லக்னோ லட்சாதிபதி BLOODY BEGGARS



* ஒரு நாள் வருமானம் ரூ.3 ஆயிரம்...
* சொந்த வீடு, ஸ்மார்ட் போன், பேன் கார்டு... எல்லாம் இவர்களிடம் உண்டு...
* லக்னோ மக்கள் தினந்தோறும் ரூ.63 லட்சம் தானம் செய்கிறார்கள்...

உண்மையில் இப்படியொரு தகவலை எவராலும் நம்பமுடியாது. ஆனால், ஆய்வின் வழியே தெரிய வந்துள்ள தகவல் இது. அதுவும் அரசு நிர்வாகமே செய்த ஆய்வு. அதனால், பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் பிச்சைக்காரர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்பதுதான் அந்தத் தகவல். அதுமட்டுமல்ல. இவர்களில் பலர் ஸ்மார்ட்போன்களும், பேன் கார்டுகளும் வைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.  

இதுதவிர, இதில் குறைந்த சதவீதத்தினரே தேவைக்காக பிச்சையெடுப்பதாகவும், மற்றவர்கள் இதை ஒரு தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வின் வழியே தெரிய வந்துள்ளது.
வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களைவிட இவர்கள் அதிகமாக சம்பாதிப்பதாகச் சொல்கின்றனர் அதிகாரிகள். ‘நாம் உதவி செய்யும் பிச்சைக்காரர், ஏழை மற்றும் ஆதரவற்றவர் என்று நினைக்கலாம். ஆனால், அவர் நம்மைவிட பணக்காரர் என்பதே உண்மை’ என்கின்றன அங்கிருந்து வரும் செய்திகள்.

இந்தியாவில் மிகப்பெரிய கலாசாரமும் பாரம்பரியமும் கொண்ட ஒரு நகரம் லக்னோ. அந்தக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தக்கவைக்கும்பொருட்டு நகரில் பிச்சையெடுப்பதைத் தடுக்கவும், எதற்காக பிச்சையெடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்யவும் அரசுத் துறைகள் இந்த ஆய்வினைச் செய்ய முடிவெடுத்தன. குறிப்பாக லக்னோவின் மாநகராட்சியும், சமூக நலத்துறையும், மாவட்ட நகர்ப்புற வளர்ச்சி முகமையும் கூட்டாக இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்தன.

இதில், லக்னோவில் வசிக்கும் மற்றும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுமார் 5 ஆயிரத்து 312 பிச்சைக்காரர்களை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்களிடம் சாதாரணமாகப் பேசி ஆய்வினை மேற்கொண்டனர்.இந்த ஆய்வானது அவர்களின் நிதி சம்பந்தப்பட்டது மட்டுமில்லாமல் பின்புலம் மற்றும் பிச்சையெடுப்பதற்கான காரணம் உள்ளிட்டவையும் சேர்த்து செய்யப்பட்டது.    

அதாவது, பிச்சை எடுப்பதன் வழியாக என்ன வருமானம் வருகிறது என்பதை மதிப்பிட்டு, பின்னர் அவர்களை அரசாங்க நலத்திட்டங்களுடன் இணைத்து பிரதான சமூகத்துடன் ஒருங்கிணைப்பதும், பிச்சையெடுப்பவர்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டைகள் வழங்கி உதவிகளைத் தொடரவும் இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. இதில் வருமான மதிப்பிடுதலில்தான் இந்த ஆச்சரியத் தகவல் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பிச்சையெடுக்கும் கர்ப்பிணிப் பெண்கள், மக்களின் அனுதாபத்தைப் பெறுவதால் அவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

அப்படியாக பலர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கின்றனர். 

இவர்களுடன் வயதானவர்களும், குழந்தைகளும் நாள் ஒன்றுக்கு ரூ.900 முதல் ரூ.2,000 வரை பணம்ஈட்டுகின்றனர். சராசரியாக லக்னோவில் ஒரு பிச்சைக்காரர் நாள் ஒன்றுக்கு 1,200 ரூபாய் வரை சம்பாதிப்பதாகச் சொல்கின்றனர் அதிகாரிகள்.

இதுதவிர, பெரும்பாலான பிச்சைக்காரர்களுக்கு இலவச உணவு, துணிமணி, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை மக்களிடம் இருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடம் இருந்தும் கிடைக்கின்றன. 

இது அவர்களின் செலவுகளைக் குறைப்பதால் பிச்சையெடுக்கும் பணத்தைச் சேமிக்கின்றனர்.இதுமட்டுமல்ல. இந்த ஆய்வில் தெரிய வந்த மேலும் சில தகவல்கள் இன்னும் வியப்பை ஏற்படுத்துபவை. ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் அதிகாரிகள் பேசியபோது, அவர் கர்ப்பிணியாக இருந்ததால்தான் நிறைய சம்பாதிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார்.

இதுவே தனக்கு அனுதாபத்துடன் ஒருவரை பிச்சை அளிக்க வைக்கிறது என்றும், இதற்காக ஆறு குழந்தைகளை, தான் பெற்றதாகவும், தற்போது ஏழாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  லக்னோவிற்கு பிச்சையெடுக்க ஹர்தோய், பாராபங்கி, சீதாபூர், உன்னாவ் மற்றும் ரேபரேலி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பலர் வருவதாகத் தெரிய வந்துள்ளது. இவர்களில் பலருக்கு அவர்கள் கிராமங்களில் சொந்த வீடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒட்டுமொத்த லக்னோ மக்களும் தினமும் சுமார் 63 லட்சம் ரூபாய் வரை தானம் செய்வதாக மதிப்பிட்டுள்ளனர் ஆய்வு நடத்திய அதிகாரிகள். இந்த எண்ணிக்கை முறைசாரா பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பணப்புழக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்கின்றனர் அவர்கள். 

 தற்போது அதிகாரிகள் பிச்சை எடுப்பதை ஒழிக்க, பிச்சைக்காரர்களை ஆவணப்படுத்தி அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதனுடன் சமூக நல அமைப்புகள் பிச்சைக்காரர்களுக்குக் கல்வியும், திறன் பயிற்சியும் அளித்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பேராச்சி கண்ணன்