இந்திய பிசினஸ்மேனுக்கு அமெரிக்காவில் பதவி!



வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்கும் டிரம்ப், தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் எலன் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மஸ்க், பல்வேறு கூட்டங்களில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாகப் பேசினார். அவரது ‘எக்ஸ்’ (முன்பு ‘டுவிட்டர்’) சமூக வலைதளமும் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது ஆதரவாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், எலன் மஸ்க்கின் சேவையை பெரிதாக பாராட்டிப் பேசினார். அவரது சேவையை தனது அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தொழிலதிபர்கள் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவர் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “மகத்தான எலன் மஸ்க்கும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளைத் தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள்.

இது ‘Save America’-வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நிதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளைத் தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இந்தப் பொறுப்பில் தொடர்வார்கள்...” என தெரிவித்துள்ளார்.டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதவியை ஏற்பதன் மூலம் அமெரிக்க அரசியலில் எலன் மஸ்க் நேரடியாகக் கால் பதிக்கிறார்.

செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் இந்தத் துறை பங்கு கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பொறுப்பு கிடைத்தவுடன், விவேக் ராமசாமி, “நாங்கள் மென்மையான போக்குடன் நடந்துகொள்ளப் போவதில்லை...” என்று எழுதியுள்ளார்.

அதாவது, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடுமையான போக்குடன் நிறைவேற்றுவேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தான் டிரம்ப் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவேக் ராமசாமி இதுநாள் வரை வலியுறுத்தி வந்த பணிக்கான பொறுப்பைத்தான் தற்போது டிரம்ப் அவருக்கு வழங்கியுள்ளார். உதாரணமாக, விவேக் ராமசாமி பல அரசாங்க துறைகளையும், அமைச்சகங்களையும் மூட வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்.

அதிகாரக் குறுக்கீடுகளை குறைப்பது, அதிகப்படியான ஒழுங்குமுறைகளை நீக்குவது, தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்கள் /அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது ஆகிய பணிகளில் எலன் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசாமி செயல்படுவார்.

நம் அனைவருக்கும் எலன் மஸ்க் யார் என்று தெரியும். சரி, யார் இந்த விவேக் ராமசாமி?

இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விவேக் ராமசாமியின் தந்தை பெயர் கணபதி ராமசாமி. இவர் கொல்கத்தாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து இன்ஜினியராகப் பணியாற்றினார். அதன்பிறகு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.

 விவேக் ராமசாமியின் தாய் பெயர் கீதா. இவர் மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பை முடித்து சைக்கியாட்ரிஸ்டாக பணியாற்றினார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் வசித்து வந்தனர். அதன்பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

விவேக் ராமசாமி 1985ம் ஆண்டில் அமெரிக்காவில் ஓஹியோவின் சின்சினாட்டி சிட்டியில் பிறந்தார். இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக விவேக் ராமசாமி உள்ளார்.
மட்டுமல்ல, ‘வோக் குழு’ (Woke, Inc.) என்ற நூலின் ஆசிரியரும் விவேக் ராமசாமிதான். இவர் புதிய அமெரிக்கக் கனவுக்காக கலாசார இயக்கம் ஒன்றினைத் துவங்க விரும்புவதாக பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். இவரைப் பொறுத்தவரை மக்களை ஒன்றிணைக்க வழி இல்லையென்றால் பல கலாசாரங்கள் இருந்தும் எந்தப் பயனும் இல்லை.

முப்பத்தி ஒன்பது வயதாகும் ராமசாமி, தற்பொழுது ஏழு பில்லியன் டாலர் மதிப்பிருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,000 கோடி) ‘ராய்வென்ட் சயின்சஸ்’ (Roivant Sciences) என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை ஓஹியோவில் நிறுவியுள்ளார்.இவர், முதலீடு தொடர்பான நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார்.

 ‘போர்ப்ஸ்’ (Forbes) வெளியிட்ட அறிக்கையின்படி இவருடைய மொத்த சொத்துக்களின் மதிப்பு 630 மில்லியன் டாலர்கள்.விவேக்கின் மனைவி அபூர்வா, அறுவை சிகிச்சை நிபுணர். இவர் தனது குடும்பத்துடன் கொலம்பஸில் வாழ்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள்.

