அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.
உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1980லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். உஷாவும் ஜேடி வான்ஸும், கடந்த 2013ம் ஆண்டு யேல் சட்டப் பள்ளியில், ‘வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி’ என்ற விவாதக் குழுவில் முதன்முதலில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் சந்திப்புகள் தொடர, காதல் மலர்ந்திருக்கிறது.2014ம் ஆண்டில் கென்டக்கியில் அவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் உஷா சிலுக்குரி வான்ஸ், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்தத் தேர்தலில் ஜேடி வான்ஸ் வென்றதால், அமெரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத இரண்டாவது பெண்மணி ஆகியிருக்கிறார் உஷா.
அவரது உறவினர்கள் ஆந்திராவில் உள்ள சாய்பாபா, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மற்றும் தேவி பாலா சீதா கோயில்கள் போன்ற உள்ளூர் கோயில்களுக்கு நில நன்கொடைகள் வழங்கியதற்காக இன்றளவும் மதிக்கப்படுகின்றனர்.உஷாவின் கணவர் தேர்தலில் வென்றிருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக ஜேடி வான்ஸின் பெயரை முன்மொழிந்தபோதே அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன்.
இந்திரா காந்தி, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பெண்மணிகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இது உஷாவின் முறை. உஷாவும் அவர்களைப் போல் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.வான்ஸின் வெற்றியில் உஷாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்துடன் சட்டரீதியான பல விஷயங்களில் ட்ரம்புக்கும் உஷா உதவியாக இருந்துள்ளார். சட்டத் துறையில் கெட்டிக்காரியான உஷா, எங்கள் குடும்பத்துக்கும், இந்தியாவுக்கும் மேலும் பல பெருமைகளைச் சேர்ப்பார் என்று நம்புகிறேன்...” என்கிறார் உஷாவின் பாட்டி சிலிக்குரி சாந்தம்மா.இந்த சாந்தம்மாவும் லேசுப்பட்ட நபரல்ல. கைகளில் 2 வாக்கிங் ஸ்டிக்குகளுடன் ஆந்திராவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகளுக்கு தினமும் 60 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் சென்று வருகிறார்.
எதற்கு? சிகிச்சைக்கா? இல்லை. கற்பிக்க!
ஆம். சாந்தம்மா மருத்துவ இயற்பியல், கதிரியக்கவியல் & மயக்க மருந்து கற்பிக்கும் ஆசிரியை. வயது? அதிகமில்லை. வெறும் 96தான்! சாந்தம்மாவின் வழிகாட்டுதலின் கீழ், 17 மாணவர்கள் முனைவர் பட்டம் (பிஎச்.டி) முடித்துள்ளனர். பகவத் கீதையை ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். மட்டுமல்ல; விரிவான ஆராய்ச்சிப் பணிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார். யெஸ். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் மிக வயதான பேராசிரியை என்று பெயரைப் பதிவு செய்வதே சாந்தம்மாவின் நோக்கம்.
சரி? பாட்டி மட்டும்தான் இப்படியா?
இல்லை. உஷா சிலுக்குரியின் தாத்தா ராம சாஸ்திரியும் இப்படித்தான். கல்வியில் படா படா வஸ்தாதுதான். 1954ம் ஆண்டு ஐஐடி கரக்பூருக்கு ராம சாஸ்திரி என்ற உயரமான இளம் விரிவுரையாளர் வந்தபோது மாணவர்கள் கிண்டலாகத்தான் அவரை வரவேற்றனர். ஆங்கில உச்சரிப்பில் தெலுங்கு உச்சரிப்பு தூக்கலாக இருக்கும். இதுதான் ராம சாஸ்திரியின் அடையாளம். உச்சரிப்பு எப்படியிருந்தாலும் இயற்பியலில் மனிதர் கில்லாடி. எனவே, மாணவர்கள் ராம சாஸ்திரியின் வகுப்பைப் புறக்கணிப்பதே இல்லை.
மட்டுமல்ல; விரிவுரையாளர் பணியுடன் ஆசாத் மண்டபத்தின் வார்டனாகவும் பணியாற்றினார். அந்நேரத்தில் மெஸ் பில் உயர்ந்தபோது மாணவர்கள் கொந்தளித்தனர். விலைவாசி உயர்வை பக்குவமாக சுட்டிக்காட்டி மாணவர்களை ராம சாஸ்திரி அமைதிப்படுத்தியது இன்றும் பேசப்படும் விஷயம்.
பின்னர் ராம சாஸ்திரி ஒரு வருடத்திற்கு கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் உள்ள எம்ஐடிக்கு முனைவர் ஃபெல்லோஷிப்பில் அனுப்பப்பட்டார். இந்தியா திரும்பியபோது மனிதர் ஆளே மாறியிருந்தார். அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு செவிக்கு உணவளித்தது என்றால், அமெரிக்க உணவு அவரது உடலை கட்டுமஸ்தாக மாற்றியது! ராம சாஸ்திரி அறுபதுகளின் தொடக்கத்தில் ஐஐடி கரக்பூரில் இருந்து வெளியேறி, புதிதாக அமைக்கப்பட்ட ஐஐடி மெட்ராஸின் (சென்னையின்) இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஓய்வுபெறும் வரை நம் சென்னையில்தான் பேராசிரியராக பணியாற்றினார். ராம சாஸ்திரியின் மகன் - அதாவது உஷா சிலுக்குரியின் தந்தை - கிரிஷ், 1977ல் ஐஐடி மெட்ராஸில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், பின்னர், 1980களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து இப்போது சான் டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் விரிவுரையாளராக உள்ளார்.
உஷா சிலுக்குரி பிறந்தது அமெரிக்காவில்தான். யேல் பல்கலைக்கழகத்தில் உஷா சிலுக்குரி பட்டம் பெற்றார், கேம்பிரிட்ஜில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் யேலில் உள்ள சட்டப் பள்ளியில் பயின்றார். அங்குதான் ஜேடி வான்ஸை சந்தித்தார். காதலித்தார். மணந்து கொண்டார். இன்று அமெரிக்காவின் துணை அதிபரின் மனைவியாக கெத்து காட்டுகிறார்.
என்.ஆனந்தி
|