இந்தியாவைவிட பொருளாதார வளர்ச்சியில் சீனா முன்னேற கல்வி முறை காரணமா?
விவரங்களை அடுக்குகிறது புதிய ஆய்வு
உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகள் இந்தியாவும், சீனாவும். 1990களின் ஆரம்பத்தில் இந்த இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் உலகமயமாக்கலுக்குள் இணைந்து பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தன. இதன்வழியாக கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தன. ஆனால், இன்று சீனாவின் தனிநபர் வருமானம் என்பது இந்தியாவைவிட இருமடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் சமீபத்தில் வந்துள்ள இருநாடுகளின் கல்வி முறை சம்பந்தமான புதிய ஆய்வு ஒன்று, மனிதநேயம் இந்தியாவின் ஆரம்பகால பொருளாதார முன்னேற்றத்தை மெதுவாக்கியதாகவும், சீனாவின் வளர்ச்சிக்கு தொழிற்கல்வி உதவியாகவும் குறிப்பிடுகிறது. ‘21ம் நூற்றாண்டில் சீனா மற்றும் இந்தியா உருவாக்கம்: 1900 முதல் 2020 வரை நீண்டகால மனித மூலதனக் குவிப்பு’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆய்வில் பல்வேறு விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ஆய்வு, இருநாடுகளின் கல்விப் பாதையை ஆராய்ந்து, மனித மூலதனத்தின் வழியாக எந்தளவுக்கு இந்த நாடுகள் கல்வி முறையின் மூலம் திறன் வளர்ச்சியை எட்டியுள்ளன என்பதை புள்ளி விவரங்களுடன் அடுக்குகிறது.
இதனை ‘பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த நிதின்குமார் பார்தி மற்றும் லி யாங் ஆகிய இருவரும் இணைந்து அங்குள்ள உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் வழியாக மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பேசும் நிதின்குமார் பார்தி, ‘‘சீனாவின் கல்வி வளர்ச்சிப் பாதை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது...’’ என்கிறார். மேலும் அவர், ‘‘இதற்கு நேர்மாறாக இந்தியா ஆரம்பத்தில் காலனித்துவ நிர்வாகத்திற்கு மனிதவளம் தேவைப்பட்டதால் மனிதநேயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்பத்தில் இருந்து விலகியிருந்தது. இதனால், அதிக வளர்ச்சிக்கு வித்திடவில்லை...’’ எனக் குறிப்பிடுகிறார். இதற்காக இந்த ஆய்வாளர்கள் ஒரு நூற்றாண்டு கால வரலாற்று அறிக்கைகள், கல்விக் கணக்கெடுப்புகள் எனப் பலவற்றைத் தொகுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள நீண்டகால கல்வி அணுகுமுறையை ஒப்பிட்டுள்ளனர். அதிலிருந்து, ‘கீழ்-மேல் Vs மேல்-கீழ்’, ‘தரம் மற்றும் அளவு’, ‘கல்வியைப் பல்வகைப்படுத்தல்’ என மூன்று குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கண்டறிந்து விவரங்களை அடுக்குகின்றனர்.
கீழ்-மேல் Vs மேல்-கீழ்
இதன்படி சீனா 1900களின் ஆரம்பங்களில் கம்யூனிசம் வருவதற்குமுன் ஆரம்பநிலை வெகு ஜனக் கல்வியில் கவனம் செலுத்தியது. 1960களில் இருந்து 1980கள் வரை கம்யூனிச ஆட்சியின் கீழ் இடைநிலைக் கல்விக்கு மாறியது. பின்னர் இறுதியாக 1980களில் இருந்து மூன்றாம் நிலை உயரடுக்குக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது. அதாவது கீழிருந்து மேல் நோக்கி படிப்படியாக முன்னேறியது.
ஆனால், இந்தியாவோ பிரிட்டிஷ் காலத்திலிருந்து 1950கள் வரை இடைநிலைக் கல்வியில் முதன்மை கவனம் செலுத்தியது. காலனித்துவத்திற்குப் பிந்தைய சோசலிச காலக்கட்டத்தில் மூன்றாம் நிலை கல்விக்கு மாறியது.இறுதியாக 1990களுக்குப் பிறகு, அதாவது தாராளமயமாக்கலுக்குப் பின்னர் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது. அதாவது மேலிருந்து கீழ்நோக்கிச் சென்றதாகக் குறிப்பிடுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
மேலும் இந்த ஆய்வாளர்கள், ‘‘ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்காததாலும், சுதந்திரத்திற்குப் பிறகு வயது வந்தோருக்கான கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாததாலும் 1970களில் இந்தியாவின் கல்வியறிவின்மை விகிதம் 37 சதவீதமாக இருந்தது. ஆனால், இதே காலகட்டத்தில் சீனா, கல்வியறிவின்மையை வெற்றிகரமாக ஒழித்திருந்தது...’’ என்கின்றனர்.
இதேபோல 1994ல், முனைவர் கல்விக்கான இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் சீனாவைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. ஏனெனில் சீனா அப்போதுதான் மூன்றாம் நிலை கல்விக்குள் வளர்ந்து வந்தது.இருப்பினும், 2020ம் ஆண்டு வாக்கில், இந்நிலைமை தலைகீழாக மாறியது. சீனாவின் முனைவர் கல்விக்கான சேர்க்கை விகிதம் இந்தியாவைவிட விஞ்சியது.
