருமணத்துக்கும் 15 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் இன்னொரு 10 லட்சம் திருமணங்கள் நடக்கும். ஒவ்வொரு திருமணத்துக்கும் 25 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் மற்றுமொரு 7 லட்சம் திருமணங்கள் நடக்கும். ஒவ்வொரு திருமணத்துக்கும் 50 லட்ச ரூபாய் செலவு என்ற அளவில் இன்னொரு 50,000 திருமணங்கள் நடக்கும்.
ஒவ்வொரு திருமணத்துக்கும் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான செலவு என்ற அளவில் மீதமிருக்கும் 50,000 திருமணங்கள் நடக்கும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு கணித்திருக்கிறது.மட்டுமல்ல, திருமணத்துக்கான செலவுகளைப் பொருட்கள் மற்றும் சேவை என்று இருவகையாகப் பிரிக்கின்றனர்.
திருமணத்துக்கான மொத்த செலவில் பட்டுச்சேலைகள், லெஹங்கா, கோட் சூட், ஷெர்வானி என ஆடைகளுக்கு 10 சதவீதம், நகைகளுக்கு 15 சதவீதம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மற்ற உபகரணங்களுக்கு 5 சதவீதம், இனிப்பு வகைகள் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்கு 5 சதவீதம், மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு 5 சதவீதம், பரிசுப் பொருட்களுக்கு 4 சதவீதம், மற்ற பொருட்களுக்கு 6 சதவீதம் செலவு செய்வார்கள்.
மண்டபம், ஹோட்டலுக்கு 5 சதவீதம், நிகழ்வு நடத்தித் தரும் நிறுவனத்துக்கு 3 சதவீதம், திருமண மேடை அலங்காரத்துக்கு 10 சதவீதம், சமையலுக்கு 10 சதவீதம், மலர் மற்றும் மலர் சார்ந்த அலங்காரங்களுக்கு 4 சதவீதம், போக்குவரத்துக்கு 3 சதவீதம் , போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபிக்கு 2 சதவீதம், இசை நிகழ்ச்சிகளுக்கு 3 சதவீதம், மற்ற சேவைகளுக்கு 10 சதவீதம் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, சொந்த ஊரை விட்டு, புகழ்பெற்ற ஊர் அல்லது சுற்றுலா தலங்களுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளும் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ என்கிற புதிய வகை திருமண முறையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ‘‘நவம்பர், டிசம்பரில் டெஸ்டினேஷன் வெட்டிங் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இன்று திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களின் மத்தியில் டெஸ்டினேஷன் வெட்டிங்கிற்கான மோகம் அதிகரித்துள்ளது. திருமணம் மற்றும் தேன் நிலவுக்கும் சேர்த்து கவர்ச்சியான ஓர் இடத்தைத்தான் டெஸ்டினேஷன் வெட்டிங்கிற்குத் தேர்வு செய்கின்றனர். வட இந்தியர்களைப் பொறுத்தளவில் திருமணம் உள்நாட்டில் என்றால் கோவா, இராஜஸ்தான், உதய்ப்பூரை அதிகமாகத் தேர்வு செய்கின்றனர். வெளிநாடு என்றால் தாய்லாந்து, பாலி, துபாய் ஆகியவை முக்கியமான டெஸ்டினேஷன்களாக இருக்கின்றன...’’ என்கிறார் அனைத்து வகையான திருமண ஏற்பாடுகளைச் செய்து தரும் நிறுவனத்தை நடத்திவரும் சாத்வானி. இப்படியான டெஸ்டினேஷன் வெட்டிங்கில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதிகபட்சமாக ஒரு திருமணத்தில் 100 அல்லது 200 பேர் கலந்துகொள்வார்கள்.
ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு 100 பேர் சென்றால், எவ்வளவு செலவு ஆகுமோ, அதைவிட 100 பேர் கலந்துகொள்ளும் டெஸ்டினேஷன் வெட்டிங்கில் அதிகமாக செலவாகும். அதனால் டெஸ்டினேஷன் திருமணங்கள் நடக்கும் இடங்களில் இருக்கும் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள் ஹவுஸ் ஃபுல்லாகும். அந்த ஊரில் பணப்புழக்கமும் அதிகரிக்கும். உடை, நகை, உணவு, போக்குவரத்து என்று திருமணத்துக்கு ஆகும் செலவுகள் தனி.
வழக்கமாக நடக்கும் திருமணங்களைவிட, டெஸ்டினேஷன் வெட்டிங்கில் செலவு அதிகம். இத்தகைய திருமண நிகழ்வுகளால் பல சுற்றுலா தலங்கள் வணிக ரீதியாக மேம்படுகின்றன என்கின்றனர். கடந்த வருடத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே 35 லட்சம் திருமணங்கள் நடந்திருக்கின்றன.
சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் திருமணம் சார்ந்த வணிகப் பரிவர்த்தனைகளும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் மத்தியில் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் திருமண நிகழ்வுகள், மார்ச் மாதம் வரைக்குமே பற்றி எரியும்.
த.சக்திவேல்
|