தாயாக ஆசைப்படுகிறார் சமந்தா
தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகி, மடமடவென படங்கள், பெரிய இடத்தில் திருமணம்... இப்படி சென்று கொண்டிருந்தது கிராஃப். திடீரென ஆரோக்கியத்தில் பிரச்னை, தொடர்ந்து திருமண வாழ்க்கையில் பிரச்னை, ஏராளமான மன அழுத்தங்கள்... என எத்தனை போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அத்தனையும் தாங்கி நிற்கிறார் சமந்தா ரூத் பிரபு.
இதோ பான் இந்தியா எனச் சொல்வதை விட பான் வோர்ல்ட் ப்ராஜெக்ட்டான ‘சிட்டாடல்’ ஆக்ஷன் யுனிவர்சில் இப்போது இணைந்திருக்கிறார். இந்த இந்திய வெப் சீரிஸ் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், தான் தாயாக வேண்டும் என வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் சமந்தா. இந்த வெப் தொடர் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில்தான் சமந்தா இப்படிச் சொல்லியிருக்கிறார்.
‘‘வெப் தொடரில் ஒரு அம்மாவாக நடித்துள்ள எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு உள்ளது. இப்போது ஒன்றும் கால தாமதம் ஆகவில்லை. எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அழகான அனுபவம். அதை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால், மக்கள் பெரும்பாலும் வயதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வயது தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் தாய் ஆகலாம்...’’ என உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
அத்துடன் பிரியங்கா சோப்ராதான் தனது ரோல் மாடல் என்கிறார் சமந்தா. ‘‘ஒரு நாயகன் செய்வதை நாயகியும் செய்யலாம் என்பதை இந்த வெப் தொடர் நிரூபித்துள்ளது. அதனால், பெண்களை பொம்மையாகக் காட்டும் கதாபாத்திரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன்.
நடிகை பிரியங்கா சோப்ரா, பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக் கொடுக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அதிகார மையங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...’’ என்கிறார் சமந்தா.
காம்ஸ் பாப்பா
|