தனது தாய் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார் என்றும், தனது தந்தை இன்னும் இந்திய பாஸ்போர்ட்தான் வைத்துள்ளார் என்றும் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
விவேக் ராமசாமி தனது தனித்துவமான திட்டங்களுக்காக அறியப்படுகிறார். உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துதல், குழந்தைகளை சமூக ஊடகங்களிடம் இருந்து தள்ளி வைத்தல் மற்றும் சில அரசாங்கத் துறைகளை மூடுதல் ஆகியவை இதில் முக்கியமானவை.

உதாரணமாக, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், உள்நாட்டு வருவாய் சேவை மற்றும் எஃப்.பி.ஐ எனப்படும் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்பு சேவை அமைப்பு ஆகிய துறைகளை மூட இவர் வலியுறுத்தி வருகிறார்.மட்டுமல்ல, ஹெச்-1பி விசாவை நிறுத்தவும் விவேக் விரும்புகிறார். இப்படி மட்டும் நடந்தால் இதனால் இந்தியர்கள்தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்! ஓர் இந்தியரே ஏன் இப்படி இந்தியர்களுக்கு எதிராக இருக்கிறார் என்பது விடையில்லா கேள்வி!

மட்டுமல்ல, சமூக வலைதளங்கள் சிறுவர் சிறுமிகளை ‘அடிமையாக்குவதாக’ தொடர்ந்து பேசி வருகிறார் விவேக். “12 வயது சிறுவர், சிறுமிகள் இதை பயன்
படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை நினைத்து கவலை கொள்கிறேன்...” என்கிறார்.ரஷ்யாவிற்கு தேவையான சலுகைகளை வழங்கினால்தான் உக்ரைன் - ரஷ்யா போரை சுமுகமான முறையில் நிறுத்தமுடியும் என்பது விவேக்கின் நம்பிக்கை.

கடந்த ஜூன் மாதம் ‘ஏசிபி நியூஸ்’ ஊடகத்திடம், ‘‘இந்தப் போரை கொரிய போரை நிறுத்தியதைப் போல உடன்படிக்கை கொண்டு நிறுத்த வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளும் தங்களுக்கான எல்லைகளுக்குள் தங்களது அதிகாரத்தை செலுத்தமுடியும்...’’ என்று தெரிவித்திருந்தார்.

விவேக்கைப் பொறுத்தவரை உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குவது என்பது ரஷ்யாவை சீனாவின் பக்கம் தள்ளுவது போன்றது.இதுமட்டுமல்ல... வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 25 ஆக உயர்த்த வேண்டும் என்றும் விவேக் கூறுகிறார்.

18 வயது வரை உள்ளவர்கள் ‘தேசிய சேவைத் தேவைகளை’ பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது இவரது எண்ணம். அதாவது, அவர்கள் அவசரகாலத்தில் உதவியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ராணுவத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும்.

இத்துடன் 18 வயதைக் கடந்தவர்கள் அமெரிக்கக் குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

ஹைலைட்டாக, உளவு அமைப்பான ‘எஃப்.பி.ஐ’-இன் நிதிகளை பிரித்து ரகசிய சேவை, நிதிக் குற்றங்களுக்கான அமலாக்கத் துறை மற்றும் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கலாம் என்ற யோசனையை பலகாலமாக முன்வைத்து வருகிறார்.

சின்ன ஃப்ளாஷ்பேக். அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனக்கு எதிராக நடத்தப்பட்ட எஃப்.பி.ஐ-இன் செயல்களை வன்மையாகக் கண்டித்து வருவதை இந்த இடத்தில் நினைவு கூருங்கள்! ஆக, டிரம்ப் என்னும் செல்போனுக்கு ஏற்ற சிம்கார்ட்தான் விவேக் ராமசாமி.இந்திய வம்சாவளியைச்சேர்ந்த இவருக்கு வாழ்த்துகள். இவரால் இந்தியர்கள் பயனடைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜான்சி