தரத்தைவிட அளவுக்கு முன்னுரிமை
இரண்டாவதாக சீனா தனது கல்வி முறையில் ஆரம்ப விரிவாக்கத்தின் போது தரத்தை விட அளவுக்கே முன்னுரிமை அளித்தது. அதேநேரத்தில் இந்தியா ஒவ்வொரு கல்வி மட்டத்திலும் தரத்தை பராமரித்தது.
அதில் மெதுவான மற்றும் நிலையான விரிவாக்கத்தைத் தொடர்ந்தது. 1950கள் வரை சீனா ஆரம்பநிலைக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரித்தது. இதனால் அதன் தரம் மோசமடைந்தது. இருந்தும் அதிக மாணவர் சேர்க்கை விகிதத்தை அடைந்தபிறகே அதிக ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி ஆசிரியர்-மாணவர் விகிதத்தை மேம்படுத்தத் தொடங்கியது. இதனால், கல்வியின் தரம் உயர ஆரம்பித்தது. போலவே, 1980களில் இருந்து ஆசிரியர்களின் சம்பளத்தையும் மேம்படுத்தத் தொடங்கியது. இந்தியாவிலோ 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி, தரத்தை மேம்படுத்துவது குறித்தும், புதிய உயர்தரமான மாதிரி கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது பற்றியும் விவாதம் மட்டுமே நடந்ததாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மொத்தத்தில் சீனா முதலில் அளவுக்கு முன்னுரிமை அளித்து, பின்னர் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. ஆனால், இந்தியா அதன் காலனித்துவத்தின் தாக்கத்தால், உயர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு தரத்தை முன்னிறுத்தியது என்கிறது இந்த ஆய்வு.
கல்வியைப் பல்வகைப்படுத்தல்
1950களுக்கு முந்தைய சீனாவில் தொழிற்கல்வி, தொழில்மயமாக்கல் மற்றும் இராணுவத் தேவைகளுடன் நெருக்கமாக இணைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. குயிங் வம்சத்தின் பிற்பகுதியில், இராணுவ நோக்கங்களுக்காக சிறப்புக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்றாம் நிலை தொழிற்கல்விக்கான அடித்தளத்தை அமைத்தது.
பின்னர் சீனக் குடியரசின் (1912-1949) கீழ், தொழிற்கல்வி இடைநிலைக் கல்வியில் விரிவடைந்தது. 1932ல் கொண்டு வந்த தொழிற்கல்வி சட்டத்தின் மூலம் மூன்றாம்நிலை கல்வியில் ஒரு முறையான, சுதந்திரமான தொழிற்கல்வி முறை அமைந்தது. ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் தொழில்மயமாக்கல் குறைவு. இதனால், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தொழிற்கல்வி பின்தங்கியிருந்தது. மூலப்பொருட்களை சப்ளை செய்யும் நாடாக மட்டுமே இந்தியா விளங்கியது.
சீனாவில் 1950களுக்குப் பிறகு தொழிற்கல்வி வேகமாக வளர ஆரம்பித்தது. என்றாலும் 1980களுக்குப் பிறகுதான் நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக தொழிற்கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது.
குறிப்பாக மூன்றாம்நிலை கல்வியில் 54 சதவீத மாணவர்களும், இடைநிலைக் கல்வியில் 6 சதவீத மாணவர்களும் தொழிற்கல்வி திட்டங்களில் சேர்ந்தனர். இது அடுத்த மூன்று தசாப்தங்களில் பெருகியது. 2010களில் மூன்றாம்நிலை தொழிற்கல்வியில் 49 சதவீத மாணவர்களும், இடைநிலை தொழிற்கல்வியில் 16 சதவீத மாணவர்களும் இருந்தனர்.
ஆனால், இந்தியாவில் 10 சதவீத மாணவர்களே மூன்றாம்நிலை தொழில்கல்வியிலும், 1 சதவீத மாணவர்களே இடைநிலை தொழிற்கல்வியிலும் சேர்ந்தனர்.
இதேபோல 1990ல் சீனாவில் எஞ்சினியரிங் பட்டதாரிகள் விகிதம் 36 சதவீதமாக இருந்தது. இது 2010ல் 26 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், இதே காலகட்டத்தில் இந்தியாவில் எஞ்சினிரியரிங் பட்டதாரிகள் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்தது. ஆனாலும் சீனாவைவிட இது குறைவு என்கிறது இந்த ஆய்வு.
வரலாற்று ரீதியாக சீனா எஞ்சினியரிங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு 1930களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவத்தில் கவனம் செலுத்த வழிவகுத்தது. 1940களில், சீனப் பட்டதாரிகளில் 20 சதவீதம் பேர் எஞ்சினியரிங் முடித்தவர்கள். அப்போது இந்தியாவில் வெறும் 3 சதவீதம் பேர்களே எஞ்சினியரிங் பட்டதாரிகளாக இருந்தனர். இந்தப் போக்கு பல தசாப்தங்களாக நீடிப்பதாகக் குறிப்பிடுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.இந்தியாவைவிட எஞ்சினியரிங் பட்டதாரிகளின் விகிதத்தை அதிகளவில் சீனா கொண்டுள்ளது. இதேபோல மருத்துவப் பட்டப்படிப்பிலும் அதிக விகிதத்தைக் கொண்டு விளங்குகிறது. இதுவே சீன பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு.
பேராச்சி கண்ணன்
|